விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி*  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்* 
  தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
  பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்*  தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி- 
  வாங்கக்*  குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்*  நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (2)       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓங்கி - (மஹாபலி வார்த்த நீர் கையில் விழுந்தவாறே) ஆகாசத்தளவும் வளர்ந்து;
உலகு - (மூன்று) லோகங்களையும்;
அளந்த - (திருவடிகளாலே தாவி) அளந்துகொண்ட;
உத்தமன் - புருஷோத்தமனுடைய;
பேர் - திருநாமங்களை;

விளக்க உரை

உலகத்தில் சுவர்க்கத்தை முக்கியமான பேறாகக்கொண்டு ஜ்யோதிஷ்டோமயாகஞ் செய்பவற்கு, ஆயுஸ்ஸு, ஸந்தாநம் என்று சில அவாந்தரபலங்களும் உடன் கூடும்; இவ்வாயர் மங்கைகள் எம்பெருமானையே எல்லாவகைப் பயனாகவும் உள்ளத்துக் கொண்டுள்ளவர்களாதலால் அவ்வெம்பெருமானொழிய வேறொருபயனையும் விரும்பமாட்டார்கள்; ஆயினும் இவர்கள் விரும்ப வேண்டுவதொன்றுண்டு; அதாவது தாங்கள் நோன்பு நோற்குமாறு அநுமதி அளித்தவர்கட்குச் சில ஸம்ருத்திகளை ஆசாஸிக்கை. ஆஃது இப்பாட்டிற்செல்லும். யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே - ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்குமென்னா நின்றால் இத்தனை மஹாநுபாவைகளிருக்கும் நாடு ஸம்ருத்தமாகச் சொல்லவேண்டாவே. முதற் பாட்டில் “நாராயணனே” என்பதனால் எம்பெருமானுடைய உபய விபூதி நாதத்வஞ் சொல்லப்பட்டது; இரண்டாம் பாட்டில், “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன்” என்பதனால் அவதாரார்த்தமாகத் திருப்பாற்கடலில் வந்து சாய்ந்தபடி சொல்லப்பட்டது. இப்பாட்டில் “ஓங்கியுலகளந்த உத்தமன்” என்பதனால் அவதரித்தருளினபடி சொல்லப்பட்டது. உலகங்களைக் காப்பதற்காகத் திருப்பாற்கடலிற் சாய்ந்தபோது ஆர்த்தரக்ஷணம் பண்ணப்பெறாமையாலே எம்பெருமான் பனிப்பட்டுச் சாய்ந்த மூங்கில் போலக்குன்றி, அம்மூங்கில் இரவியின் கதிர்படக் கிளம்புமாறுபோல இவனும் மாவலிவார்த்த நீர் கையிற் பட்டவாறே கிளம்பினபடியைக் கூறுவது “ஓங்கியுலகலந்த” என்பது. மஹாபலியென்னும் அஸுரராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவணயும் வென்று மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்து வெண்ட, அப்பெருமான் குள்ளவடிவான வாமநாவதாரங்கொண்டு அம்மாவலியினிடஞ் சென்று தன் காலடியால் மூவடி மண் வேண்டி அது கொடுத்தற்கு அவன் இசைந்தவுடனே திரி விக்கிரமனாய் ஆகாசத்தை அளாவி வளர்ந்து ஓரடியாற் பூலோகத்தையும், மற்றோரடியால் மேலுலகத்தையும் அளந்து மூன்றாமடிக்காக அவன் முடியிற் காலை வைத்து அவனைப் பாதாளத்திலழுத்தி யடக்கின வரலாற்றை உணர்க. “இவன் இன்று செல்வனாயினன்” என்றால், நேற்றுவரை தரித்ரனாயிருந்தமை தன்னடையே விளங்குவதுபோல், இங்கு “ஓங்கி உலகளந்த” என்றமயால், கீழ் வாமநனாயிருந்தமை தன்னடையே போதருமென்க. இங்கு, உத்தமன் என்றதற்குக் கருத்து யாதெனில், அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்று உலகில் பிராணிகள் நால் வகைப்பட்டிருப்பார்கள்; பிறரை நலிந்து தன் வயிறு வளர்ப்பவன் அதமாதவன்; பிறரும் வாழ்ந்தால் வாழட்டு மென்றிருப்பவன் அதமன்; பிறரும் வாழ வேணும், நாமும் வாழவேணுமென்றிருப்பவன் மத்யமன்; தான் கெட்டும் பிறரை வாழ்விக்குமவன் உத்தமன். (தானுங்கெட்டுப் பிறரையுங் கெடுப்பவனுடைய வகுப்பு அறிவரிது) எம்பெருமான் தன் வடிவைக் குறுகச் செய்வதும், பிறர்பாற் சென்று இரப்பதுமாகிய கேடுகளைத் தானடைந்தும் இந்திரன் முதலிய தேவர்களை வாழ்வித்தமை பற்றி, இங்கு உத்தமனாகக் கூறப்பட்டனனென்க.

English Translation

Praise him who measured the three worlds in two strides; our winter’s vow will bring joy to us. The monsoons shall not fail this fertile land, but bring forth golden heads of paddy. In the still waters where seedlings are planted, tiny fish will jump and dance enchanted. Lotus buds will sway and rock the dreamy bees to sleep. The udders of our cows so grand shall scarce be held in our milking hand. Abiding wealth shall be ours, come!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்