திவ்யதேச பாசுரங்கள்

    192.   
    இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
    மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*
    சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
    அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)

        விளக்கம்  


    • சந்திர மண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மாளிகைகள் நிறையப்பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர் மலிந்திருக்கப்பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளியிருப்பவனே!, எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ரபுஷ்பங் கொண்டுவந்து மறைந்துநிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று. உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம். பகவத் ஸ்தோத்ரமாகிய வேதமந்திரங்களைச் சொல்லிக்கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் கையிலேந்தியுள்ள மலர் மந்திரமலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை.


    193.   
    கன்றுகள் இல்லம் புகுந்து*  கதறுகின்ற பசு எல்லாம்*
    நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*  நேசமேல் ஒன்றும் இலாதாய்!*
    மன்றில் நில்லேல் அந்திப் போது*  மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
    நன்று கண்டாய் என்தன் சொல்லு*  நான் உன்னைக் காப்பிட வாராய் 

        விளக்கம்  


    • பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ளவிடத்தில் வந்து சேர்ந்தபின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப்பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து. ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலையுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பேநின்று கொண்டு கன்றுகள் முலையூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக்கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம். ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச்சொல்லாகவுங் கொள்வர். நேசம் - ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம்.


    194.   
    செப்பு ஓது மென்முலையார்கள்*  சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
    அப்போது நான் உரப்பப் போய்*  அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 
    முப் போதும் வானவர் ஏத்தும்*  முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
    இப்போது நான் ஒன்றும் செய்யேன்*  எம்பிரான் காப்பிட வாராய்!

        விளக்கம்  


    • சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப்பெண்களோடே வலிவிற் சண்டையிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோவென்று அஞ்சி நீ ஓடிப்போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள். ஆள்வாய்! - என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு. முப்போது - இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம்.


    195.   
    கண்ணில் மணல்கொடு தூவிக்*  காலினால் பாய்ந்தனை என்று என்று* 
    எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்* 
    கண்ணனே!  வெள்ளறை நின்றாய்!*  கண்டாரொடே தீமை செய்வாய்! 
    வண்ணமே வேலையது ஒப்பாய்!*  வள்ளலே! காப்பிட வாராய்        

        விளக்கம்  


    • ‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும், நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்; ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள். கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல் யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு. ‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது - நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது உனது வடிவழகு என்றபடி. வேலையது = அது - முதல் வேற்றுமைச் சொல்லுருபு.


    196.   
    பல்லாயிரவர் இவ் ஊரில்*  பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது*  எம்பிரான்!  நீ இங்கே வாராய்* 
    நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*  ஞானச் சுடரே!  உன்மேனி*
    சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்*  சொப்படக் காப்பிட வாராய்  

        விளக்கம்  


    • பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு; அப்படியிருக்கவும், அவர்கள் தாம்தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள். ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம். எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம்ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார். எல்லாம் போகாது - ஒருமைப் பன்மை மயக்கம்.


    197.   
    கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*  கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
    வஞ்சிப்பதற்கு விடுத்தான்*  என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 
    மஞ்சு தவழ் மணி மாட*  மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
    அஞ்சுவன் நீ அங்கு நிற்க*  அழகனே!  காப்பிட வாராய்

        விளக்கம்  


    • கம்ஸன் ஆகாசவாணி சொன்னதைக் கேட்டதுமுதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப்போது அழித்து வருகையில் உனது யோகநித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்றபோது அக்கன்னிகை ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய் உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய்மகளாகிய பூதனையை ஏவினானென்று லோகப்ரவாதமிருக்கிறது; ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக்கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது; ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம்.


    198.   
    கள்ளச் சகடும் மருதும்*  கலக்கு அழிய உதைசெய்த* 
    பிள்ளையரசே!*  நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 
    உள்ளவாறு ஒன்றும் அறியேன்*  ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
    பள்ளிகொள் போது இது ஆகும்*  பரமனே!  காப்பிட வாராய்   

        விளக்கம்  


    • ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப்போகிறதில்லை யென்கிறாள்.


    199.   
    இன்பம் அதனை உயர்த்தாய்!*  இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
    கும்பக் களிறு அட்ட கோவே!*  கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 
    செம்பொன் மதில் வெள்ளறையாய்!*  செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
    கம்பக் கபாலி காண் அங்கு*  கடிது ஓடிக் காப்பிட வாராய்     

        விளக்கம்  


    • அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தைவிட்டு நான் காப்பிடும்படி விரைந்து வரவேணுமென்பதாம். கபாலி - ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சையெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.


