விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்*  நந்தன் பெற்ற மதலை,* 
    அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே*   அல்லில்தான் வந்த பின்னை,*
    கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி*  கமலச் செவ்வாய் வெளுப்ப,* 
    என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நங்காய் - யசோதைப்பிராட்டியே!
மணமகள் கேள்வன் - பூமிப்பிராட்டிக்கு வல்லபனாய்
மலர் மங்கை நாயகன் - பெரிய பிராட்டியார்க்கு நாயகனாய்
நந்தன் பெற்ற மதலை - நந்தகோபன் பெற்ற பிள்ளையாய்
அண்ணல் தான் - ஆண் பிள்ளைத்தனத்தில் குறையற்றவனான கண்ணபிரான்

விளக்க உரை

“பந்து பறித்துத் துகில்பற்றி கீறி“ என்று ஒருத்தி முறையிட்டதை கேட்ட இன்னொருத்தி, தேள்கொட்டித் துடிக்கிறவன் வாளாலறுப்புண்டு துடிப்பவனைக் கண்டு துடிப்படங்குமாபோலே நம்முடைய துயரத்தைக் கேட்டுத் தன் துயரம் தொலையப்பெறுக வென்றெண்ணி, கண்ணபிரான் தன் மனையிற் செய்த பெரும்பிழை யொன்றை யெடுத்துப்பேசி முறைப்படுகின்றாள். (கீழ்ப்பாட்டில் ஸம்போகத்தின் உபக்ரமமாத்ரம், இதில் ஸம்போகம் செய்து தலைக்கட்டினபடி சொல்லுகிறதென்க) பழித்து முறையிடுமவர்கள் ‘மணமகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்’ என்று ஏத்தவேணுமோ வென்னில், இது ஏத்தும் வார்த்தையன்று, ‘இவனுக்கு என்னகேடு? தனக்குவாய்த்த மனைவியர் இல்லையோ? மண்மகளையும் மலர்மகளையும் தன் இஷ்டப்படி அநுபவிப்பதற்கு இடையூறு செய்வாரார்? அகாலத்திலே நம்மனையிலே வந்து இப்பாடு படுத்தவேணுமோ?’ என்கிறாள். அன்னிறயே கண்ணனைத் தாய்மார் முதலானார் தாலாட்டும்போது ‘மண்மகள் கேள்வனே தாலேலோ மலர்மங்கை நாயகளே தாலேலோ’ என்றாற்போலே சொல்லக்கேட்டு அதனை அநுவதிக்கிறார்க ளென்னவுமாம். தான் ஏதோ ஸங்கேதம் செய்துவைத்தவன் போல இரவிலே வருவதும், மெல்லிய ஓசைபட இலைக்குழலை ஊதிக்கொண்டு வருவதும், என் மகளைக் * கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப விவர்ணப்படுத்துவதும் தகுதியோ? என் பெண் நிறமழிந்து கிடக்குங் கிடையைக் காணவல்லீர்களோ? இழந்த நிறம் மீண்டும் இவளுக்கு உண்டாகும்படி நான் என்ன உபாயம் செய்யவல்லேன்? என்று தடுமாறுகிறாள். இரண்டாமடியில் ‘அல்லுற்றான்’ என்ற பாடம்பெரும்பாலும் வழக்குமாயினும் அது பொருந்தாது. “குழலையும் ஊதிக்கொண்டு ராத்திரியிலே வந்தபின்னே“ என்பது வியாக்கியான வாக்கியம். ஆகவே “அல்லிற்றான்“ என்ற பாடமே ‘அல்லுற்றான்’ என விகாரப்பட்டு விட்டதென்னவேணும். அன்னி, ‘அல்லுத்தான்’ என்றிருந்தால் ஒருவாறு பொருந்தும், அல்லு, தான் என்று பிரிக்க. அல் என்பது உகரச்சாரியை பெற்றதென்க. அல்லில என்பதே பொருள்.

English Translation

O Lady Yasoda! This Nanda;s child is the husband of Dame Earth and Lord of lotus-dame lakshmi. Playing a need flute at night he entered our hamiet. There after my daughter;s flowery-eyes dropped, her breasts tightened, here lotus lips paled, the colour drained from her cheeks. O. What shall I do, what shall I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்