பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப*  மருங்கின் மேல்* 
    ஆணிப் பொன்னாற் செய்த*  ஆய்பொன் உடை மணி* 

    பேணி பவளவாய்*  முத்துஇலங்க*  பண்டு- 
    காணி கொண்ட கைகளால் சப்பாணி* 
    கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)  


    பொன் அரைநாணொடு*  மாணிக்கக் கிண்கிணி* 
    தன் அரை ஆட*  தனிச் சுட்டி தாழ்ந்து ஆட* 

    என் அரை மேல்நின்று இழிந்து*  உங்கள் ஆயர்தம்*   
    மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி* 
    மாயவனே*  கொட்டாய் சப்பாணி  


    பல் மணி முத்து*  இன்பவளம் பதித்தன்ன* 
    என் மணிவண்ணன்*  இலங்கு பொற் தோட்டின் மேல்* 

    நின் மணிவாய் முத்து இலங்க*  நின் அம்மைதன்* 
    அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
    ஆழியங் கையனே சப்பாணி      


    தூ நிலாமுற்றத்தே*  போந்து விளையாட* 
    வான் நிலா அம்புலீ*  சந்திரா! வா என்று*

    நீ நிலா நிற் புகழாநின்ற*  ஆயர்தம்* 
    கோ நிலாவ கொட்டாய் சப்பாணி* 
    குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.  


    புட்டியிற் சேறும்*  புழுதியும் கொண்டுவந்து* 
    அட்டி அமுக்கி*  அகம் புக்கு அறியாமே* 

    சட்டித் தயிரும்*  தடாவினில் வெண்ணெயும் உண்* 
    பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி* 
    பற்பநாபா! கொட்டாய் சப்பாணி. 


    தாரித்து நூற்றுவர்*  தந்தை சொற் கொள்ளாது* 
    போர் உய்த்து வந்து*  புகுந்தவர் மண் ஆளப்* 

    பாரித்த மன்னர் படப்*  பஞ்சவர்க்கு*  அன்று- 
    தேர் உய்த்த கைகளால் சப்பாணி* 
    தேவகி சிங்கமே! சப்பாணி       


    பரந்திட்டு நின்ற*  படுகடல் தன்னை* 
    இரந்திட்ட கைம்மேல்*  எறிதிரை மோதக்* 

    கரந்திட்டு நின்ற*  கடலைக் கலங்கச்* 
    சரந் தொட்ட கைகளால் சப்பாணி* 
    சார்ங்க விற்கையனே! சப்பாணி.  


    குரக்கு இனத்தாலே*  குரைகடல் தன்னை* 
    நெருக்கி அணை கட்டி*  நீள் நீர் இலங்கை*

    அரக்கர் அவிய*  அடு கணையாலே* 
    நெருக்கிய கைகளால் சப்பாணி* 
    நேமியங் கையனே! சப்பாணி.  


    அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
    வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*

    உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
    பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
    பேய் முலை உண்டானே! சப்பாணி.


    அடைந்திட்டு அமரர்கள்*  ஆழ்கடல் தன்னை* 
    மிடைந்திட்டு மந்தரம்*  மத்தாக நாட்டி* 

    வடம் சுற்றி*  வாசுகி வன்கயிறு ஆகக்* 
    கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
    கார்முகில் வண்ணனே! சப்பாணி    


    ஆட்கொள்ளத் தோன்றிய*  ஆயர்தம் கோவினை* 
    நாட்கமழ் பூம்பொழில்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்* 
    வேட்கையினால் சொல்லுவார்*  வினை போதுமே (2)   


    ஆனிரை மேய்க்க நீ போதி*  அருமருந்து ஆவது அறியாய்* 
    கானகம் எல்லாம் திரிந்து*  உன் கரிய திருமேனி வாட* 

    பானையிற் பாலைப் பருகிப்*  பற்றாதார் எல்லாம் சிரிப்ப* 
    தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2) 


    கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
    உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 

    திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
    மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 


    மச்சொடு மாளிகை ஏறி*  மாதர்கள்தம் இடம் புக்கு* 
    கச்சொடு பட்டைக் கிழித்து*  காம்பு துகில் அவை கீறி* 

    நிச்சலும் தீமைகள் செய்வாய்!*  நீள் திருவேங்கடத்து எந்தாய்!* 
    பச்சைத் தமனகத்தோடு*  பாதிரிப் பூச் சூட்ட வாராய்.


    தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்*  தீமை செய்யாதே* 
    மருவும் தமனகமும் சீர்*  மாலை மணம் கமழ்கின்ற*

    புருவம் கருங்குழல் நெற்றி*  பொலிந்த முகிற்-கன்று போலே* 
    உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.


    புள்ளினை வாய் பிளந்திட்டாய்!*  பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!* 
    கள்ள அரக்கியை மூக்கொடு*  காவலனைத் தலை கொண்டாய்!* 

    அள்ளி நீ வெண்ணெய் விழுங்க*  அஞ்சாது அடியேன் அடித்தேன்* 
    தெள்ளிய நீரில் எழுந்த*  செங்கழுநீர் சூட்ட வாராய்.


