திவ்யதேச பாசுரங்கள்

  1438.   
  தீது அறு நிலத்தொடு எரி காலினொடு*  நீர் கெழு விசும்பும் அவை ஆய்* 
  மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை*  அவை ஆய பெருமான்* 
  தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு*  தட மார்வர் தகைசேர்* 
  நாதன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   (2)

      விளக்கம்  


  • முதலடியில், நிலத்திற்குத் ‘தீதறு’ என்று விசேஷணமிட்டது – பூமியின் சிறப்பைக் காட்டினபடி. போகங்களையும் மோத்தையும் விளைத்துக் கொள்வதற்குப் பாங்காயிருத்தலாகிற சிறப்பு உண்டிறே பூமிக்கு. மூன்றாமடியில், செற செறுதலாவது கோபித்தல். ‘சிற’ என்னும் பாடத்தில், ‘சீற’ என்பதன் குறுக்கல் விகாரமென்னவேண்டும். நாதனமாகின்ற நகர் - இத்திருப்பதி ‘நாதன் கோயில்’ என்றும் வழங்கப்படுதல் உணர்க. ‘நந்தி’ என்னு மோரரசன் பணிவிடைகள் செய்யப் பெற்ற நகரமென்பது பற்றி ‘நந்திபுரவிண்ணகரம்’ எனத்திருநாம மாயிற்றென்ப. மேல் ஏழாம்பாட்டில் “நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகர நண்ணுமனமே!” என்றது காண்க.


  1439.   
  உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
  மெய்யின் அளவே அமுதுசெய்ய வல*  ஐயன்அவன் மேவும் நகர்தான்*
  மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு*  மலர் கிண்டி அதன்மேல்* 
  நைவளம் நவிற்று பொழில்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.     

      விளக்கம்  


  • சொன – ‘சொன்ன’ என்பதன் தொகுத்தல்; பலவின்பால் வினையாலணையும் பெயர் : சொன்னவற்றை என்றபடி. மெய்யினளவே யமுதுசெய்கையாவது - இத்தனைபெரிய உலகமெல்லாம் அத்தனை சிறிய திருமேனியிலே ஒடுங்கும்படி அமுது செய்கை. வல – வல்ல நைவளம் – ஓர்பண்.


  1440.   
  உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும்*  ஒழியாமை முன நாள்* 
  தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த*  தட மார்வர் தகை சேர்*
  வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி*  கங்குல் வயல் சூழ்* 
  நம்பன் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.

      விளக்கம்  


  • நம்பன் - எந்தஸமயத்திலும் நம்மைக் கைவிடான் என்று நம்புவதற்கு உரியவன்.


  1441.   
  பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என*  வந்த அசுரர்* 
  இறைகள் அவைநெறுநெறு என வெறியஅவர் வயிறு அழல*  நின்ற பெருமான்*
  சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல*  அடிகொள் நெடு மா* 
  நறைசெய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      

      விளக்கம்  


  • உரை:1

   ‘இறைகளவை’ என்பதற்கு – சரீரங்கள் என்று வியாக்யானத்தில் பொருளுரைக்கப்பட்டது; மண்டலபுருடனது நிகண்டில் - “இறை சிவன் கடன் வேந்தன் கையிறையிறுப்பிறை சிறந்தோள், சிறுமை புள்ளிறகு தங்கல், காபிமார்சென்னி கூனிறப் பிராறே” என்றதில் காண்கிற பன்னிரண்டு பொருள்களில் ‘தலை’ என்னும் பொருளும் இங்குக் கொள்ளக் கூடியதே. வெறிய அவர் = “(இராவணன் நடுங்கினான். வில்லையும் கைவிட்டான்) என்றாற்போலே ஆயுதங்களை யொழிந்தவர்கள் என்கை. ‘எறிய’ என்றும் பிரிக்கலாம். அசுரர்கள் இறைகளவை – அம்புகளை, நெறு நெறென எறிய + பிரயோகிக்க, (அதன் பிறகு) அவர்வயிறழல நின்றபெருமான் என்னவுமாம்.

