விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ* மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட* 
    எய் வண்ண வெம் சிலையே துணையா* இங்கே- இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்* 
    கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே* 
    அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!* அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ - தறுத்தநிறமுடைத்தாய் மணம் மிக்கதாய் அலகல காயிருந்துள்ள திருக்குழற் கற்றையானது பின்னே அலையவும்;
இரு பாடு - இருபுறத்திலும்;
மகரம்சேர் குழை - மகரகுண்டலங்கள்;
இலங்கி ஆட - அசைந்துவிளங்கவும்;
எய் வண்ணம் வெம்சிலையே துணை ஆ - ப்ரயோகித்தலை இயல்வாக வுடைய வெவ்வியவில்லையே துணையாகக் கொண்டு;

விளக்க உரை

இத்திருத்தாண்டகம் மூன்று பத்தாக வகுக்கப்பட்டுள்ளது. முதற்பத்துப் பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலே யிருந்து பேசினவை அதற்குமேல் பத்துப் பாசுரங்களாகிய நடுவிற்பத்து, தாய்பாசுரமாகச் சென்றது. இனி, இதுமுதலான பாசுரங்கள் தலைமகள் பாசுரமாகச் செல்கின்றன. பகவத்கீதையில் (10-9) “மச்சித்தா மதகதப்பராணா; போதயந்த; ப்ரஸ்பரம், கதயந்தச் சமாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்திச. “(அதாவது, சித்தத்தை நமக்கென்றே பறிகொடுத்து அப்படியே நம்மைப்பிரிந்தால் தரிக்கமாட்டாமல் பிராணனையும் நம்அதீனமாக்கி, தாம்தாம் அனுபவித்த நம்குணங்களை யெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு அப்படியே நாம்செய்த திவ்யசேஷ்டிதங்களையும் எடுத்துப் பேசிக்கொண்டு ஆனந்திக்கிறார்கள்.) என்றுள்ள ச்லோகத்தை இத்திருத்தாண்டகத்தின் மூன்றுபதிகங்கட்கும் வாக்கியார்த்தமாக நிர்வஹிப்பர் பட்டர். * மச்சித்தா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் முதற்பதிகம்; *மத்கதப்ராணா; * என்றதற்குப் பொருந்தியிருக்கும் நடுவிற்பதிகம்; * போதயந்த; ப்ரஸ்பரம் * என்றதற்குப் பொருந்தியிருக்கும் கடைப்பதிகம். தம்முடைய ஞானத்திற்கு எம்பெருமானையே இலக்காக்கி ஜ்ஞாநப்ரதாநரான வ்யாஸபராசராதி மஹர்ஷிகளின் ரீதியிலே பேசுகையாலே முதற்பத்து (மச்சித்தா;) என்றபடியாகிறது; தன்மூச்சடங்கி வேற்று வாயாலே பேசினதாகையாலே நடுவிற்பத்து (மத்கதப்ராணா;) என்றபடியாகிறது. தோழிமார்களுக்குச் செய்தியறிவித்தும் தோழிமார்களின் வார்த்தைகளைக் கேட்டும் தரித்துப்பேசின தாகையாலே இப்பத்து (போதயந்த; பரஸ்பரம்) என்றபடியாகிறது. “அதர்சநே தர்சநமாத்ரகாமா; த்ருஷ்ட்வா டரிஷ்வங்கரஸைகலோலா;, ஆலிங்கிதாயாம் புநராயதாக்ஷயாம் ஆசாஸதே விக்ரஹயோரபேதம்“ (கண்ணாற் காணாதளவில் ஒருதடவை கண்ணாற் காணப்பெற்றால் அமையும் என்று காதலிப்பர்கள்; அப்படியே காணப்பெற்றுவிட்டால் ஒருகால் அணைத்துக் கொள்ளவேணும் என்று