விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குன்றம் எடுத்து*  ஆநிரை காத்தவன் தன்னை,* 
    மன்றில் புகழ்*  மங்கை மன் கலிகன்றி சொல்,*
    ஒன்று நின்ற ஒன்பதும்*  வல்லவர்-தம்மேல்,* 
    என்றும் வினைஆயின*  சாரகில்லாவே,    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆ நிரை – பசுக்கூட்டத்தை
காத்தவன் தன்னை – பாதுகாத்தவனான எம்பெருமானைக்குறித்து
மன்றில் புகழ் – சபைகளில் புகழப்படுவராய்
மங்கை மன் – திருமங்கை நாட்டுக்குத் தலைவரான
கலிகன்றி – ஆழ்வார்

விளக்க உரை

இரண்டாமடியில் ‘மன்றில்புகழ் புகழ்’ என்ற பழையபாடம் மறைந்துபோய் ‘மன்றில் மலி புகழ்’ என்ற புதிய பாடமே எங்கும் பரவிநின்றாலும் அது பெரியோர்க்கு உடன் பாடன்று. இத்திருமொழியில் நேரசை முதலான பரசுரங்கள் தோறும் ஒவ்வோரடியும் ஒற்றொழித்துப் பன்னிரண்டெழுத்தும், நிரையசைமுதலான பரசுரங்கள்தோறும் ஒவ்வொரடியும் ஒற்றொழித்துப் பதின்மூன்றெழுத்தும் அமைந்துள்ள வென்பதைக் கண்டறிந்தால் இப்பாட்டில் ‘மலி’ என்பது அதிகப்படியான பாடமென்று எளிதிற் புலனாகும். மன்று-பலர்கூடும் வெளியுமாம். சிலரேனும் கூடுமிடங்களிலெல்லாம் அவர்களனைவராலும் பாராட்டிப் பேசப்படுகின்றது ஆழ்வாருடைய கீர்த்தி யென்றபடி. முன்பு ஐம்புலன் வழிச் சென்றிருந்தமை தவிர்த்து பின்பு எம்பெருமானைச் சரணமடைந்து அவனருளைப் பெற்றதனாலாகிய தமது புகழையே இங்ஙனம் பாராட்டிக் கூறினராதலால் இது தற்புகழ்ச்சிக் குற்றத்தின் பாற்படாது. ஓன்று நின்ற ஒன்பது-ஒன்றோடு கூடுநின்ற ஒன்பது. ஒன்றும், நின்ற ஒன்பதும் என்று பிரித்தலுமாம். (மங்கைமன் கலிகன்றிசொல் ஒன்று நின்ற வொன்பதும்) அரசாட்சிச் செருக்குடையரா யிருந்தவர் அச்செருக்கு ஒழிந்து தமது குற்றங்குறைகள் மாத்திரமே யன்றி உலகத்தாரது கலிதோஷத்தையுங் கடியுமாறு அருளிச்செய்த திருமொழி. நல்வினையும் பிறப்பிற்குக் காரணமாதலால் அதனையும் உட்படுத்தி ‘வினையாயின சாரகில்லர்’ என்றார். “இருள் சோரிருவினையுஞ்சோர இறைவன் பொருள்சேர்புகழ்புரிந்தர்மாட்டு” என்றார் திருவள்ளுவரும். (வினையாயின சாரகில்லா) அவர்கள் இருவினையும் அற்றுப் பிறவித் துயரகல வீடு பெறுவரென்றபடி. இத்திருமொழி வல்லவர் எம்பெருமானருளாற் பரமபதமடையரென்ற கருத்தை ‘வல்லவர்தம்மேல் என்றும் வினையாயின சாரகில்லாவே’ என்று எதிர்மறை முகத்தால் நன்கு விளக்கினார். ஆடியவரான தமது பிறப்பைத் தவிர்த்தருளவேணுமென்று எம்பெருமான் பக்கல் விண்ணப்பஞ்செய்து அவனை அதற்கு இணங்கும்படி செய்த திருமொழி யாதலால், இதனை ஓதியுணர்பவர்க்கும் வினைசாராவென்று பயன் கூறினார். விளக்கின்முன் இருள்போலவும் காட்டுத்தீயின்முன் பஞ்சுத்திரள்போலவும் இத்திருமொழி யோதுதலாகிற ஞானத்துக்குமுன் வினைகள் இருந்த இடமுந் தெரியாதபடி அழிந்திடுமென்றவாறு.

English Translation

This garland of ten songs by famous-of the-crossroads-Mangaiking Kalikanri is praise for the Lord who lifted a mount and saved the cows. Those who master it will never gather Karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்