2 எண்ணிக்கை பாடல் பாட

காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)

பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)

வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 
கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  

குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*
கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)

மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*

காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!


பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*

விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)


வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*

துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)