பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்*  தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
    படு மும்மதப் புனல் சோர வாரணம்  பைய*  நின்று ஊர்வது போல்* 

    உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*  உடை மணி பறை கறங்க* 
    தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*  தளர்நடை நடவானோ    
      


    செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்*   சிறுபிறை முளைப் போல* 
    நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே*   நளிர் வெண்பல் முளை இலக* 

    அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி  பூண்ட*  அனந்தசயனன்* 
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ


    மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்*  சூழ் பரிவேடமுமாய்ப்* 
    பின்னற் துலங்கும் அரசிலையும்*  பீதகச் சிற்றாடையொடும்* 

    மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்* 
    தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ    


     
    கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்*  கணகண சிரித்து உவந்து* 
    முன் வந்து நின்று முத்தம் தரும்*  என் முகில்வண்ணன் திருமார்வன்* 

    தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
    தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே*  தளர்நடை நடவானோ    


    முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்*   மொடுமொடு விரைந்து ஓடப்* 
    பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்*  பெயர்ந்து அடியிடுவது போல்* 

     பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்*   பலதேவன் என்னும்* 
    தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ 


    ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்*  உள்ளடி பொறித்து அமைந்த* 
    இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்*  இலச்சினை பட நடந்து* 

    பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்*  பின்னையும் பெய்து பெய்து* 
    தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை*  தளர்நடை நடவானோ     


    படர் பங்கைய மலர்வாய் நெகிழப்*  பனி படு சிறுதுளி போல்* 
    இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி*  இற்று இற்று வீழநின்று* 

    கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்*  உடை மணி கணகணென* 
    தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி*  தளர்நடை நடவானோ   


    பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே*  அருவிகள் பகர்ந்தனைய* 
    அக்குவடம் இழிந்து ஏறித் தாழ*  அணி அல்குல் புடை பெயர* 

    மக்கள் உலகினிற் பெய்து அறியா*  மணிக் குழவி உருவின்*
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ     


    வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்*  வேழத்தின் கருங்கன்று போல்* 
    தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்*  சிறு புகர்பட வியர்த்து* 

    ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்*  உறைத்து ஒன்றும் நோவாமே* 
    தண் போது கொண்ட தவிசின் மீதே*  தளர்நடை நடவானோ    


    திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்*  செங்கண்மால் கேசவன்*  தன்- 
    திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி*  திகழ்ந்து எங்கும் புடைபெயர* 

    பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்*  பெரியதோர் தீர்த்த பலம்- 
    தரு நீர்ச்*  சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்*  தளர்நடை நடவானோ


    ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*  அஞ்சனவண்ணன் தன்னைத்* 
    தாயர் மகிழ ஒன்னார் தளரத்*   தளர்நடை நடந்ததனை*   

    வேயர் புகழ் விட்டுசித்தன்*  சீரால் விரித்தன உரைக்கவல்லார்* 
    மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*  மக்களைப் பெறுவர்களே* (2)


    இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
    மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*

    சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
    அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)


    கன்றுகள் இல்லம் புகுந்து*  கதறுகின்ற பசு எல்லாம்*
    நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*  நேசமேல் ஒன்றும் இலாதாய்!*

    மன்றில் நில்லேல் அந்திப் போது*  மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
    நன்று கண்டாய் என்தன் சொல்லு*  நான் உன்னைக் காப்பிட வாராய் 


    செப்பு ஓது மென்முலையார்கள்*  சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
    அப்போது நான் உரப்பப் போய்*  அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 

    முப் போதும் வானவர் ஏத்தும்*  முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
    இப்போது நான் ஒன்றும் செய்யேன்*  எம்பிரான் காப்பிட வாராய்!


    கண்ணில் மணல்கொடு தூவிக்*  காலினால் பாய்ந்தனை என்று என்று* 
    எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்* 

    கண்ணனே!  வெள்ளறை நின்றாய்!*  கண்டாரொடே தீமை செய்வாய்! 
    வண்ணமே வேலையது ஒப்பாய்!*  வள்ளலே! காப்பிட வாராய்        


    பல்லாயிரவர் இவ் ஊரில்*  பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது*  எம்பிரான்!  நீ இங்கே வாராய்* 

    நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*  ஞானச் சுடரே!  உன்மேனி*
    சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்*  சொப்படக் காப்பிட வாராய்  


    கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*  கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
    வஞ்சிப்பதற்கு விடுத்தான்*  என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 

    மஞ்சு தவழ் மணி மாட*  மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
    அஞ்சுவன் நீ அங்கு நிற்க*  அழகனே!  காப்பிட வாராய்


    கள்ளச் சகடும் மருதும்*  கலக்கு அழிய உதைசெய்த* 
    பிள்ளையரசே!*  நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 

