பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    சீதக் கடலுள்*  அமுது அன்ன தேவகி* 
    கோதைக் குழலாள்*  அசோதைக்குப் போத்தந்த*

    பேதைக் குழவி*  பிடித்துச் சுவைத்து உண்ணும்*
    பாதக் கமலங்கள் காணீரே* 
      பவள வாயீர் வந்து காணீரே  (2) 


    முத்தும் மணியும்*  வயிரமும் நன்பொன்னும்*
    தத்திப் பதித்துத்*  தலைப்பெய்தாற் போல்*  எங்கும்

    பத்து விரலும்*  மணிவண்ணன் பாதங்கள்* 
    ஒத்திட்டு இருந்தவா காணீரே* 
          ஒண்ணுதலீர்! வந்து காணீரே


    பணைத்தோள் இள ஆய்ச்சி*  பால் பாய்ந்த கொங்கை*
    அணைத்து ஆர உண்டு*  கிடந்த இப் பிள்ளை*

    இணைக்காலில்*  வெள்ளித் தளை நின்று இலங்கும்*
    கணைக்கால் இருந்தவா காணீரே*
          காரிகையீர்! வந்து காணீரே


    உழந்தாள் நறுநெய்*  ஒரோர் தடா உண்ண*
    இழந்தாள் எரிவினால்*  ஈர்த்து எழில் மத்தின்*

    பழந்தாம்பால் ஓச்ச*  பயத்தால் தவழ்ந்தான்**
    முழந்தாள் இருந்தவா காணீரே*
          முகிழ்முலையீர் வந்து காணீரே


    பிறங்கிய பேய்ச்சி*  முலை சுவைத்து உண்டிட்டு*
    உறங்குவான் போலே*  கிடந்த இப்பிள்ளை*

    மறம் கொள் இரணியன்*  மார்வை முன் கீண்டான்*
    குறங்குகளை வந்து காணீரே* 
          குவிமுலையீர் வந்து காணீரே


    மத்தக் களிற்று*  வசுதேவர் தம்முடைச்* 
    சித்தம் பிரியாத*  தேவகிதன் வயிற்றில்*

    அத்தத்தின் பத்தாம் நாள்*  தோன்றிய அச்சுதன்* 
    முத்தம் இருந்தவா காணீரே* 
          முகிழ்நகையீர் வந்து காணீரே


    இருங்கை மதகளிறு*  ஈர்க்கின்றவனைப்* 
    பருங்கிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 

    நெருங்கு பவளமும்*  நேர்நாணும் முத்தும்* 
    மருங்கும் இருந்தவா காணீரே* 
          வாணுதலீர் வந்து காணீரே


    வந்த மதலைக்*  குழாத்தை வலிசெய்து* 
    தந்தக் களிறு போல்*  தானே விளையாடும்*

    நந்தன் மதலைக்கு*  நன்றும் அழகிய* 
    உந்தி இருந்தவா காணீரே* 
    ஒளியிழையீர்! வந்து காணீரே


    அதிருங் கடல்நிற வண்ணனை*  ஆய்ச்சி 
    மதுரமுலை ஊட்டி*  வஞ்சித்து வைத்துப்*

    பதறப் படாமே*  பழந் தாம்பால் ஆர்த்த* 
    உதரம் இருந்தவா காணீரே* 
    ஒளிவளையீர் வந்து காணீரே


    பெருமா உரலிற்*  பிணிப்புண்டு இருந்து*  அங்கு 
    இரு மா மருதம்*  இறுத்த இப் பிள்ளை*

    குருமா மணிப்பூண்*  குலாவித் திகழும்* 
    திருமார்வு இருந்தவா காணீரே*
    சேயிழையீர் வந்து காணீரே


    நாள்கள் ஓர் நாலைந்து*  திங்கள் அளவிலே*
    தாளை நிமிர்த்துச்*  சகடத்தைச் சாடிப்போய்*

    வாள் கொள் வளைஎயிற்று*  ஆருயிர் வவ்வினான்*
    தோள்கள் இருந்தவா காணீரே*
     சுரிகுழலீர் வந்து காணீரே 


    மைத்தடங்கண்ணி*  யசோதை வளர்க்கின்ற*
    செய்த்தலை நீல நிறத்துச்*  சிறுப்பிள்ளை*

    நெய்த்தலை நேமியும்*  சங்கும் நிலாவிய* 
    கைத்தலங்கள் வந்து காணீரே* 
    கனங்குழையீர் வந்து காணீரே


    வண்டு அமர் பூங்குழல்*  ஆய்ச்சி மகனாகக்* 
    கொண்டு வளர்க்கின்ற*  கோவலக் குட்டற்கு*