   உரை:2

   பிறைச்சந்திரனை போன்ற பற்களை உடைய அரக்கர்கள், போரிட வந்தபோது ராமபிரான் அவர்கள் வயிறெரிய உடல்களை நெறுநெறு என்று முறித்து வீசினான். இப்பெருமாளின் நந்திபுர விண்ணகரில் சோலைகளில் பருத்த அடிகளை உடைய மரங்கள் உள்ளன. மயில்களும், குயில்களும் வாழும்; மேகங்கள் உலாவும்; பூக்கள் உதிரும்; வண்டுகள் ரீங்காரம் செய்யும், மனமே! இத்தலத்தை நீ அடைவாயாக என்கிறது பாசுரம்.


  1442.   
  மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என*  வந்த அசுரர்* 
  தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக*  நொடி ஆம் அளவு எய்தான்*
  வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம்*  இவை அம்கை உடையான்* 
  நாளும் உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.     

      விளக்கம்  


  • அசுரர்கள் போர்க்குவரும்போது கண்டவிடமெங்கும் நெருப்புகளை வாரிக்கொட்டுவதும் கோபாவேசங்கொண்டு கோலாஹலங்கள் பண்ணுவதும் வழக்கம்; அங்ஙனம் வருமசுரர்களின் தோளுந் தாளுந் தலையும் ஒருநொடிப் பொழுதில் பொடிபட்டொழியும்படி அம்புகளைச் செலுத்தி வெற்றிபெற்ற பெருமான் இன்னமும் அப்படிப்பட்ட ஆஸுரப்ரக்ருதிகளை யழிப்பதற்காகப் பஞ்சாபுதங்களையும் உடன்கொண்டவனாகி நந்திபுர விண்ணசரத்திலே நித்யவாஸம் பண்ணுகிறானென்க.


  1443.   
  தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல்*  துணை ஆக முன நாள்* 
  வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம்*  இனிது மேவும் நகர்தான்*
  கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும்*  எழில் ஆர் புறவு சேர்* 
  நம்பி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே      

      விளக்கம்  


  • இப்பாட்டில் ‘நகர்’ என்ற சொல் இரண்டாமடியிலும் ஈற்றடியிலுமாக இருமுறை வந்திருக்கின்றது : தம்பியொடு……….. கானகமுலாவுமவர்தாம் இனிதுமேவுநகா – அயோத்திமாநகர், அல்லது பரமபதம் என்று கொண்டு, அதுபோன்றதாய் நம்பியுறைகின்ற நகராகிய நந்திபுர விண்ணகரம் என்று முறைக்கலாம்.


  1444.   
  தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்*  நந்தன் மதலை* 
  எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ*  நின்ற நகர்தான்*
  மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார்*  மயில்கள் ஆடு பொழில் சூழ்* 
  நந்தி பணிசெய்த நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.   

      விளக்கம்  


  • இத்திருப்பதியில் மந்தமான வாத்ய கோஷத்தைச் சோலையிலுள்ள மயில்கள் செவியுற்று, மேகங்கள் முழங்கின்றனவென் றெண்ணிச் சிறை விரித்தாடுகின்றனவாம். நந்திபணிசெய்த நகர் = திருவல்லிக்கேணியில் தொண்டையர்கோன் போலவும், பரமேச்சுரவிண்ணகரத்தில் பல்லவன் மல்லையர்கோன் போலவும், அட்டபுய கரத்தில் வயிரமேகன் போலவும். திருநறையூரில் செங்கணான்கோச் சோழன் போலவும் இத்திருப்பதியில் நந்திவருமனென்னு மோரரசன் சில் திருப்பணிகள் செய்தனனாகச் சொல்லிப்போருவர்கள்.


  1445.   
  எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று*  முனியாளர் திரு ஆர்* 
  பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு*  கூட எழில் ஆர்*
  மண்ணில் இதுபோல நகர் இல்லை என*  வானவர்கள் தாம் மலர்கள் தூய்* 
  நண்ணி உறைகின்ற நகர்*  நந்திபுரவிண்ணகரம்நண்ணு மனமே.           