காமுறுவர்; அப்படியே அணைத்துக்கொள்ளவும் பெற்றால் ‘இரண்டு சரீரமாக இருப்பதேன்? இரண்டுடலும் ஓருடலாக ஒற்றுமைப்பட்டாலாகாதோ? என்று அபேதத்தை விரும்பிப் போருவர்கள்.) என்றொரு ஸுபாஷிதமுண்டு. இதுவும் அடைவே மூன்று பத்துக்கும் வாக்கியார்த்தமாக அமையும். எங்ஙனேயென்னில், முதற்பத்தில் “எங்குற்ற யெம்பெருமானுன்னை நாடி ஏழையேனிங்ஙனமே யுழிதருகேனே“ என்று அவனைக் காணவேணுமென்னுமாசை கிளர்ந்திருக்கின்றமை தோற்றச் சொல்லுகையாலே * அதர்சநே தர்சநமாத்ர காமா; * என்றபடியாகிறது. இரண்டாம் பத்தில் “முற்றாராவனமுலையாள்பாவை, மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாளஃதுங்கண்டு மற்றாள்“ என்று நாச்சியாரைப்போலே தானுந் திருமார்பிலே அணைய வாசைப்பட்டமை தோற்றச் சொல்லுகையாலே * த்ருஷ்ட்வா பரிஷ்வங்கரஸைகலோலா; * என்றபடியாகிறது. இனி‘ இப்பத்தில் “கள்ளூரும் பைந்துழாய்மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்டபோது, புள்ளூரும்கள்வா! நீ போகாமைவல்லேனாய்ப் புலவியெய்தி என்னில் அங்கமெல்லாம் வந்தின்பமெய்த எப்பொழுதும் நினைந்துருகியிருப்பன்நானே“ என்றும் சொல்லுகையாலே * ஆசாஸதே விக்ரஹயோரபேதம் * என்றபடியாகிறது. ‘காந்தர்வவிவாஹ மென்னப்படுகிற இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தாள் பெண்பிள்ளை‘ என்று கேள்விப்பட்ட திருத்தாயார் ‘நங்காய்! நங்குடிக்கிதுவோ நன்மை‘ என்று சீற, மகளானவள் ‘அன்னை என்னோக்குமென் றஞ்சுகின்றேன்‘ என்கிறபடியே பயப்பட்டுத் தலைமகன் பக்கலில் செல்லாதிருக்க, அவனும் என்னோவென்று சங்கைகொண்டவனாய் இவள்பக்கலிலே நேரேவரக்கூசி இவளது அபிப்பிராயமறியவேணுமென்று பார்த்து, பிறரைத் தூதுவிடுவதிற்காட்டில் தானே ஒரு வியாஜமாகவந்து கருத்தறிதல் நன்றென்று நினைத்து, ‘தலைவியானவள் ஊரைச் சூழ்ந்ததொரு பூந்தோப்பிலே பூக் கொய்யப் புறப்பட்டுப் போகிறா ளென்று கேள்விப்பட்டு, தான் வேட்டையாடிவருவானாக எடுத்துக்கட்டின குழற்கற்றையும் பிடரியிலே தழைந்தலைகிற மயிரும் இறுக்கின சாணமும் கட்டின கச்சும் வலத்தோளிலிட்ட மெத்தையும் பெருவிரலிலே பூட்டின சரடும் இடக்கையிலே நடுக்கோத்துப் பிடித்த வில்லும் வலக்கையிலே இறுக்கின அம்பும் முதுகிலேகட்டின அம்பறாத்தூணியுமாய்க் கொண்டு அந்தப் பூந்தோப்பில்தானே சென்றுசேர, தலைமகளுடன்கூட இருந்ததோழி தானும் ஒருவியாஜத்தாலே பேரநிற்க, தைவயோகத்தாலே நாயக நாயகிகளுக்குக் கலவி கூடிற்றாய், நாயகனும் “புனலரங்க மூரென்று போயினாரே“ என்கிறபடியே வெளிப்பட்டுச் செல்ல அவ்வளவிலே உயிர்த்தோழியானவள் வந்தணுகி ‘நங்காய்! தலைவன் வந்தபடியென்? செய்தபடியென்?