    எருதுகளோடு பொருதி*  ஏதும் உலோபாய் காண் நம்பீ!* 
    கருதிய தீமைகள் செய்து*  கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!* 

    தெருவின்கண் தீமைகள் செய்து*  சிக்கென மல்லர்களோடு* 
    பொருது வருகின்ற பொன்னே*  புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.


    குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!* 
    மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!* 

    இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!* 
    குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.


    சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
    சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 

    ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
    ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.


    அண்டத்து அமரர்கள் சூழ*  அத்தாணியுள் அங்கு இருந்தாய்!* 
    தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!*  தூமலராள் மணவாளா!*

    உண்டிட்டு உலகினை ஏழும்*  ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!* 
    கண்டு நான் உன்னை உகக்கக்*  கருமுகைப் பூச் சூட்ட வாராய்.


    செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி* 
    எண் பகர் பூவும் கொணர்ந்தேன்*  இன்று இவை சூட்ட வா என்று* 

    மண் பகர் கொண்டானை*  ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை* 
    பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)


    ஐய புழுதி உடம்பு அளைந்து*  இவள் பேச்சும் அலந்தலையாய்ச்* 
    செய்ய நூலின் சிற்றாடை*  செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்* 

    கையினில் சிறுதூதை யோடு*  இவள் முற்றில் பிரிந்தும் இலள்* 
    பை அரவணைப் பள்ளியானொடு*  கைவைத்து இவள்வருமே.* (2)


    வாயிற் பல்லும் எழுந்தில*  மயிரும் முடி கூடிற்றில* 
    சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி* 

    தீ இணக்கு இணங்கு ஆடி வந்து*  இவள் தன் அன்ன செம்மை சொல்லி* 
    மாயன் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே* 


    பொங்கு வெண்மணல் கொண்டு*  சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்* 
    சங்கு சக்கரம் தண்டு வாள்*  வில்லும் அல்லது இழைக்கலுறாள்* 

    கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில*  கோவிந்தனோடு இவளைச்* 
    சங்கை யாகி என் உள்ளம்*  நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.* 


    ஏழை பேதை ஓர் பாலகன் வந்து*  என் பெண்மகளை எள்கி* 
    தோழிமார் பலர் கொண்டுபோய்ச்*  செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?* 

    ஆழியான் என்னும் ஆழ மோழையில்*  பாய்ச்சி அகப்படுத்தி* 
    மூழை உப்பு அறியாது என்னும்*  மூதுரையும் இலளே*


    நாடும் ஊரும் அறியவே போய்*  நல்ல துழாய் அலங்கல்- 
    சூடி*  நாரணன் போம் இடம் எல்லாம்*  சோதித்து உழிதர்கின்றாள்* 

    கேடு வேண்டுகின்றார் பலர் உளர்*  கேசவனோடு இவளைப்* 
    பாடிகாவல் இடுமின் என்று என்று*  பார் தடுமாறினதே.*


    பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து*  இவள் பாடகமும் சிலம்பும்* 
    இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு*  என்னோடு இருக்கலுறாள்*

    பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று*  இவள் பூவைப் பூவண்ணா என்னும்* 
    வட்ட வார் குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    பேசவும் தரியாத பெண்மையின்*  பேதையேன் பேதை இவள்* 
    கூசமின்றி நின்றார்கள்*  தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்* 

    கேசவா என்றும் கேடிலீ என்றும்*  கிஞ்சுக வாய் மொழியாள்* 
    வாச வார்குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    காறை பூணும் கண்ணாடி காணும்*  தன் கையில் வளை குலுக்கும்* 
    கூறை உடுக்கும் அயர்க்கும்*  தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* 

    தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்*  தேவன் திறம் பிதற்றும்* 
    மாறில் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே.*


    கைத்தலத்து உள்ள மாடு அழியக்*  கண்ணாலங்கள் செய்து*  இவளை- 
    வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?*  நம்மை வடுப்படுத்தும்*

    செய்த்தலை எழு நாற்றுப் போல்*  அவன் செய்வன செய்துகொள்ள* 
    மைத் தடமுகில் வண்ணன் பக்கல்*  வளர விடுமின்களே.*


    பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து*   பேணி நம் இல்லத்துள்ளே* 
    இருத்துவான் எண்ணி நாம் இருக்க*  இவளும் ஒன்று எண்ணுகின்றாள்* 

    மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்*  வார்த்தை படுவதன்முன்* 
    ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*


    ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்*  நாராயணனுக்கு*  இவள்- 
    மாலதாகி மகிழ்ந்தனள் என்று*  தாய் உரை செய்ததனை* 

    கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் சொன்ன* 
    மாலை பத்தும் வல்லவர்கட்கு*  இல்லை வரு துயரே.* (2)


    தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்* 
    எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

    கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்* 
    கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)


    சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச* 
    மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்* 
    கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.  


    அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு- 
    எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

    சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
    கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே 


    இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை* 
    நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

    இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
    கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்* 
    மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்* 
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு* 
    மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட* 
    கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி* 
    மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்* 
    கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 


    திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்* 
    அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*

    நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு- 
    கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.


     வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
    இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


     மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை- 
    ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்* 
    கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


    பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்* 
    வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

    தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு* 
    கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)