விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூவும் ஆறு அறியமாட்டேன்*  குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
    மேவு சீர் மாரி என்கோ!*  விளங்கு தாரகைகள் என்கோ,*
    நா இயல் கலைகள் என்கோ!*  ஞான நல்ஆவி என்கோ,* 
    பாவு சீர்க் கண்ணன் எம்மான்*  பங்கயக் கண்ணனையே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குன்றங்கள் அனைத்தும் என்கோ - எல்லாமும் என்று சொல்வேனோ?
மெவு சீர் மாரி என்கோ - (கண்டார்) விரும்பும்படியான சிறப்பையுடைய மழையென்பேனோ?
விளங்கு தாரகைகள் என்கோ -  பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களென்பேனோ?
நா இயல் கலைகள் என்கோ - நாவினால் முயற்சியோடு உச்சரிக்கப்படுகின்ற கல்விகளென்பேனோ?
ஞானம் நல் ஆவி என்கோ - அர்த்த  ஞானத்திற்காரணமான நல்ல சப்தங்கள் என்பேனோ?

விளக்க உரை

கீழ்ப்பரசுரத்திற் கூறிய பஞ்சபூதங்களின் காரியப் பொருளாக எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கிறார். குன்றங்கள் முதலியவை எம்பெருமான் வடிவமாகவே ஆழ்வார்க்குத் தோற்றுதலால் “பங்கயக் கண்ணன்” என்றதனோடு “குன்றங்களனைத்தும்” என்பன முதலியவற்றோடு வாசியில்லாமல் இவர் ஈடுபடுகின்றனரென்க. குன்றம் - பூமிதத்துவத்தின் காரியம் “பூமியினுடைய காடிந்யம் ஓரிடத்திலே திரண்டாற்போலேயாய்ப் பூமிக்கு ஆதாரமாயிருக்கிற பர்வதங்களென்பேனோ?” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. மாரி- ஜலதத்துவத்தின் காரியம். உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏவாகிய சிறப்பையும், வடிவழகினாலும் குளிர்ச்சியினாலும் கண்டாரெல்லாராலும் விரும்பப்படுந் தன்மையையும், எம்பெருமானது திருமேனிக்குப் போலியாகும் மேம்பாட்டையும் பெற்றிருத்தலால் “மேவுசீர் மாரி” என்றார். தாரகைகள் - அக்நிதத்துவத்தின் காரியம். ஒளியுள்ள பொருள்களெல்லாம் அக்நிதத்துவத்தின் காரியமென்பது நூல் தணிபு; கலைகள் - வாய் தத்வத்தின் காரியம். சப்தங்கள் அகசாத்தின் குணமெனப் படுமாயின் அவை செவிப்புலனாருந்தன்மை வாயுவின் உதவியினாலேயே ஆகவேண்டியிருத்தலால் கலைகள் வாயுவின் காரியமாகும். உயிரின் முயற்சியினால் தோன்றும் வாயுவே முயற்சியின் வேறுபாட்டால் வெவ்வேறெழுத்துக்களாக நாபினால் உச்சரிக்கப்பட, அவ்வெழுத்துக்கள் பதங்களாகவும் அந்தப் பதங்கள் வாக்கியங்களாகவும் அவ்வாக்கியங்கள் சாஸ்த்ரங்களாகின்றனவாதலால் ‘நாவியல் கலைகள்’ எனப்பட்டது. ஞானநல்லாவி - ஆகாசதத்துவத்தின் காரியம். ஞானமாவது பொருள்களை உள்ளபடி அறிதல்; ஆவி என்னம் உயிரின் பெயர் ஆகுபெயராய் உடலைக்குறித்து நிற்கும். ஆகவே ‘ஞான நல்லாவி’ என்பதற்கு: அறிவுக்கு உடலான ஓசை விசேஷங்கள்’ என்று பொருள் கொள்ள வேண்டியதாயிற்று. உடலுக்குள் உயிர் தங்கி நிற்றல் போலச் சப்தங்களில் அர்த்த ஞானம் தங்கி நிற்றலால் ஞானத்துக்குச் சப்தங்கள் உடலாகும். “பல்வகைத் தாதுவினுயிர்க்கு உடல்போல், பல சொல்லால் பொருட்கு இடனாக... செய்வன செய்யுள்” என்றது இங்குக் காணத்தக்கது.

English Translation

O, How shall I address my Krishna? I do not know; as the many mountains, or as the good rains, as the bright stars, or as the an of poetry? As the sentiest soul, or as the Lord of lotus eyes?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்