- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
தலைமகன் தன்பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என்பக்கலிலுள் ளவை யெல்லாவற்றையுங் கொள்ளைகொண்டு போயினானென்கிறாள். மின்னிலங்கு திருவரங்கம் = மின்போலே விளங்காநின்றுள்ள திருமேனியை முதலிலே காட்டினாரென்கிறாள். “கார்வண்ணந் திருமேனி“ என்றும் “கருமுகிலேயொப்பர்வண்ணம்“ என்றும் “முகிலுருவமெம்மடிகளுருவந்தானே“ என்றுங்கீழே சொல்லியிருக்க, இங்கே ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது என்னனெனில்; ஔதார்யத்திற்கும் விடாய்தீர்க்குந் தன்மைக்கும் மேகத்தை ஒப்புச் சொல்லிற்றுக்கீழ்; எதிர்விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது. ஆனாலும் காளமேகத்தின் நிறமேயன்றோ வடிவின்நிறமென்னில்; திருவாழியாழ்வானுடைய புகர் திருமேனியெங்கும் பரவியிருக்கையாலே இங்ஙனே சொல்லக் குறையில்லை யென்க. அருணகிரணத்தாலே திருப்பல்லாண்டும் நோக்குக. “ஒருகையிற்சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயரிங்கேவந்து“ என்று கீழே சொல்லிற்றும் இங்கே நினைக்கத்தக்கது. பெரிய மேன்மையைக் காட்டினமை சொல்லிற்றாயிற்று. பெரியதோளும் = காலமுள்ளதனையும் அனுபவித்தாலும் வேறொரு அவயவத்தில் போகவொட்டாதபடி துவக்கவல்ல அளவிறந்த போக்யதை வாய்ந்த திருத்தோள்கள். “தோள் கண்டார்தோளே கண்டார்“ என்னும்படியானவை. ஆகவே, பெரிய என்று போக்யதையிலுள்ள பெருமையைச் சொன்னபடி. இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம். கரிமுனிந்த கைத்தலமும் = கம்ஸனால் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீட மென்கிற யானையைத் தொலைத்த மிடுக்க விளங்கநின்ற திருக்கைகள். ஒரு விசேஷணமிட வேண்டாதே இயற்கையாகவே பரமபேக்யமா யிருந்துள்ள கண்ணும் வாயும். (தன்னலர்ந்த நறுந்துழாய் இத்யாதி) தன்னிலத்திற் காட்டிலும் செவ்விபெற்று நறுமணம்மிக்க திருத்துழாய் வளையத்தினருகே திருத்தோளளவுந் தாழ்ந்து விளங்குகின்ற மகரகுண்டலங்களும், ஆக இவற்றையெல்லாம் ஸேவைஸாதிப்பித்து. (என்னலனு மென்னிறைவு மென்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு) ஸர்வஸ்வதானம் பண்ணுவாரைப்போலே வந்து ஸர்வஸ்வத்தையுங் கொள்ளை கொண்டார் என்கிறாள். நலன் – நலம்; மகரனகரப்போலி. குணம் என்றபடி. நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற ஆத்ம குணங்களையும், அழகு மென்மை முதலிய தேஹகுணங்களையும் சொன்னபடி. (நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கிநிற்பது. மடமாவது, எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல். அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல். பயிர்ப்பாவது, பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.) ஆக இக்குணங்களையும் அழகு முதலியவற்றையுங் கொள்ளை கொண்டாரென்றது, வைவர்ணியப்படுத்தி வாய்பிதற்றச் செய்தாரென்றபடி. “என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே ‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என்சிந்தையும் என்வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்; இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க, என்னுடையவற்றை அவர் கொள்ளைகொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி. என்னையாளுங்கொண்டு = என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக்கொண்டு போன மாத்திரமேயோ? அவற்றைச் சுமந்துகொண்டு போவதற்கு. ஆளாகவும் என்னையே அமைத்துக் கொண்டபடி என்னே! என்கிறாள். ஒருவனுடைய வீட்டிலே கொள்ளைகொள்ளப் புகுந்து ஸர்வஸ்வத்தையும் பறித்து அவற்றை அந்த வீட்டுக்குடையவனது தலையிலேயே வைத்துச் சுமக்கச் செய்து கொண்டுபோமாபோலே யிருந்ததீ! என்கிறாள். அன்றியே, “கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல்“ என்கிறபடியே அவரோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தையே அடிமையாக நினைத்திருக்கையாலே அதனைச் சொன்னபடியுமாம். இங்ஙனே மறுபடியும் ஒருகால் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் இருக்கவேணுமே; முதலே போய்விட்டால் பின்னையுங் கொள்ளை கொள்வதற்கு இடமில்லைபாகுமே. ‘உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று – போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்திவைப்பது மேன்மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று. அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி – (நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்; பொன்போலேயலர்ந்து பரிமளம் மிக்கிருந்துள்ள பூவையுடைய ஸுரபுன்னபை் பொழிலினூடே உபயகாவேரீ மத்தியத்திலுள்ள திருவரங்கம் பெரிய கோயில் நம்மூர் என்று சொல்லிக்கொண்டே போயினார் என்கிறாள். இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;- “திருநகரியில் நின்றும் கோயிலளவுஞ் செல்லப் பொழிலாய்க்கிடந்ததோ வென்னில்; ஒரு காளமேகம் வர்ஷித்துக்கொண்டு போகாநின்றால் கண்டவிடமெங்கும் தளிரும் முறியுமாகாதோ? என்று பட்டாருளிச் செய்வர்“ என்று. முற்காலத்தில், விக்ரமசோழதேவன் என்பானொரு அரசன் தமிழில் ரஸிகனாயிருந்தான்; அவனது ஸபையில் வைஷ்ணவ பண்டிதர்களும் சைவபண்டிதர்களும் அடிக்கடி செல்லுவதுண்டு; ஒருகால் இருசமயத்து வித்வான்களும் கூடியிருந்தபோது அவ்வரசன் “தலைமகன் பிரிந்தபோது தலைவி இன்னாப்போடே சொல்லும் பாசுரம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லுங்கள், கேட்போம்‘ என்று இரு வகுப்பினரையுங் கேட்க, ஸ்ரீவைஷ்ணவ வித்வான் “மின்னலங்கு திருவுருவம் பெரியதோளும்“ என்று தொடங்கி இப்பாசுரத்தை யெடுத்துச் சொன்னார்; சைவ வித்வான் “எலும்பஞ்சாம்பலு முடையவனிறைவன்“ என்று தொடங்கி ஒரு செய்யுளைச் சொன்னான்; இரண்டையுங் கேட்டு அரசன் ‘நெஞ்சில் கிலாய்ப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திருவுருவும் என்று நெஞ்சு பிணிப்புண்ணுமாறு சொன்னவளே உண்மையில் தலைமையுடையவள்; மற்றொருத்தி பிணந்தின்னி‘ என்றானாம்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்