    200.   
    இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு*  எழில் மறையோர் வந்து நின்றார்* 
    தருக்கேல் நம்பி!  சந்தி நின்று*  தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 
    திருக்காப்பு நான் உன்னைச் சாத்த*  தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*  இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் 

        விளக்கம்  


    • “உனக்கு ரக்ஷையிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப்போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷையிடும்படி வராவிட்டாலும் நாற்சந்தியிலே செருக்குடன் விளையாடித்திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும். தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷையிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தைவிட்டு வரவேணும், என்கிறாள். இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது.


    201.   
    போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
    மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 
    வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
    பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)

        விளக்கம்  


    • ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத்துணை மஹிமை கூறியமுகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்லமுடியாதென்பதைக் கைமுதிகந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.) ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக்கொள்ளக்கடவ பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம். அடிவரவு:- இந்திரன் கன்று செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பம் இருக்கு போதமர் வெண்ணெய்.


    1851.   
    துளக்கம்இல் சுடரை*  அவுணன்உடல்-
    பிளக்கும் மைந்தனைப்*  பேரில் வணங்கிப்போய்*
    அளப்புஇல் ஆர்அமுதை*  அமரர்க்கு அருள்-
    விளக்கினைச்*  சென்று வெள்ளறைக் காண்டுமே.

        விளக்கம்  



    1368.   
    வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
    கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*
    மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
    தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.

        விளக்கம்  


    • இத்திருமொழியில் பாசுரங்கள் தோறும் ‘அருள் புரியே’ என்று அருளைவேண்டுகின்றார்; பிரானே! உனது திருவடித் தாமரைகளில் எனக்குப் பரிபூர்ணமான பக்திப்பெருங்காதல் உண்டாகும்படியும் உனக்கு நான் அத்தாணிச் சேவகஞ் செய்து கொண்டு போது போக்கும்படியும் கிருபை பண்ணியருளவேணு மென்று பிரார்த்தித்தல் இத்திருமொழியின் ப்ரமேயம். வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை; (அறை – பாறை.) இத்தலம், வடமொழியில் ‘ச்வேதாத்ரி’ எனப்படும்.


    1369.   
    வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
    இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*
    உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
    திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          

        விளக்கம்  



    1370.   
    வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்*  உடலகம் இரு பிளவாக்* 
    கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!*  எனக்கு அருள்புரியே,
    மையின் ஆர்தரு வரால் இனம் பாய*  வண்தடத்திடைக் கமலங்கள்*
    தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.

        விளக்கம்  



    1371.   
    வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக*  ஐவர்கட்கு அரசு அளித்த* 
    காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!*  நின் காதலை அருள் எனக்கு*
    மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்*  வாய்அது துவர்ப்பு எய்த* 
    தீம் பலங்கனித் தேன் அது நுகர்*  திருவெள்ளறை நின்றானே. 

        விளக்கம்  


    • (மாம்பொழில் இத்யாதி.) மாஞ்சோலையிலே போய்ப்புகுந்து அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அத்துவர்ப்பை வேறு ரஸத்தாலே மாற்றவேண்டி இனிய பலாப்பழத்திலே சென்று வாய்வைக்கின்றதாம். காவ்ய நாடகாதிகளிலும் பாஹ்யாகமங்களிலும் வாய்வைத்துக் கசத்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவதநுபவம் செய்து களிக்கின்றமை கூறியவாறு.


    1372.   
    மான வேல் ஒண் கண் மடவரல்*  மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்* 
    ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!*  எனக்கு அருள்புரியே*
    கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி*  வெண்முறுவல் செய்து அலர்கின்ற* 
    தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்*  திருவெள்ளறை நின்றானே.

        விளக்கம்  



    1373.   
    பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ*  அமுதினைக் கொடுத்தளிப்பான்* 
    அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!*  நின் அடிமையை அருள் எனக்கு*
    தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்*  தையலார் குழல் அணைவான்* 
    திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை*  திருவெள்ளறை நின்றானே. 