“ என்று கேட்க, தலைவி தோழிக்கு வ்ருத்தகீர்த்தநம்பண்ணுகிற பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு. கீழ்ப்பாட்டில், தாயானவள் தான்சொன்ன ஹிதத்தை மகள் கேளாதவளானபடி யாலே இனி இவளை அடக்கியாளுகை முடியாத காரியமென்று நிச்சயித்துப் ‘பேராளன் பேரோதும் பெண்ணைமண்மேற் பெருந்தவத்தளென்றல்லாற் பேசலாமே“ என்று கொண்டாடி உதாஸீநையானாள்; ‘தலைவிக்கு இங்ஙனம் ஆற்றாமை மீதூர்ந்தது நம் க்ருஷி பலித்த படியன்றோ என்று நினைத்து மகிழ்ந்து எம்பெருமானும் உதாஸீநனாய் நின்றான்; இந்த நிலைமையிலே நாமும் உதாஸீநித்திருந்தால் இவளை இழந்தோமாகவேணு மத்தனையென்று எண்ணின உயிர்த்தோழி, கீழ்நடந்த கலவியை நினைப்பூட்டினால் அது கண்டு இவள் ஒருவாறு தரித்திருக்கக் கூடுமென்று பார்த்து ‘அவன் வந்தபடி என்? உன்னோடு கலந்தபடி என்? பின்பு பிரிகிறபோது உனக்குத் தேறுதலாகச் சொல்லிப்போன வார்த்தை ஏதேனுமுண்டோ? சொல்லிக்காணாய்‘ என்ன, அவற்றைத் தோழிக்குச் சொல்லுகிறாள். அவனுடைய அழகையும் சீலத்தையும் கண்டுவைத்து, கைப்பட்ட பொருளைக் கடலிலே வீசியெறிந்தாற்போலே, ஏதோவேறாக நினைத்து அஞ்சி இழந்தோமோ தோழீ! என்கிறாள். “இப்பாட்டு, சக்ரவர்த்தி திருமகன் தலைமகனாய் ஸ்ரீஜநகராஜன் திருமகள் தலைமகளாக ப்ரவ்ருத்தமாகிறது“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது. ஆழ்வார்தாம் ஸ்ரீஜநகராஜன் திருமகளான நிலைமையிலே நின்று பேசுகிறாரென்றவாறு. மைவண்ணநறுங்குஞ்சிக்குழல் பின்தாழ = திருக்குழலுக்குக் கருநிறம் இயற்கையாயிருக்க மைவண்ணம் என்று எடுத்துச் சொல்லுவானேன்? என்னில்; * கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின், உட்கொண்ட நீலநன்னூல் தழைகொல்; * என்று சங்கித்து “அன்றுமாயன்குழல்“ என்னவேண்டும்படி விலக்ஷணமான கருநிறங்கொண்டதாதல் பற்றி மைவண்ணமென்று சிறப்பித்துக் கூறப்பட்டது. திருக்குழலைக் கண்ட கண்ணனுக்கு அவனுடைய திருமேனிநிறம் ஸ்படிகவர்ணம் என்னத்தக்கதாயிருக்கும் போலும். வண்ணத்தின் சிறப்புமாத்திரமேயோ? பரிமளமும் விலக்ஷணமாயிருக்கிறபடி காண். தாபத்ரயத்தினால் தபிக்கப்பட்டவரோடு விரஹதாபத்தினால் தபிக்கப்பட்டவரோடு வாசியற அனைவர்க்கும் சிரமம் தீர்க்கவல்லதான திருக்குழற் பரிமளத்தை என் சொல்லுவேன்!. நிறமும் மணமுமேயோ ஆகர்ஷகமாயிருக்கிறன; திரள்திரளாகக் குழன்றிருக்கை யன்றியே அலகலகாகப்பிரிந்து சுருண்டிருக்கும்பரிசுதான் சொல்லத்தரமோ? ஆக இப்படிப்பட்ட திருக்குழற்கற்றை பின்படரியிலே அசைந்தலையவும். இவள் பின்புறத்தே காண் ப்ரஸக்தி என்னென்னில்; பெருக்காறு பெருவெள்ளமாக ப்ரவஹிக்கப் புக்கால் அதனை எதிர்நோக்க முடியாதாப்போலே இவளுடைய ஸௌந்தர்ய ஸாகாதரங்களைக் கண்டு நேர்முகம் பார்க்கமாட்டாமையாலே முகத்தைத் திருப்பினார், அச்சமயத்தில் கண்டாளென்ப. மகரஞ்சேர்குழை யிருபாடிலங்கியாட = * மைவண்ண நறுங்குஞ்சிக் குழற்கற்றையின் இருட்சியாலே கண்கள் இருண்டு திருமுகம் தோற்றாதிருக்க, அவ்வளவிலே இரண்டு சந்திரர்கள் உதித்தாற்போலேகாண் திருமகரக் குழைகளிருந்தபடி. இலங்கையில் திருவடி பிராட்டியைத் தேடுகிற ஸமயத்திலே