விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காவார் மடல்பெண்ணை*  அன்றில்அரி குரலும்,*
    ஏவாயின் ஊடுஇயங்கும்*  எஃகின் கொடிதாலோ,*
    பூஆர் மணம்கமழும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    பாவாய்! இதுநமக்குஓர்*  பான்மையே ஆகாதே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கா ஆர்மடல் - சோலையெங்கும் நிறைந்த மடலையுடைய
பெண்ணை - பனைமரத்திலுள்ள
அன்றில் - அன்றிற்பறவையினுடைய
அரி குரலும் - தழுதழுத்த த்வநியும்
எவாயினுடு இயங்கும் எஃகின் - அம்புபட்ட புண்வாயில் வ்யா பரிக்கின்ற வேற்படையிற் காட்டிலும்

விளக்க உரை

திருப்புல்லாணியைச் சென்று தொழுவோமென்று ஆசைப்பட்டிருந்த நமக்குத் துன்பப்படுவதே பலனாகத் தேறிற்றே!; எஞ்ஞான்றும் துயருற்றிருப்பதே நமக்குத் தொழிலாயிற்றே என்று வருந்திக் கூறுகிறாள் பரகாலநாயகி. இப்பாட்டின் முதலடிக்குப் பெரிவாச்சான்பிள்ளை அருளிச்செய்தது காணீர்- “தார்மிகராயிருப்பார் வைத்த தண்ணீர்ப் பந்தலிலே வழியடிக்காரர் ஒதுங்குமாபோலே, மடலெடுத்தாகிலும் பிழைக்க நட்டபனையிலே அன்றில்வந்து குடிபுகுந்தது.; என்று இதனை விவரிப்போம்;- விடாய்த்தவர்கள் தண்ணீர்பருகிக் களைதீர்ந்து போகட்டுமென்று தர்மப் பிரபுக்கள் தண்ணீர்ப்பந்தல் வைத்தால், வழிபறிக்குமங் கள்ளர்கள் அதிலே வந்து தங்கியிருந்து, வருகிறவர்களை நலியுமாபோலே, விரஹிகள் மடலூர்ந்தாகிலும் அபிமதம் பெற்று வாழ்ந்து போகட்டுமென்று (பனைமடல்களின் மிகுதிக்காக) ஏற்படுத்தின பனந்தோப்பிலே அன்றிற்பறவைகள் வந்து குடிபுகுந்து தழுதழுத்த குரலைக் கொண்டு கொலை செய்கின்றனவே! என்றாறென்க. நாயகனை ஒரு படத்திலேயெழுதி, வைத்தகண் வாங்காமல் அதைப் பார்த்துக்கொண்டு புஷ்பம் சந்தனம் முதலிய போகத்துக்குரிய வஸ்துக்களை விஷமாக உதறித்தள்ளி ஊணும் உறக்கமும் உடம்பு குளிப்பதுமின்றியே பனைமட்டையைக் கையிலெடுத்துக் கொண்டு அதனால் உடம்பை மோதிக்கொண்டு தலைமயிரை விரித்துக் கொண்டு ;இன்ன படுபாவி என்னைக் காக்கமாட்டாதே கைவிட்டான்; அவன் கண்ணற்றவன்; அவனிலும் விஞ்சின கொடியன் இல்லை; பல ஸ்தலங்களிலே அவன் ஸந்நிதிபண்ணி அடியாரைக் காக்கிறான்பதும் ராமக்ருஷ்ணாதி அவதாரங்களினால் பலரைக் காத்தான் என்பதும் முழுப்பொய்யான பேச்சுக்கள்;; என்று தெருவேறக் கதறிக்கொண்டு கேட்டாரெல்லாரும் நடுங்கும்படியும் இரங்கும்படியும் திரிந்துழல்வதே மடலூருகையாதலால், இப்படிப்பட்ட மடலூர்தலைச் செய்தாகிலும் எம்பெருமானை அணையப் பெறுவோமென்று கருதின பரகாலநாயகி, பனைமடல் கொள்ளுதற்காகப் பனைமரத்தருகே சென்றவாறே, அங்கு அன்றிலின் அரிகுரலைச் செவியுற்று வருந்தி இது கூறினன் போலும். அன்றில் என்பது ஒரு பறவை. அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும். அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாது நிற்கும். க்ஷணப்பொழுது ஒன்றை ஒன்றுவிட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்றுதரம் கத்திக் கூவி அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும்; இப்பறவையை வடநூலார் க்ரௌஞ்சமென்பர். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக் கொண்டு உறங்கும்பொழுது, அவ்வுறக்கத்தில் வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அந்த நெகிழ்ச்சியையும் பொறாமல், மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக வருந்துமென்ப. “பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளா மென்செய்தேன்” என்பர் பெரிய திருமடலிலும். “மடல்பெண்ணைக் கா ஆர்அன்றில்” என்று அன்வயிக்கவுமாம் மனந்தோப்பு நிறைய அன்றிலாகவே யிருக்கிறதே! என் வருந்துகிறபடி. இலங்கை முழுதும் ராக்ஷஸமயம்! என்னுமாபோலே. அரிகுரல்-அரிதல்-ஹரித்தல்; உயிரை அபஹரிக்கின்ற குரல் என்னலாம்.

English Translation

O! Pretty doll! I joined my hands in worship of the Lord of Pullani armid fragrant groves, Now this has become a habit with us! The shrill mating calls of the Anrills, -birds of the seaside sitting over inflorescent Palm trees, -are more painful than lances piercing into wounds, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்