      விளக்கம்  


  • ஸநகஸநந்தநாதி மஹர்ஷிகள் ‘இப்பெருமானன்றிப் பரதெய்வம் பிறிதொன்றுமில்லை’ என்று துணிந்து ழூபண்ணார் பாடலில் கவிகளைச் சொல்லிப் பாடி ஆடுகின்றனராம்; அவர்களோடு கூட வானவர்களும் ‘பூமண்டலத்தில் இதுபோன்ற திவ்யதேசம் வேறொன்றில்லை’ என்று புகழ்ந்துகொண்டு திரண்டு வாழ்கின்றனராம். ஆகவிப்படி முனிவருமமரரும் தொழுதேத்தி இறைஞ்சுமிடமான நந்திபுரவிண்ணகரத்தை மனமே! நண்ணு என்றாராயிற்று. (நினைவு எய்தி,) ‘எய்தி’ என்பது வினையெச்ச மன்று; பெயர்ச்சொல்; எய்து – பகுதி; இ-பெயர்விகுதி. எய்துமவன் என்கை. (நினைப்பாருடைய) நினைவுகளை எய்துமவன் - த்யானத்திற்கு விஷயமாயிருக்குமவன் என்றபடி. இனி ‘எய்தி’ என்றவிதனை வினையெச்சமாகக்கொண்டு முரைக்கலாம்; எண் இல் - கணக்கில்லாத (அளவிறந்த), நினைவு – எண்ணங்களை எய்தி – அடைந்து, ‘முனியாளர் கீதமொடுபாடி, என்றதோடு அந்வயம். மஹர்ஷிகள் ‘எம்பெருமானைத் தொழவேணும், துதிக்கவேணும், திருவாராதனம் செய்யவேணும்’ என்றிங்ஙனே பலபல பாரிப்புகள் கொண்டு பாடியாட என்றவாறு,


  1446.   
  வங்கம் மலி பௌவம்அது மா முகடின் உச்சி புக*  மிக்க பெருநீர்* 
  அங்கம் அழியார் அவனது ஆணை*  தலை சூடும் அடியார் அறிதியேல்*
  பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி*  எங்கும் உளதால்* 
  நங்கள் பெருமான் உறையும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே.   

      விளக்கம்  


  • பகவத்கீதையில் (14-2)1. இதம் ஜ்ஞாநமுபாச்ரித்ய மம ஸாதர்ம்ய மாகதா;, ஸர்கேபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்ய்தந்தி ச” என்றாற்போலே அருளிச்செய்வன முன்னடிகள். நெஞ்சமே! எம்பெருமானுடைய ஆஜ்ஞையாகிய வேதம் முதலிய சாஸ்த்ரங்களைச் சிறமேற்கொண்டு அவற்றின்படியே நடக்குமவர்கள் ஒருகாலும் கெடுதலடைமாட்டார்கள்; ஊழிப்பெரு வெள்ளத்திலும் (மார்க்கண்டேயனைப்போலே) அழியாதிருப்பவர்கள் என்பது உனக்குத் தெரியுமாயின் நீயும் இவர்களைப்போலேயாக விரும்பி நந்திபுரவிண்ணகரத்தை நண்ணுவாயாக என்கிறார். பிரளயகாலத்தில் கடல்கிளர்ந்து மேலே அண்டபித்தியளவுஞ் சென்று நூக்கினாலும் அழியமாட்டார்களென்றது – பிறப்பதும் இறப்பதுமாகிற விகாரங்களுக்கு ஆளாகாமல்ழூ பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டேத்தப் பெறுவர் என்றவாறு.


  1447.   
  நறை செய் பொழில் மழை தவழும்*  நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும்* 
  உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்*  அவை அம் கை உடையானை*  ஒளி சேர் 
  கறை வளரும் வேல் வல்ல*  கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும்* 
  முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்*  முழுது அகலுமே.    

      விளக்கம்  


  • “உறைகொள் புகராழி” என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்யும் ஸ்ரீஸூக்திகாண்மின் :- “விரோதி நிரஸநத்துக்குத் திருமங்கையாழ்வார் கையில் வேலுண்டானபின்பு திருவாழி உறையிட்டிருக்குங்காண்” என்று. கறைவளரும் வேல்வல்லவனான கலியனே விரோதிகளை வென்று உலகத்தை யாள்கின்றமையால் எம்பெருமானுடைய திருவாழிப் படைக்குக் காரியமில்லையாக, உறையிலிடவேண்டிற்றாயிற்றென்க, ஆழ்வாருடைய வேல் அப்படி உறையில் கிடக்கமுடியாது; சத்ருநிரஸநம்பண்ணின கறை கழுவுதற்கும் அவகாசமின்றியே வியாபரிக்குமாம்