    உள்ளவாறு ஒன்றும் அறியேன்*  ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
    பள்ளிகொள் போது இது ஆகும்*  பரமனே!  காப்பிட வாராய்   


    இன்பம் அதனை உயர்த்தாய்!*  இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
    கும்பக் களிறு அட்ட கோவே!*  கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 

    செம்பொன் மதில் வெள்ளறையாய்!*  செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
    கம்பக் கபாலி காண் அங்கு*  கடிது ஓடிக் காப்பிட வாராய்     


    இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு*  எழில் மறையோர் வந்து நின்றார்* 
    தருக்கேல் நம்பி!  சந்தி நின்று*  தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 

    திருக்காப்பு நான் உன்னைச் சாத்த*  தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*  இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் 


    போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
    மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 

    வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
    பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)


    நல்லது ஓர் தாமரைப் பொய்கை*  நாண்மலர் மேல் பனி சோர* 
    அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு*  அழகழிந்தால் ஒத்ததாலோ* 

    இல்லம் வெறியோடிற்றாலோ*  என்மகளை எங்கும் காணேன்* 
    மல்லரை அட்டவன் பின்போய்*  மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2) 


    ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத*  உருவறைக் கோபாலர் தங்கள்* 
    கன்று கால் மாறுமா போலே*  கன்னி இருந்தாளைக் கொண்டு* 

    நன்றும் கிறி செய்து போனான்*  நாராயணன் செய்த தீமை*
    என்றும் எமர்கள் குடிக்கு*  ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*


    குமரி மணம் செய்து கொண்டு*  கோலம் செய்து இல்லத்து இருத்தி* 
    தமரும் பிறரும் அறியத்*  தாமோதரற்கு என்று சாற்றி* 

    அமரர் பதியுடைத் தேவி*  அரசாணியை வழிபட்டு* 
    துமிலம் எழப் பறை கொட்டித்*  தோரணம் நாட்டிடுங் கொல்லோ?* 


    ஒரு மகள் தன்னை உடையேன்*  உலகம் நிறைந்த புகழால்* 
    திருமகள் போல வளர்த்தேன்*  செங்கண் மால் தான் கொண்டு போனான்* 

    பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*  பெரும்பிள்ளை பெற்ற அசோதை* 
    மருமகளைக் கண்டு உகந்து*  மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?* 


    தம் மாமன் நந்தகோபாலன்*  தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்* 
    செம்மாந்திரே என்று சொல்லி*  செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*

    கொம்மை முலையும் இடையும்*  கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு* 
    இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?* 


    வேடர் மறக்குலம் போலே*  வேண்டிற்றுச் செய்து என்மகளைக்* 
    கூடிய கூட்டமே யாகக்*  கொண்டு குடி வாழுங் கொல்லோ?* 

    நாடும் நகரும் அறிய*  நல்லது ஓர் கண்ணாலம் செய்து* 
    சாடு இறப் பாய்ந்த பெருமான்*  தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*


    அண்டத்து அமரர் பெருமான்*  ஆழியான் இன்று என்மகளைப்* 
    பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?* 

    கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து*  கோவலப் பட்டம் கவித்துப்* 
    பண்டை மணாட்டிமார் முன்னே*  பாதுகாவல் வைக்குங் கொல்லோ?* 


    குடியிற் பிறந்தவர் செய்யும்*  குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!* 
    நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!*  நந்தகோபன் மகன் கண்ணன்* 

    இடை இருபாலும் வணங்க*  இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்* 
    கடைகயிறே பற்றி வாங்கிக்*  கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?* 


    வெண்ணிறத் தோய் தயிர் தன்னை*  வெள்வரைப்பின் முன் எழுந்து* 
    கண் உறங்காதே இருந்து*  கடையவும் தான்வல்லள் கொல்லோ?* 

    ஒண்ணிறத் தாமரைச் செங்கண்*  உலகளந்தான் என்மகளைப்* 
    பண் அறையாப் பணிகொண்டு*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*


    மாயவன் பின்வழி சென்று*  வழியிடை மாற்றங்கள் கேட்டு* 
    ஆயர்கள் சேரியிலும் புக்கு*  அங்குத்தை மாற்றமும் எல்லாம்*

    தாயவள் சொல்லிய சொல்லைப்*  தண் புதுவைப் பட்டன் சொன்ன* 
    தூய தமிழ் பத்தும் வல்லார்*  தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2) 


    மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
    ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 

    தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
    போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)


    பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
    இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*

    மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
    சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.


    மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
    உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 

    திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
    பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே.


    கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
    ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 

    கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
    தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.


    பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
    உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 

    குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
    திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.


    கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
    ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*

    தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
    யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.


    கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
    பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 

    தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
    தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.


    வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
    எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*

    எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
    மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.


    குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
    நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 

    குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
    மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.


    பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
    செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*

    திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
    இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)