சந்திரோதயம் உதவினாப்போலே, திருக்குழலாலே இருண்ட திருமுகத்திற்கு இம் மகரக்குழைகள் பிரகாசமாக வாய்த்தன வென்க. ‘திருமகரக்குழைகள் திருக்குழலுக்கு ஆபரணமாயிருக்கிறதோ, திருக்குழல்தான் திருமகரக்குழைகட்கு ஆபரணமா யிருக்கிறதோ‘ வென்று விகல்பிக்கலாம்படியாக விளங்குகை இலங்கி என்பதன் பொருள். ‘ஆட‘ என்றதற்கு மூன்றுவகையாக அருளிச்செய்வர்; ‘ஆட இருவராய் வந்தார்‘ என்று அந்வயித்தால், ஒரு கடல் அசைந்து வந்தாற்போலே காண் வருகிறபோது இரண்டருகும் திருமகரக்குழைகள் அசைய வந்தபடி என்கிறாளென்க. ‘ஆட என் முன்னே நின்றார்‘ என்று அந்வயித்தால் அபிமதவிஷயத்தைக் கண்டால் முகத்திலே சில அசைவுகளுண்டாகுமே; அதைச் சொன்னபடி யென்க. நஞ்சீயர் அருளிச்செய்வதாவது-‘முன் பைக் காட்டுவது பின்பைக் காட்டுவதாக எத்தனை ஆடல்கள் செய்தான் இவளுடைய பெண்மையை அழிக்கைக்காக!‘ என்றாம். கூட வந்த பேர் ஆரேனுமுண்டோ?‘ என்ன. எய்வண்ணவெஞ்சிலையே துணையா என்கிறாள். கையில் வில்லே துணையாக வந்தாரென்க. * வில்லிறுத்து மெல்லியள் தோள் தோய்ந்தவராகையாலே முன்பு நம்மைச் சேரவிட்டது இந்த வில்லையன்றோ வென்று நன்றிபாராட்டி அதனைத் துணைகொண்டு வந்தார்போலும். ‘வெஞ்சிலையே துணையா‘ என்ற தனால் ஸம்ச்லேக்ஷிக்கைக்கு ஏகாந்தமாம் படி வந்தார் என்பது தோன்றும். யாரேனுங் கண்டு ‘இங்கு வந்ததென்?‘ என்றால் ‘வேட்டையாட வந்தோம்‘ என்று மறுமொழி சொல்லப் பாங்காக வில்லெடுத்துவந்தபடி. ‘இங்கே வந்தார்‘ என்று திருமணங்கொல்லையைக் காட்டுகிறாள். நான் நிதிகண்டெடுத்தவிடம் இது காண்! என்கிறாள். “கலந்து பிரிந்த பின்பும் மண்ணை மோந்து கொண்டு கிடக்கலாம்படிகாண் இலச்சினைபட நடந்த அடிச்சுவடிருந்தபடி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின். “எய்வண்ண வெஞ்சிலையே துணையா“ என்று சொல்லிவைத்து ‘இருவராய் வந்தார்‘ என்கை அஸங்கதமன்றோ வென்னில்; வில்போலவே இளையபெருமாளும் விசேஷண பூதராகையாலே ஒருவரென்னவுங் குறையில்லை. இதுவொரு விசிஷ்டாத்வை தம். இளைய பெருமாளைச் சொல்லுமிடத்து “ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” (இராமபிரானது வலக்கை லக்ஷ்மணன்) என்றது காண்க. கையும் வில்லுமாய் வந்தா ரென்றவாறு. அப்படியாகில் இருவராய்வந்தார் என்னவேணுமோ? வேற்றுமை தோற்ற சொல்லுவானென்? என்னில்; அணைக்குந்தோளோடே வந்தார்‘ என்று சொன்னால் வேற்றுமை தோற்றச் சொன்னதாகமாட்டாதாப்போலே இதனையுங்கொள்க. ஸம்ச்லேஷிக்கை வருகிறவன் படுக்கையோடே வருகை மிகையன்றே. (இளைய பெருமாள் படுக்கையோவென்னில்; * சென்றாற்குடையா மெனப்பட்ட ஆதிசேஷனேயிறே லக்ஷ்மணனாக வந்து பிறந்தது.) இனி, “இருவராய்வந்தார்“ என்பதற்கு தெய்வத்தன்மையும் மானிடத் தன்மையும் கலசிவந்தார் என்றும் பொருளுரைப்பர். சேஷத்வமும் சேஷித்வமுமாகிற இரண்டு படியுங் கலசிவந்தார் என்று முரைப்பர்.