        விளக்கம்  


    • (தங்குபேடையோடு இத்யாதி.) வண்டுகள் ஆணும் பெண்ணுமாய்ப் பூவிலே படுத்திருந்தன; தம்பதிகளுக்குப் பிரணயகலஹம் இயற்கையாகையாலே ஊடல் உண்டாயிற்று; உடனே ஆண்வண்டானது பேடைக்குத் தெரியாததோரிடந்தேடி மறையவேணும் என்றெண்ணி ஸ்த்ரீகளினுடைய கூந்தலிலே மறையக்கோலி, சந்திர மண்டலத்தளவுஞ் சென்றோங்கின சிகரத்தையுடைய மாடங்களிலே சென்றணைகின்றதாம் திருவெள்ளறையில்.


    1374.   
    ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  அரக்கன் தன் சிரம் எல்லாம்* 
    வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*
    மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  தாமரை மலர் வார்ந்த* 
    தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.

        விளக்கம்  



    1375.   
    முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி*  இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த* 
    அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,
    மன்னு கேதகை சூதகம் என்று இவை*  வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 
    தென்ன என்ன வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.      

        விளக்கம்  


    • சுரும்பு என்பதும் வண்டு என்பதும் பரியாயமென்று பலர் நினைத்திருப்பதுண்டு: பரியாயமென்று கொள்ளலாமாயினும் ஜாதிபேதமுண்டு. இதனை யறியாமல், இப்பாட்டில் மூன்றாமடியில் ‘சுரும்பினங்கள்’ என்று வந்திருக்க, மீண்டும் நான்காமடியில் ‘வண்டு’ என வருவது ஒவ்வாதென்றெண்ணிச் சிலர் பாடத்தை மாறுபடுத்தினர் – “தென்னதென்னவென்றின்னிசை முரல்” எனத் திருத்தினர். அதுவேண்டா; “தென்னவென்ன, வண்டின்னிசை முரல்” என்ற ஆன்றோர்பாடமே கொள்ளத்தக்கது. சுரும்பு சாதி வேறு, வண்டுசாதிவேறு என்க. கீழ் (5-1-1) “அறிவதரியான்” என்ற பாட்டில் “நறிய மலர்மேல் சுரும்பாதுக்க…சிறை வண்டிசைபாடும்” என வந்ததும் குறிக்கொள்ளத்தக்கது. கேதகை, சூதகம் - வடசொல் விகாரங்கள்


    1376.   
    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல்இடம் முழுதினையும்* 
    பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்*  எனக்கு அருள்புரியே,* 
    ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி*  வண்டு உழிதர*  மாஏறித்
    தீம் குயில் மிழற்றும் படப்பைத்*  திருவெள்ளறை நின்றானே.

        விளக்கம்  


    • (ஓங்குபிண்டியின் இத்யாதி.) ‘பிண்டி’ என்று அசோகமரத்துக்குப் பெயர். ஆகாசாவதாசம் வெளியடையும்படி வளர்ந்த அசோகமரம் செக்கச்செவேலென்று பூத்த பூக்களினால் நிறைந்திருக்கின்றது; அப்புஷ்பங்களை வண்டுகள் பார்த்து ‘இவை மலர்களல்ல, நெருப்பாம்’ என மயங்கி அங்குச்செல்ல அஞ்சிச் சிலசமயங்களில் ஒதுங்கித் திரியும். (கீழ் முதற்பத்தில் (1-2-9) “தாதுமல்கிய பிண்டி விணடலர்கின்ற தழல்புரையெழில் நோக்கிப் பேதை வண்டுகள் எரியெனவெருவரு பிரிதிசென்றடை நெஞ்சே!” என்ற பாசுரமும் அவ்விடத்து உரையும் நோக்கத்தக்கது. அசோகமலர்களை அக்நியாக ப்ரமித்து அஞ்சி அப்பால் செல்லும் இயல்வினவான வண்டுகள் சில ஸமயங்களில் அந்த ப்ரமம்நீங்கி ‘இவை மலர்களே’ என்று துணிந்து அவற்றிலே மதுவுண்ணச்செல்வது முண்டாகையாலே, அப்படி அவை மதுவுண்ண அசோக மலர்களில் ஏறியிருப்பதைக் கண்டு அருகே மாமரங்களிலுள்ள குயில்கள் ‘அந்தோ! இவ்வண்டுகள் நெருப்பிலே அகப்பட்டனவே!’ என்று பரிதாபந் தோற்ற அநக்ஷராஸமாகக் கூப்பிடுகின்றனபோலும். இப்படிப்பட்ட சோலைகளினாற் சூழப்பெற்றது திருவெள்ளறை.


    1377.   
    மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
    அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*
    நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
    எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 

        விளக்கம்