    அண்டமும் நாடும்*  அடங்க விழுங்கிய* 
    கண்டம் இருந்தவா காணீரே* 
    காரிகையீர்! வந்து காணீரே


    எம் தொண்டை வாய்ச் சிங்கம்*  வா என்று எடுத்துக்கொண்டு* 
    அந் தொண்டை வாய்*  அமுது ஆதரித்து*  ஆய்ச்சியர்

    தம் தொண்டை வாயால்*  தருக்கிப் பருகும்*  இச் 
    செந் தொண்டை வாய் வந்து காணீரே* 
    சேயிழையீர்! வந்து காணீரே


    நோக்கி யசோதை*  நுணுக்கிய மஞ்சளால்* 
    நாக்கு வழித்து*  நீராட்டும் இந் நம்பிக்கு*

    வாக்கும் நயனமும்*  வாயும் முறுவலும்* 
    மூக்கும் இருந்தவா காணீரே* 
     மொய்குழலீர் வந்து காணீரே


    விண்கொள் அமரர்கள்*  வேதனை தீர*  முன் 
    மண்கொள் வசுதேவர்*  தம் மகனாய் வந்து*

    திண்கொள் அசுரரைத்*  தேய வளர்கின்றான்* 
    கண்கள் இருந்தவா காணீரே* 
     கனவளையீர் வந்து காணீரே


    பருவம் நிரம்பாமே*  பாரெல்லாம் உய்யத்*
    திருவின் வடிவு ஒக்கும்*  தேவகி பெற்ற*

    உருவு கரிய*  ஒளி மணிவண்ணன்*
    புருவம் இருந்தவா காணீரே* 
    பூண்முலையீர்! வந்து காணீரே


    மண்ணும் மலையும்*  கடலும் உலகு ஏழும்* 
    உண்ணுந் திறத்து*  மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*

    வண்ணம் எழில்கொள்*  மகரக்குழை இவை* 
    திண்ணம் இருந்தவா காணீரே* 
     சேயிழையீர்! வந்து காணீரே


    முற்றிலும் தூதையும்*  முன்கைமேல் பூவையும்* 
    சிற்றில் இழைத்துத்*  திரிதருவோர்களைப்*

    பற்றிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 
    நெற்றி இருந்தவா காணீரே* 
    நேரிழையீர்! வந்து காணீரே


    அழகிய பைம்பொன்னின்*  கோல் அங்கைக் கொண்டு* 
    கழல்கள் சதங்கை*  கலந்து எங்கும் ஆர்ப்ப* 

    மழ கன்றினங்கள்*  மறித்துத் திரிவான்* 
    குழல்கள் இருந்தவா காணீரே* 
     குவிமுலையீர் வந்து காணீரே


    சுருப்பார் குழலி*  யசோதை முன் சொன்ன* 
    திருப் பாதகேசத்தைத்*  தென்புதுவைப் பட்டன்*

    விருப்பால் உரைத்த*  இருபதோடு ஒன்றும் 
    உரைப்பார் போய்*  வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)


    போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்*  பொரு திறற் கஞ்சன் கடியன்* 
    காப்பாரும் இல்லை கடல்வண்ணா*  உன்னை தனியே போய் எங்கும் திரிதி*

    பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!*  கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த* 
    ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்*  அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)


    வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி*  மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப* 
    நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத*  நாராயணா! இங்கே வாராய்* 

    எண்ணற்கு அரிய பிரானே*  திரியை எரியாமே காதுக்கு இடுவன்* 
    கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய*  கனகக் கடிப்பும் இவையாம்!


    வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்*  மகரக்குழை கொண்டுவைத்தேன்* 
    வெய்யவே காதில் திரியை இடுவன்*  நீ வேண்டிய தெல்லாம் தருவன்*

    உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய*  ஒண்சுடர் ஆயர்கொழுந்தே* 
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து*  மாதவனே! இங்கே வாராய்


    வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு*  வார்காது தாழப் பெருக்கிக்* 
    குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்*  கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*

    இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்*  இனிய பலாப்பழம் தந்து* 
    சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்*  சுரிகுழலாரொடு நீ போய்க்* 
    கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்*  குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*

    பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்*  பிரானே! திரியிட ஒட்டில்* 
    வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்*  விட்டுவே! நீ இங்கே வாராய்


    விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!*  உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி* 
    மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி*  மதுசூதனே என்று இருந்தேன்*

    புண் ஏதும் இல்லை உன்காது மறியும்*  பொறுத்து இறைப் போது இரு நம்பீ! 
    கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா*  காவலனே! முலை உணாயே   


    முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
    மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

    சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!* 
    தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?