- “தம்முடைய காலை என்தலையிலே வைக்கக் கடவதாக வந்து என்காலைத் தம் தலையிலே வைத்துக் கொண்டாரென்கிறாள். பரணிக்ரஹணம் பண்ணும்போது சேஷியாயிருக்கையும் படுக்கையிலே முறைகெடப் பரிமாறுகையுமாயிறே யிருப்பது. வகுத்த ஸ்வாமியாகவும் வேணும்; * ந சாஸ்த்ரம் நைவ ச க்ரம: ஆக வும் வேணுமிறே“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் போக்யமாக அநுஸந்திக்கத் தக்கன. இருவராய் வந்தார் = இருவராம்படியாக வந்தார்; (தாமும் நாமுமேயாம்படியாக வந்தார் என்றவாறு.) என்றும் உரைத்தருளினர். ஆய் என்பதற்கு ‘ஆம்படி‘ என்று பொருள்படுவது சிரமமாயினும், அர்த்தத்தின் சீர்மையைப்பற்ற இங்ஙனே உரைக்கக் குறையில்லை யென்ப. ‘இருவராவந்தார்‘ எனப் பாடமிருந்தால் முந்தின பொருள்களும் இப்பொருளும் செவ்வனே கொள்ளக் கிடக்குமென்று கூறுவாருமுளர். “சப்தத்தை நியமித்து“ என்று வியாக்கியான மிருக்கும்போது வேறுபாடங் கற்பிக்க அதிகாரமுடையோ மல்லோம். தாமிருக்குமிடத்திலே நாம் மடலெடுத்துச் சென்று கிட்டவேண்டும்படியாயிருக்க, நாமிருந்தவிடத்தேற அவர் வந்தார் காண்! என்ற அற்புதந்தோன்ற, வந்தார் என்கிறாள். அவர் வரும்போது நடந்த நடையழகை நீ காணப்பெற்றிலையே தோழீ! என்பதும் இச்சொல்லில் உள்ளூறை. வந்தார் என்முன்னே நின்றார் = மிக்க பரபரப்போடே வந்தவர் கடல்கண்டு தியங்கி னாற்போலே என்னைக்கண்டு மேல் அடியிடமாட்டாதே தியங்கி முன்னே நின்றார். மேல் போக்கிட மில்லாமையாலே நின்றார். ‘வந்தார்‘ என்றது முற்றெச்சம்; வந்து என்றபடி. இனிமேல், அவருடைய ஸௌந்தர்ய ஸாகரத்தில்தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் கைவண்ணந்தாமரை யென்று தொடங்கி திருவடி தொடங்கித் திருமுடி யீறாகச் சொல்லுதல், திருமுடி தொடங்கித் திருவடியீறாகச் சொல்லுதலாகிற முறைமைகளை அடைவு இதுவாகையாலே. முதலிலே, தன்னை மேல்விழுந்து பாணிக்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள்; கையைப் பிடித்தபின் ‘இதுவொரு வடிவழகிருந்தபடி என்!, இதுவொரு முலையழகிருந்தபடி என்!, இதுவொரு கண்ணழகிருந்தபடி என்!‘ என்று இன்சொல்லுச் சொன்ன திருவாயை அதற்குப் பின்னே சொல்லுகிறாள். இன்சொல்லுச் சொல்லத் தொடங்கி முற்றமுடியச் சொல்லித் தலைக்கட்டமாட்டாமல் * உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து வக்தவ்யசேஷத்தைக் கண்ணாலே சொல்லித் தலைக்கட்டுகையாலே அதற்கப்பின் கண்ணைச்சொல்லுகிறாள். அக்கண்ணழகுக்குத் தோற்றுத்தான் திருவடியிலே விழுந்தமைதோற்ற அதற்குப்பின்னே அடியைச் சொல்லுகிறாள். கீழ்ப் பதினெட்டாம்பாட்டில் “கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமலவண்ணம்“ என்று உபமேயமான அவயவங்களையெல்லாம் ஒருசேரச்சொல்லி முடிவில் உபமாநவஸ்துவைச் சொன்னதுபோல இங்கும் சொல்லலாமா யிருக்க, ‘கைவண்ணம் தாமரை, வாய் கமலம் போலும், கண்ணினையும் அரவிந்தம்‘ என்றிப்படி ஒரு உபமாநவஸ் துவையிட்டே