விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சாயால் கரியானை*  உள்அறியாராய் நெஞ்சே,* 
    பேயார் முலைகொடுத்தார் பேயர்ஆய்,*-நீயார்போய்த்-
    தேம்புஊண் சுவைத்து*  ஊன்அறிந்துஅறிந்தும்,*  தீவினைஆம்- 
    பாம்பார்வாய்க் கைந்நீட்டல் பார்த்து.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - ஓ மனமே!
பேயார் - பூதனையானவள்,
சாயால் கரியானை - நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய் - உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
பேயர் ஆய் - அறிவுகெட்டவளாய்

விளக்க உரை

நெஞ்சை நோக்கி நீ யார்? என்று கேட்ட ஆழ்வாரைப் பார்த்து அந்த நெஞ்சானது, ‘ஆழ்வீர்! படுபாவியான பூதனை செய்தாற்போலே நான் என்ன கொடுந் தொழில் செய்து விட்டேன்? எனக்கு அவளை ஒப்புக் கூற வேண்டிய காரணம் யாது? சொல்லீர்” என்று கேட்க; அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் ‘தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய் கைநீட்டல் பார்த்தி’ என்று. ஊண் என்று இவ்விடத்தில், வியாந்தரங்களைச் சொல்லுகிறது. உண்ணப்படுவது ஊண்; சப்தாதி விஷயங்கள் செவிவாய் கண் முதலிய இந்திரியங்களினால் உண்ணப்படுதல் (அநுபவிக்கப்படுதல்) பற்றி அவை ஊணெனப்படும். தேம்புதலாவது நாசமடைதல். தேம்பூண் என்றது- ஆத்மா நசிக்கும்படியான விஷயாந்தரங்கள் என்றபடியாயிற்று. பகவத் விஷயத்தை அநுபவித்தாலே ஆத்மா ஸத்தை பெறுவதற்கு ஹேது வென்றும், மற்ற விஷயங்களை அநுபவித்தல் ஆத்மா நாசமடைவதற்கு ஹேதுவென்றும் உணர்க. இப்படிப்பட்ட விஷயங்களைச் சுவைக்கையானவது இனிதாக அநுபவித்தல். அப்படி அநுபவிப்பதனாலே உண்டாவது ஊன்; ஊநம் என்ற வடசொல் ஊனென்று கிடக்கிறது; குறைவு என்று பொருள்; நெடுநாளாக விஷயாந்தரங்களை அநுபவித்து வருவதனாலே நீ மிகவும் குறைவு அடைந்துவிட்டாய்; (அதாவது) அயோக்யனாய்விட்டாய்; இந்த அயோக்யதை உனக்குத் தெரியாமையில்லை; நன்கு தெரிந்திருந்தும், உன்னுடைய நிலைமைக்குத் தகாததொரு தப்புக் காரியத்தை நீ செய்ய நினைப்பது இன்னமும் கெடுதியை விளைத்துக்கொள்ளப் பாம்பின் வாயிலே கை நீட்ட முயல்வதுபோலிரா நின்றது. அயோக்யரான நமக்கு எம்பெருமானை யநுபவிக்க ஆசை பிறப்பது தப்பு; அது அப்பெருமானுக்கு அவத்யம்; நமக்கும் ஸ்வரூப நாசம்- என்று தெளிந்து ஒதுங்கி யிருக்கவேண்டியிருந்தும் நீ பகவதநுபவத்திற்கு நாக்கை நீட்டிச் செல்லுகிறாயே! இதைவிட வேறு தீவினையுண்டோ? பாம்புபோலே அநார்த்தத்தை விளைக்கவல்ல தீவினையன்றோ இது. இந்தப் பாம்பின் வாயிலே கை வைக்கவன்றோ நீ பார்ப்பது. ஆகையாலே பூதனைக்கு நீ உறவாகவே யிருக்க வேண்டுமன்றோ. பூதனையானவள் தனக்குக் கேடு வரும்படியான காரியத்தை எப்படிச் செய்தாளோ, அப்படி. நீயும் உனக்குக் கெடுதிவிளைவிக்கும்படியான காரியத்தைச் செய்யப் பார்க்கிறாயாகையாலே பூதனையோடு ஒப்பாயன்றோ நீ... பூதனையின் காரியத்தால் எம்பெருமானுக்கு யாதொரு கேடும் விளையாதது போல, ஆழ்வாருடைய பதவதநுபவவிருப்பத்தாலும் பகவானுக்கு யாதொரு கெடுதியும் விளையமாட்டாது; இவருடைய அதிசங்கை மாத்திரமேயுள்ளது- என்பதும் இதில் குறிப்பிடப்படுகிறது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்