    என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்*  என்னை நான் மண் உண்டேனாக* 
    அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்*  அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*

    வன் புற்று அரவின் பகைக் கொடி*  வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்* 
    துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே


    மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்*  தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று* 
    கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்*  காணவே கட்டிற்றிலையே?*

    செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்*  சிரீதரா! உன்காது தூரும்* 
    கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற*  காரிகையார் சிரியாமே


    காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்*  காதுகள் வீங்கி எரியில்?* 
    தாரியா தாகில் தலை நொந்திடும் என்று*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?*

    சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்*  திரியவும் காண்டி* 
    ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட*  இருடிகேசா! என்தன் கண்ணே!


    கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்*  கடிகமழ் பூங்குழலார்கள்* 
    எண்ணத்துள் என்றும் இருந்து*  தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே* 

    உண்ணக் கனிகள் தருவன்*  கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்* 
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட*  பற்பநாபா இங்கே வாராய்    


    வா என்று சொல்லி என்கையைப் பிடித்து*  வலியவே காதிற் கடிப்பை* 
    நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?*  காதுகள் நொந்திடும் கில்லேன்*

    நாவற் பழம் கொண்டுவைத்தேன்*  இவை காணாய் நம்பீ*  முன் வஞ்ச மகளைச் 
    சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட*  தாமோதரா இங்கே வாராய்


    வார் காது தாழப் பெருக்கி அமைத்து*  மகரக்குழை இட வேண்டிச்* 
    சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்*  சிந்தையுள் நின்று திகழப்*

    பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்*  பன்னிரு நாமத்தால் சொன்ன* 
    ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்*  அச்சுதனுக்கு அடியாரே (2)


    சீலைக் குதம்பை ஒருகாது*  ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ* 
    கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்*  குளிர் முத்தின் கோடாலமும்*

    காலிப் பின்னே வருகின்ற*  கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்* 
    ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்*  நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை  (2)


    கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
    மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*

    உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
    என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*


    காடுகள் ஊடு போய்க்*  கன்றுகள் மேய்த்து மறியோடிக்*  கார்க்கோடற்பூச்- 
    சூடி வருகின்ற தாமோதரா!*  கற்றுத் தூளி காண் உன் உடம்பு*

    பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!*  நீராட்டு அமைத்து வைத்தேன்* 
    ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்*  உன்னோடு உடனே உண்பான்*


    கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!*  கரும் போரேறே!*  நீ உகக்கும்- 
    குடையும் செருப்பும் குழலும்*  தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*

    கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*  சிறுக்குட்டச் செங் கமல* 
    அடியும் வெதும்பி*  உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!* 


    பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை*  வாய்வைத்த போரேறே!*  என்
    சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!*  சிறுக்குட்டச் செங்கண் மாலே!*

    சிற்றாடையும் சிறுப்பத்திரமும்*  இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்* 
    கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்*  கலந்து உடன் வந்தாய் போலும்*


    அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!*  நீ பொய்கை புக்கு* 
    நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்*  நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*

    என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?*  ஏதும் ஓர் அச்சம் இல்லை* 
    கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்*  காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*


    பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய*  பாற்கடல் வண்ணா!*  உன்மேல்- 
    கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த*  கள்ள அசுரர் தம்மைச்*

    சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே*  விளங்காய் எறிந்தாய் போலும்* 
    என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்*  அங்ஙனம் ஆவர்களே*


    கேட்டு அறியாதன கேட்கின்றேன்*  கேசவா! கோவலர் இந்திரற்குக்* 
    காட்டிய சோறும் கறியும் தயிரும்*  கலந்து உடன் உண்டாய் போலும்*

    ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு*  ஒருபோதும் எனக்கு அரிது* 
    வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!*  உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*


    திண் ஆர் வெண்சங்கு உடையாய்!*  திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்*  முன்- 
    பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்*  பல்லாண்டு கூறுவித்தேன்*

    கண்ணாலம் செய்யக்*  கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்* 
    கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்*  கோலம் செய்து இங்கே இரு*


    புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி*  தன் புத்திரன் கோவிந்தனைக்* 
    கற்றினம் மேய்த்து வரக் கண்டு*  உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*

    செற்றம் இலாதவர் வாழ்தரு*  தென்புது வை விட்டுசித்தன் சொல்* 
    கற்று இவை பாட வல்லார்*  கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)


    உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
    உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*

    பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
    விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)


    கஞ்சனும்காளியனும்*  களிறும்மருதும்எருதும்* 
    வஞ்சனையில்மடிய*  வளர்ந்தமணிவண்ணன்மலை*

    நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி*  நளிர்மாமதியைச்* 
    செஞ்சுடர்நாவளைக்கும்*  திருமாலிருஞ்சோலையதே.