பலவாக்கியங்களாகப் பேசுவானேன்? என்னில்; இதில் ஒரு விலக்ஷணமான போக்யதையுண்டு என்று சொல்லலாமத்தனை. கூரத்தாழ்வான் தாமும் வரதராஜஸ்தவத் தில் “அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம்“ என்றும் ஸுந்தரபாஹுஸ்தவத்தில் “அப்ஜபாத மரவிந்தலோசநம் பத்மபாணிதலம்“ என்றும் இங்ஙனே பேசி யநுபவிக்கிறார். பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் “கமலபதகராக்ஷம்“ என்று சேரப் பேசியநுபவித்ததுமுண்டு. உபமாநவ்யக்தி ஒன்றேயா யிருக்கச்செய்தேயும் தத்பர்யாயமான பல சொற்களையிட்டு (தாமரை, கமலம், அரவிந்தம் என்றாற்போல)ச் சொல்லுதல் வாக்யபேதம் பண்ணுதலும் அநுஸந்தாக போக்யதா ப்ரகர்ஷ ஸூசகமத்தனை. “அடியும் அஃதே“ என்றதில் உபேக்ஷ தோற்றும்; ‘எம்பெருமானது திவ்யாவயவங்களுக்கு இத்தாமரை ஏற்ற உவமையன்று; ஆயினும் ஏதேனுமொரு உவமையை யிட்டுப் பேசி அநுபவிக்கவேண்டியிருப்பதால் அதற்காகச் சொன்னபடி‘ என்பது இதில் தொனிக்கும். இங்ஙனே தலைமகள் சொல்லக் கேட்ட தோழியானவள் ‘நங்காய்! அவர் வந்த வரவை நீ சொல்ல நான் கேட்டாற்போ லிருக்கையன்றியே நானே நேரில் ஸாக்ஷாத்கரிப்பது போலிராநின்றதே நீ பேசுகிற பேச்சின் வாய்ப்பு! என்று சொல்ல; தோழீ! அவர் வந்த வரவின் வீறுபாட்டையும் அவரது அவயவங்கள் பொலிந்த பொலிவையும் நான் என்னென்று சொல்லுவேன்? அவ்வண்ணத்தவர் என்று சொல்லலாமத்தனை யென்கிறாள். நீ கேட்கையாலே உனக்கொரு உவமையை யிட்டுச் சொல்லலாம்படி யன்றுகாண் அவர் வடிவருவிந்தபடி; ‘அப்படிப்பட்ட வடிவுடையவர்‘ என்று இரண்டுகையுந் தூக்கிச் சொல்லவேணும் காண் என்கிறாள். அவ்வண்ணத்தவர்நிலைமை கண்டுந்தோழீ! அவரைநாம் தேவரென்று அஞ்சினோமே = அவருடைய வடிவழகிருந்தபடியையும் அவருடைய சீலமிருந்தபடியையும் கண்டுவைத்தும் “அம்மானாழிப்பிரா னவனெவ்விடத்தான் யானார்“ என்றாற்போலே மயங்கி அஞ்சி இழந்தேனே யென்கிறாள். அவருடைய ஸௌசீல்ய ஸௌலப்யங்களைக் கண்டு அஞ்சாதே கூசாதே கலந்து பரிமாறலாயிருக்க, அந்தோ! * ஒன்றுந்தேவு முலகுமுயிரும் மற்றும் யாதுமில்லாவன்று நான்முகன் றன்னோடு தேவருலகோ டுயிர்படைத்த பெருமானன்றோ இவர்! * நரநாரணனா யுலகத் தறநூல் சிங்காமை விரித்த பெருமானன்றோ இவர்! என்றாற்போலே பரத்வத்தையே நினைத்துப் பாவியேன் இறாய்த்து இழந்தொழிந்தேனே என்கிறாள். ஸம்ச்லேஷம் ப்ரவ்ருத்தமாகிப் பின்பு விச்லேஷம் நிகழ்ந்தபடியைத் தெரிவிக்கிற புடை இது என்க. “ஆத்மாநம் மாநுஷம் மந்யே என்னுமவர் நினைவைவிட்டு * பவாந் நாராயணேதேவ: என்னும் வழிப்போக்கர் வார்த்தையைப் பற்றிக் கெட்டாமே! என்கிறாள். தன்னோடு ஸுகதுக்கங்கள் ஒத்தவளான தோழியையுங் கூட்டி நாம் என்கிறாள்.“ இப்பாசுரத்தின் ஈற்றடியின் விசேஷார்த்தங்களைப் பன்னியுரைக்குங்காற் பாரதமாம்‘ பூருவர்களின் வியாக்கியானங்களிற் கண்டு அநுபவித்துக் களிக்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்