விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வினையால் அடர்ப்படார்*  வெம்நரகில் சேரார்,* 
  தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்,* - நினைதற்கு-
  அரியானை*  சேயானை,*  ஆயிரம்பேர்ச் செங்கண்-
  கரியானைக்*  கைதொழுதக் கால்  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வினையால் - நல்வினை தீவினைகளால்
அடர்ப்படார் - நெருக்குபடமாட்டார்கள்;
வெம் நரகில் - கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார் - (மீண்டும்) சென்று கிட்டமாட்டார்கள்;
தினையேனும் - சிறிதளவும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச்செய்தார். இப்படிப்பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க; இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாகக்குடியதே ; எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறார் இப்பாட்டில். வினையால் அடர்ப்படார்= ‘வினை’ என்னும் பொதுச்சொல்லானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்; உபநிஷத்தில் [முமுக்ஷு மோக்ஷத்துக்குப் போம் போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக் கல்மஷமற்றவனாய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றான்] என்று ஓதிவைத்திருக்கையாலே மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூறோ அப்படி புண்யமும் இடையூறென்பது நூற்கொள்கை. பாபம் நரகத்திலே கொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டு தள்ளும்; ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும் புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு. இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு- இங்கே யநுபவிக்க நேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள் என்று பொருள்கொள்வதும் பொருந்தும். வெம் நரகில் சேரார்=[ எம்பெருமானோடு கூடியிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம் ] என்று ஸ்ரீராமயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகாநுபவம் பண்ணமாட்டார்களென்கை.

English Translation

Karmas will not accrue on them, hell will not be their destiny, not the slightest pain will attend on them, -who worship with folded hands, the dark-hued lotus-eyed Lord afar. The Lord beyond the comprehension of the world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்