    மன்னுநரகன்தன்னைச்*  சூழ்போகிவளைத்துஎறிந்து* 
    கன்னிமகளிர்தம்மைக்*  கவர்ந்தகடல்வண்ணன்மலை*

    புன்னைசெருந்தியொடு*  புனவேங்கையும்கோங்கும்நின்று* 
    பொன்அரிமாலைகள்சூழ்*  பொழில்மாலிருஞ்சோலையதே.


    மாவலிதன்னுடைய*  மகன்வாணன்மகள்இருந்த* 
    காவலைக்கட்டழித்த*  தனிக் காளை கருதும் மலை*

    கோவலர்கோவிந்தனைக்*  குற மாதர்கள் பண் குறிஞ்சிப்* 
    பாஒலிபாடிநடம்பயில்*  மாலிருஞ் சோலையதே.


    பலபலநாழம்சொல்லிப்*  பழித்தசிசுபாலன்தன்னை* 
    அலைவலைமை தவிர்த்த*  அழகன்அலங்காரன்மலை*

    குலமலைகோலமலை*  குளிர்மாமலைகொற்றமலை* 
    நிலமலைநீண்டமலை*  திருமாலிருஞ்சோலையதே.


    பாண்டவர்தம்முடைய*  பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்* 
    ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்*  பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*

    பாண்தகு வண்டினங்கள்*  பண்கள்பாடிமதுப்பருக* 
    தோண்டல்உடையமலை*  தொல்லைமாலிருஞ்சோலையதே.


    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்- 
    இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*

    கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்* 
    இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.


    எரிசிதறும்சரத்தால்*  இலங்கையினைத்*  தன்னுடைய- 
    வரிசிலைவாயிற்பெய்து*  வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*

    அரையன்அமரும்மலை*  அமரரொடுகோனும்சென்று* 
    திரிசுடர்சூழும்மலை*  திருமாலிருஞ்சோலையதே.


    கோட்டுமண்கொண்டுஇடந்து*  குடங்கையில்மண்கொண்டுஅளந்து* 
    மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து*  விளையாடும்விமலன்மலை*

    ஈட்டியபல்பொருள்கள்*  எம்பிரானுக்குஅடியுறைஎன்று* 
    ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை*  மாலிருஞ்சோலையதே.


    ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
    ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*

    ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
    ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)


    மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
    நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*

    மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
    மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)


    துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
    புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 

    மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)


    வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்*  உன்தன் இந்திரஞாலங்களால்* 
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்*  நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*

    அளித்தெங்கும் நாடும்நகரமும்*  தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று* 
    தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,*  இனிப்போய்ஒருவன்- 
    தனக்குப்பணிந்து*  கடைத்தலைநிற்கை*  நின்சாயையழிவுகண்டாய்*

    புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி*  உன்பொன்னடிவாழ்கவென்று* 
    இனத்துக்குறவர் புதியதுண்ணும்*  எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)


    காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு*  அங்கோர்நிழலில்லை நீருமில்லை*  உன்- 
    பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்*  நான்எங்கும்காண்கின்றிலேன்* 

    தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்*  அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று* 
    பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    காலுமெழா கண்ணநீரும் நில்லா*  உடல்சோர்ந்து நடுங்கி*  குரல்- 
    மேலுமெழா மயிர்க்கூச்சுமறா*  எனதோள்களும் வீழ்வொழியா*

    மாலுகளாநிற்கும் என்மனனே!*  உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்* 
    சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எருத்துக் கொடியுடையானும்*  பிரமனும் இந்திரனும்*  மற்றும்- 
    ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு*  மருந்து அறிவாருமில்லை*

    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்- 
    திருத்தி*  உன்கோயில் கடைப்புகப்பெய்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி*  உன்பேரருளால்* 
    இக்கரையேறி இளைத்திருந்தேனை*  அஞ்சேலென்று கைகவியாய்*

    சக்கரமும் தடக்கைகளும்*  கண்களும் பீதகவாடையொடும்* 
    செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எத்தனைகாலமும் எத்தனையூழியும்*  இன்றொடுநாளையென்றே* 
    இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்*  இனிஉன்னைப்போகலொட்டேன்* 

    மைத்துனன்மார்களைவாழ்வித்து*  மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!* 
    சித்தம் நின்பாலதறிதியன்றே*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அன்று வயிற்றில் கிடந்திருந்தே*  அடிமைசெய்யலுற்றிருப்பன்* 
    இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்*  இனிப்போகவிடுவதுண்டே?* 

    சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்*  திருச்சக்கரமதனால்* 
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
    நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 

    பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
    ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)