பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *  ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்* 
    பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*

    செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி*  செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக* 
    ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)  


    கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*  குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!* 
    மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி*  மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*

    காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்*  கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!* 
    ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!*  நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்- 
    தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்*  தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 

    விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்*  விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!* 
    அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள*  வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!* 
    கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்*  கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!* 

    தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்*  என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
    ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.  


    மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்*  வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி*  ஒருங்கு- 
    ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை*  ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!* 

    முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்*  முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய* 
    அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!*  கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே* 
    தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*  துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 

    ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை*  அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!* 
    ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே  


    துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்*  தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய* 
    நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய*  நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!* 

    தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்*  தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய*  என்- 
    அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்* 
    கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 

    மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!* 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே 


    பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்*  பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
    கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்*  கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக* 

    நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே*   நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ* 
    ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.    


    செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்*  சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்*  அரையிற்- 
    தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்*  பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்* 

    மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்*  மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக* 
    எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே. 


    அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 

    அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
    இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  


    வேலிக் கோல் வெட்டி*  விளையாடு வில் ஏற்றி* 
    தாலிக் கொழுந்தைத்*  தடங்கழுத்திற் பூண்டு*

    பீலித் தழையைப்*  பிணைத்துப் பிறகிட்டு* 
    காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)


    கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்* 
    எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்* 

    சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல் 
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா! 
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.


    கறுத்திட்டு எதிர்நின்ற*  கஞ்சனைக் கொன்றான்* 
    பொறுத்திட்டு எதிர்வந்த*  புள்ளின் வாய் கீண்டான்* 

    நெறித்த குழல்களை*  நீங்க முன் ஓடிச்* 
    சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!


    ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்* 
    துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*

    சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்* 
    கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா 
    கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    சீர் ஒன்று தூதாய்த்*  திரியோதனன் பக்கல்* 
    ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்* 

    பார் ஒன்றிப் பாரதம்*  கைசெய்து பார்த்தற்குத்* 
    தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா 


    ஆலத்து இலையான்*  அரவின் அணை மேலான்* 
    நீலக் கடலுள்*  நெடுங்காலம் கண்வளர்ந்தான்*

    பாலப் பிராயத்தே*  பார்த்தற்கு அருள்செய்த*  
    கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா! 
    குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    பொற்றிகழ்*  சித்திரகூடப் பொருப்பினில்* 
    உற்ற வடிவில்*  ஒரு கண்ணும் கொண்ட* அக் 

    கற்றைக் குழலன்*  கடியன் விரைந்து உன்னை* 
    மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா! 
    மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!


    மின்னிடைச் சீதை பொருட்டா*  இலங்கையர்* 
    மன்னன் மணிமுடி*  பத்தும் உடன் வீழத்* 

    தன் நிகர் ஒன்று இல்லாச்*  சிலை கால் வளைத்து இட்ட* 
    மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து* 
    மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு* 

    என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற* 
    மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    அக்காக்காய்! நம்பிக்குக்*  கோல் கொண்டு வா என்று* 
    மிக்காள் உரைத்த சொல்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    ஒக்க உரைத்த*  தமிழ் பத்தும் வல்லவர்* 
    மக்களைப் பெற்று*  மகிழ்வர் இவ் வையத்தே.


    நாவலம் பெரிய தீவினில் வாழும்*  நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்* 
    தூ வலம்புரி உடைய திருமால்*  தூய வாயிற் குழல்-ஓசை வழியே* 

    கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப*  உடல் உள் அவிழ்ந்து*  எங்கும்- 
    காவலும் கடந்து கயிறுமாலை*  ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)  


    இட அணரை இடத் தோளொடு சாய்த்து*  இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்* 
    குடவயிறு பட வாய் கடைகூடக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    மட மயில்களொடு மான்பிணை போலே*  மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ* 
    உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி*  ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*


    வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 
    கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்* 
    தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*


    தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*  தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்* 
    கானகம் படி உலாவி உலாவிக்*  கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது* 

    மேனகையொடு திலோத்தமை அரம்பை*  உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி* 
    வானகம் படியில் வாய் திறப்பு இன்றி*  ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a


