பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    அரவு அணையாய்! ஆயர் ஏறே!*  அம்மம் உண்ணத் துயிலெழாயே* 
    இரவும் உண்ணாது உறங்கி நீ போய்*  இன்றும் உச்சி கொண்டதாலோ*

    வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்*  வன முலைகள் சோர்ந்து பாயத்* 
    திரு உடைய வாய்மடுத்துத்*  திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)


    வைத்த நெய்யும் காய்ந்த பாலும்*  வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
    இத்தனையும் பெற்றறியேன்*  எம்பிரான்! நீ பிறந்த பின்னை*

    எத்தனையும் செய்யப் பெற்றாய்;*  ஏதும் செய்யேன் கதம் படாதே* 
    முத்து அனைய முறுவல் செய்து*  மூக்கு உறிஞ்சி முலை உணாயே


    தந்தம் மக்கள் அழுது சென்றால்*  தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
    வந்து நின்மேற் பூசல் செய்ய*  வாழ வல்ல வாசுதேவா!*

    உந்தையார் உன்திறத்தர் அல்லர்*  உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்* 
    நந்தகோபன் அணி சிறுவா!*  நான் சுரந்த முலை உணாயே


    கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட*  கள்ளச் சகடு கலக்கு அழிய* 
    பஞ்சி அன்ன மெல்லடியால்*  பாய்ந்த போது நொந்திடும் என்று*

    அஞ்சினேன் காண் அமரர் கோவே!*  ஆயர் கூட்டத்து அளவன்றாலோ* 
    கஞ்சனை உன் வஞ்சனையால்*  வலைப்படுத்தாய்! முலை உணாயே


    தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 
    மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

    தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா* 
    ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே


    மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
    இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*

    என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
    என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)


    பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்*  பெறுதும் என்னும் ஆசையாலே* 
    கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்*  கண்ணிணையால் கலக்க நோக்கி*

    வண்டு உலாம் பூங்குழலினார்*  உன் வாயமுதம் உண்ண வேண்டிக்* 
    கொண்டு போவான் வந்து நின்றார்*  கோவிந்தா நீ முலை உணாயே 


    இரு மலை போல் எதிர்ந்த மல்லர்*  இருவர் அங்கம் எரிசெய்தாய்!*  உன் 
    திரு மலிந்து திகழு மார்வு*  தேக்க வந்து என் அல்குல் ஏறி* 

    ஒரு முலையை வாய்மடுத்து*  ஒரு முலையை நெருடிக்கொண்டு* 
    இரு முலையும் முறை முறையாய்*  ஏங்கி ஏங்கி இருந்து உணாயே


    அங் கமலப் போதகத்தில்*  அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்* 
    செங் கமல முகம் வியர்ப்ப*  தீமை செய்து இம் முற்றத்தூடே*

    அங்கம் எல்லாம் புழுதியாக*  அளைய வேண்டா அம்ம! விம்ம* 
    அங்கு அமரர்க்கு அமுது அளித்த*  அமரர் கோவே! முலை உணாயே


    ஓட ஓடக் கிண்கிணிகள்*  ஒலிக்கும் ஓசைப் பாணியாலே* 
    பாடிப் பாடி வருகின்றாயைப்*  பற்பநாபன் என்று இருந்தேன்*

    ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு*  அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி* 
    ஓடி ஒடிப் போய்விடாதே*  உத்தமா! நீ முலை உணாயே


    வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி*  மாதவா! உண் என்ற மாற்றம்* 
    நீர் அணிந்த குவளை வாசம்*  நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*

    பார் அணிந்த தொல் புகழான்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    சீர் அணிந்த செங்கண்மால் மேல்*  சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)   


    அஞ்சன வண்ணனை*  ஆயர் கோலக் கொழுந்தினை* 
    மஞ்சனம் ஆட்டி*  மனைகள்தோறும் திரியாமே*

    கஞ்சனைக் காய்ந்த*  கழல் அடி நோவக் கன்றின்பின்* 
    என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!* (2)


    பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்* 
    சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

    கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*


    நன்மணி மேகலை*  நங்கைமாரொடு நாள்தொறும்* 
    பொன்மணி மேனி*  புழுதியாடித் திரியாமே*

    கல்மணி நின்று அதிர்*  கான்- அதரிடைக் கன்றின்பின்* 
    என் மணிவண்ணனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்* 
    பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்* 
    எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    அவ்வவ் இடம் புக்கு*  அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்* 
    கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்*  கூழைமை செய்யாமே*

    எவ்வும் சிலை உடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    தெய்வத் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்* 
    படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வள்ளி நுடங்கு-இடை*  மாதர் வந்து அலர் தூற்றிடத்* 
    துள்ளி விளையாடித்*  தோழரோடு திரியாமே*

    கள்ளி உணங்கு*  வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    புள்ளின் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    பன்னிரு திங்கள்*  வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்* 
    என் இளங் கொங்கை*  அமுதம் ஊட்டி எடுத்து யான்*

    பொன்னடி நோவப்*  புலரியே கானிற் கன்றின் பின்* 
    என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    குடையும் செருப்பும் கொடாதே*  தாமோதரனை நான்* 
    உடையும் கடியன ஊன்று*  வெம் பரற்கள் உடைக்*

    கடிய வெங் கானிடைக்*  கால்- அடி நோவக் கன்றின் பின்* 
    கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்*  :எல்லே பாவமே!*


    என்றும் எனக்கு இனியானை*  என் மணிவண்ணனைக்* 
    கன்றின் பின் போக்கினேன் என்று*  அசோதை கழறிய*

    பொன் திகழ் மாடப்*  புதுவையர்கோன் பட்டன் சொல்* 
    இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு*  இடர் இல்லையே* (2)


    அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
    குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*

    சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
    சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)


    வல்லாளன்தோளும்*  வாளரக்கன்முடியும்*  தங்கை- 
    பொல்லாதமூக்கும்*  போக்குவித்தான்பொருந்தும்மலை*

    எல்லாஇடத்திலும்*  எங்கும்பரந்து பல்லாண்டுஒலி- 
    செல்லாநிற்கும் சீர்த்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    தக்கார்மிக்கார்களைச்*  சஞ்சலம்செய்யும்சலவரை*
    தெக்காநெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*

    எக்காலமும்சென்று*  சேவித்திருக்கும் அடியரை* 
    அக்கான்நெறியைமாற்றும்*  தண் மாலிருஞ்சோலையே.


    ஆனாயர்கூடி*  அமைத்தவிழவை*  அமரர்தம்- 
    கோனார்க்கொழியக்*  கோவர்த்தனத்துச்செய்தான்மலை*

    வான்நாட்டினின்று*  மாமலர்க்கற்பகத்தொத்துஇழி* 
    தேனாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    ஒருவாரணம் பணிகொண்டவன்*  பொய்கையில் கஞ்சன்தன்- 
    ஒருவாரணம் உயிர்உண்டவன்*  சென்றுறையும்மலை*

    கருவாரணம்*  தன்பிடிதுறந்துஓடக்*  கடல்வண்ணன்- 
    திருவாணைகூறத்திரியும்*  தண் மாலிருஞ்சோலையே. 


    ஏவிற்றுச்செய்வான்*  ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்* 
    சாவத்தகர்த்த*  சாந்த‌ணிதோள்சதுரன்மலை*

    ஆவத்தனமென்று*  அமரர்களும்நன்முனிவரும்* 
    சேவித்திருக்கும்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்* 
    முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை* 

    கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்* 
    தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே


    குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-
    சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை* 

    அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்* 
    சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    சிந்தப்புடைத்துச்*  செங்குருதிகொண்டு*  பூதங்கள்- 
    அந்திப்பலிகொடுத்து*  ஆவத்தனம்செய் அப்பன்மலை* 


    இந்திரகோபங்கள்*  எம்பெருமான் கனிவாய்ஒப்பான்* 
    சிந்தும்புறவிற்*  தென்திருமாலிருஞ்சோலையே    



    எட்டுத் திசையும்*  எண்- இறந்த பெருந் தேவிமார்*  
    விட்டு விளங்க*  வீற்றிருந்த விமலன் மலை*  

    பட்டிப்பிடிகள்*  பகடுறிஞ்சிச் சென்று*  மாலைவாய்த்- 
    தெட்டித்திளைக்கும்*  தென்திருமாலிருஞ் சோலையே.



    மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
    கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 

    விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
    கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)


    நெய்க்குடத்தைப்பற்றி*  ஏறும்எறும்புகள்போல் நிரந்து*  எங்கும்- 
    கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!*  காலம்பெற உய்யப்போமின்*

    மெய்க்கொண்டு வந்துபுகுந்து*  வேதப்பிரானார் கிடந்தார்* 
    பைக்கொண்ட பாம்புஅணையோடும்*  பண்டுஅன்று பட்டினம்காப்பே.  (2)


    சித்திரகுத்தன் எழுத்தால்*  தென்புலக்கோன் பொறிஒற்றி* 
    வைத்த இலச்சினை மாற்றித்*  தூதுவர் ஓடிஒளித்தார்*

    முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்*  மூதறிவாளர் முதல்வன்* 
    பத்தர்க்கு அமுதன்அடியேன்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    வயிற்றில் தொழுவைப்பிரித்து*   வன்புலச் சேவைஅதக்கிக்* 
    கயிற்றும் அக்குஆணி கழித்துக்*   காலிடைப் பாசம்கழற்றி*

    எயிற்றிடை மண்கொண்ட எந்தை*   இராப்பகல் ஓதுவித்து*  என்னைப்- 
    பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்*   பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    மங்கிய வல்வினை நோய்காள்!*  உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்* 
    இங்குப் புகேன்மின் புகேன்மின்*  எளிது அன்று கண்டீர் புகேன்மின்*

    சிங்கப் பிரான் அவன் எம்மான்*  சேரும் திருக்கோயில் கண்டீர்* 
    பங்கப்படாது உய்யப் போமின்*  பண்டு அன்று பட்டினம் காப்பே.


    மாணிக் குறளுருவாய்*  மாயனை என்மனத்துள்ளே* 
    பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்*  பிறிதுஇன்றி*

    மாணிக்கப் பண்டாரம்கண்டீர்*  வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!* 
    பாணிக்க வேண்டாநடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    உற்றஉறு  பிணிநோய்காள்!*  உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்* 
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்*  பேணும் திருக்கோயில்கண்டீர்*

    அற்றம்உரைக்கின்றேன்*  இன்னம் ஆழ்வினைகாள்!*  உமக்குஇங்குஓர்-
    பற்றில்லை கண்டீர்நடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    கொங்கைச் சிறுவரைஎன்னும்*  பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி* 
    அங்குஓர் முழையினில்புக்கிட்டு*  அழுந்திக் கிடந்துஉழல்வேனை*

    வங்கக் கடல்வண்ணன் அம்மான்*  வல்வினைஆயின மாற்றி* 
    பங்கப்படாவண்ணம் செய்தான்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    ஏதங்கள் ஆயினஎல்லாம்*  இறங்கல்இடுவித்து*  என்னுள்ளே- 
    பீதகவாடைப்பிரனார்*  பிரமகுருவாகிவந்து*

    போதில்கமல வன்நெஞ்சம்*  புகுந்து என்சென்னித்திடரில்* 
    பாத இலச்சினை வைத்தார்*  பண்டன்றுபட்டினம்காப்பே. 


    உறகல் உறகல் உறகல்*  ஒண்சுடராழியே! சங்கே!* 
    அறவெறி நாந்தகவாளே!*  அழகியசார்ங்கமே! தண்டே!*

    இறவுபடாமல்இருந்த*  எண்மர் உலோகபாலீர்காள்!* 
    பறவைஅரையா! உறகல்*  பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)


    அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்* 
    அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*

    பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்* 
    பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2)