2 எண்ணிக்கை பாடல் பாட

நான்முகனை*  நாராயணன் படைத்தான்* 
நான்முகனும் தான்முகமாய்ச்*  சங்கரனைத் தான்படைத்தான்*
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு*  அறிவித்தேன் ஆழ்பொருளை* 
சிந்தாமல் கொள்மின்நீர் தேர்ந்து   (2)

தாளால் உலகம்*  அளந்த அசைவேகொல்*
வாளாகிடந்தருளும்*  வாய்திறவான்*  நீள்ஓதம்
வந்துஅலைக்கும் மாமயிலை*  மாஅல்லிக்கேணியான்* 
ஐந்தலைவாய் நாகத்துஅணை? (2)

நாகத்துஅணைக் குடந்தை*  வெஃகா திருஎவ்வுள்* 
நாகத்துஅணை அரங்கம் பேர்அன்பில்*  நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும்*  ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்.  (2)

ஏன்றேன் அடிமை*  இழிந்தேன் பிறப்பு இடும்பை* 
ஆன்றேன் அமரர்க்கு அமராமை*  ஆன்றேன்
கடன்நாடும் மண்நாடும்*  கைவிட்டு*  மேலை 
இடம்நாடு காண இனி.  (2)

இனி அறிந்தேன்*  ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்* 
இனி அறிந்தேன்*  எம்பெருமான் உன்னை*  இனி அறிந்தேன்*
காரணன்நீ கற்றவைநீ*  கற்பவைநீ*  நல்கிரிசை
நாரணன்நீ*  நன்கு அறிந்தேன் நான்.  (2)