    முன் நரசிங்கமது ஆகி*  அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்- 
    மன்னர் அஞ்சும்*  மதுசூதனன் வாயிற்*  குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க* 

    நன் நரம்பு உடைய தும்புருவோடு*  நாரதனும் தம் தம் வீணை மறந்து* 
    கின்னர மிதுனங்களும் தம் தம்*  கின்னரம் தொடுகிலோம் என்றனரே* 


    செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்*  தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்* 
    நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்*  கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*

    அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*  அமுத கீத வலையால் சுருக்குண்டு* 
    நம் பரம் அன்று என்று நாணி மயங்கி*  நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*


    புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
    அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 

    அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
    செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  


    சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக* 
    குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*

    பறவையின் கணங்கள் கூடு துறந்து*  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
    கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 


    திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்*  செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே* 
    சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*  ஊதுகின்ற குழல்-ஓசை வழியே* 

    மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து*  மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர* 
    இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா*  எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*


    கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து*  கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை* 
    அருங்கல உருவின் ஆயர் பெருமான்*  அவனொருவன் குழல் ஊதின போது* 

    மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*  மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்* 
    இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி*  அவை செய்யும் குணமே.*


    குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
    குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 

    குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
    குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)


    காசும் கறைஉடைக் கூறைக்கும்*  அங்குஓர் கற்றைக்கும்- 
    ஆசையினால்*  அங்குஅவத்தப் பேர்இடும்*  ஆதர்காள்!*

    கேசவன் பேர்இட்டு*  நீங்கள் தேனித்துஇருமினோ* 
    நாயகன் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்  (2)


    அங்குஒருகூறை*  அரைக்கு உடுப்பதன் ஆசையால்* 
    மங்கிய மானிடசாதியின்*  பேர்இடும் ஆதர்காள்!*

    செங்கண்நெடுமால்!*  சிரீதரா! என்று அழைத்தக்கால்* 
    நங்கைகாள்! நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    உச்சியில் எண்ணெயும்*  சுட்டியும் வளையும் உகந்து* 
    எச்சம் பொலிந்தீர்காள்!*  என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*

    பிச்சைபுக்குஆகிலும்*  எம்பிரான் திருநாமமே- 
    நச்சுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.  


    மானிட சாதியில் தோன்றிற்று*  ஓர் மானிடசாதியை* 
    மானிட சாதியின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    வானுடை மாதவா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நானுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மலமுடை ஊத்தையில் தோன்றிற்று*  ஓர் மல ஊத்தையை* 
    மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    குலமுடைக் கோவிந்தா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நலமுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள். 


    நாடும் நகரும் அறிய*  மானிடப் பேர்இட்டு* 
    கூடிஅழுங்கிக்*  குழியில் வீழ்ந்து வழுக்காதே*

    சாடிறப் பாய்ந்த தலைவா!*  தாமோதரா! என்று- 
    நாடுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு- 
    எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்*  ஏழை மனிசர்காள்!*

    கண்ணுக்குஇனிய*  கருமுகில் வண்ணன் நாமமே- 
    நண்ணுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்


    நம்பி பிம்பிஎன்று*  நாட்டு மானிடப் பேர்இட்டால்* 
    நம்பும் பிம்பும்எல்லாம்*  நாலுநாளில் அழுங்கிப்போம்*

    செம்பெருந்தாமரைக் கண்ணன்*  பேர்இட்டுஅழைத்தக்கால்* 
    நம்பிகாள் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    ஊத்தைக்குழியில்*  அமுதம் பாய்வதுபோல்*  உங்கள்- 
    மூத்திரப்பிள்ளையை*  என் முகில்வண்ணன் பேர் இட்டு*

    கோத்துக் குழைத்துக்*  குணாலம்ஆடித் திரிமினோ* 
    நாத்தகு நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    சீர்அணி மால்*  திருநாமமே இடத்தேற்றிய* 
    வீர்அணி தொல்புகழ்*  விட்டுசித்தன் விரித்த*

    ஓரணியொண்தமிழ்*  ஒன்பதோடுஒன்றும் வல்லவர்* 
    பேர்அணி வைகுந்தத்து*  என்றும் பேணியிருப்பரே. (2)