பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வட்டு நடுவே*  வளர்கின்ற*  மாணிக்க- 
    மொட்டு நுனையில்*  முளைக்கின்ற முத்தே போல்* 

    சொட்டுச் சொட்டு என்னத்*  துளிக்கத் துளிக்க*  என் 
    குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்  கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)


    கிண்கிணி கட்டிக்*  கிறி கட்டிக் கையினிற்*
    கங்கணம் இட்டுக்*  கழுத்திற் தொடர் கட்டித்* 

    தன் கணத்தாலே*  சதிரா நடந்து வந்து*
    என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் 


    கத்தக் கதித்துக்*  கிடந்த பெருஞ்செல்வம்* 
    ஒத்துப் பொருந்திக்கொண்டு*  உண்ணாது மண் ஆள்வான்*

    கொத்துத் தலைவன்*  குடிகெடத் தோன்றிய* 
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்


    நாந்தகம் ஏந்திய*  நம்பி சரண் என்று*
    தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி*  தரணியில்* 

    வேந்தர்கள் உட்க*   விசயன் மணித் திண்தேர்*
    ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்


    வெண்கலப் பத்திரம் கட்டி*  விளையாடிக்*
    கண் பல பெய்த*  கருந்தழைக் காவின் கீழ்ப்*

    பண் பல பாடிப்*  பல்லாண்டு இசைப்ப*  பண்டு- 
    மண் பல கொண்டான் புறம்புல்குவான்*  வாமனன் என்னைப் புறம்புல்குவான்


    சத்திரம் ஏந்தித்*  தனி ஒரு மாணியாய்*
    உத்தர வேதியில்*  நின்ற ஒருவனைக்* 

    கத்திரியர் காணக்*  காணி முற்றும் கொண்ட* 
    பத்திராகாரன் புறம்புல்குவான்*  பார் அளந்தான் என் புறம்புல்குவான்


    பொத்த உரலைக் கவிழ்த்து*  அதன்மேல் ஏறி* 
    தித்தித்த பாலும்*  தடாவினில் வெண்ணெயும்*

    மெத்தத் திருவயிறு*  ஆர விழுங்கிய*
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆழியான் என்னைப் புறம்புல்குவான்


    மூத்தவை காண*  முது மணற்குன்று ஏறிக்* 
    கூத்து உவந்து ஆடிக்*  குழலால் இசை பாடி* 

    வாய்த்த மறையோர் வணங்க*  இமையவர்- 
    ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்


    கற்பகக் காவு*  கருதிய காதலிக்கு*
    இப்பொழுது ஈவன் என்று*  இந்திரன் காவினில்*  

    நிற்பன செய்து*  நிலாத் திகழ் முற்றத்துள்* 
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்*  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் 


    ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்*  புறம்புல்கிய* 
    வேய்த் தடந்தோளி சொல்*  விட்டுசித்தன் மகிழ்ந்து* 

    ஈத்த தமிழ் இவை*  ஈரைந்தும் வல்லவர்* 
    வாய்த்த நன்மக்களைப் பெற்று*  மகிழ்வரே (2)


    ஆற்றில் இருந்து*  விளையாடுவோங்களைச்*
    சேற்றால் எறிந்து*  வளை துகிற் கைக்கொண்டு*

    காற்றிற் கடியனாய்*  ஓடி அகம் புக்கு* 
    மாற்றமும் தாரானால் இன்று முற்றும்* 
     வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)


    குண்டலம் தாழ*  குழல் தாழ நாண் தாழ*
    எண் திசையோரும்*  இறைஞ்சித் தொழுது ஏத்த* 

    வண்டு அமர் பூங்குழலார்*  துகிற் கைக்கொண்டு* 
    விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்* 
     வேண்டவும் தாரானால் இன்று முற்றும் 


    தடம் படு தாமரைப்*  பொய்கை கலக்கி* 
    விடம் படு நாகத்தை*  வால் பற்றி ஈர்த்து* 

    படம் படு பைந்தலை*  மேல் எழப் பாய்ந்திட்டு* 
    உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்* 
     உச்சியில் நின்றானால் இன்று முற்றும்


    தேனுகன் ஆவி செகுத்துப்* 
    பனங்கனி தான் எறிந்திட்ட*  தடம் பெருந்தோளினால்* 

    வானவர் கோன் விட*  வந்த மழை தடுத்து* 
    ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
    அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்


    ஆய்ச்சியர் சேரி*  அளை தயிர் பால் உண்டு*
    பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்*  பிடியுண்டு* 

    வேய்த் தடந்தோளினார்*  வெண்ணெய் கோள் மாட்டாது*
    அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்* 
     அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் 


    தள்ளித் தளர் நடை யிட்டு*  இளம் பிள்ளையாய்*
    உள்ளத்தின் உள்ளே*  அவளை உற நோக்கிக* 

    கள்ளத்தினால் வந்த*  பேய்ச்சி முலை உயிர்* 
    துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்* 
     துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்


    மாவலி வேள்வியில்*  மாண் உருவாய்ச் சென்று*  
    மூவடி தா என்று*  இரந்த இம் மண்ணினை* 

    ஒரடி இட்டு*  இரண்டாம் அடிதன்னிலே* 
    தாவடி இட்டானால் இன்று முற்றும்* 
     தரணி அளந்தானால் இன்று முற்றும்   


    தாழை தண்-ஆம்பற்*  தடம் பெரும் பொய்கைவாய்* 
    வாழும் முதலை*  வலைப்பட்டு வாதிப்பு உண்*

    வேழம் துயர் கெட*  விண்ணோர் பெருமானாய்* 
    ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்* 
     அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் 


    வானத்து எழுந்த*  மழை முகில் போல்*
    எங்கும் கானத்து மேய்ந்து*  களித்து விளையாடி* 

    ஏனத்து உருவாய்*  இடந்த இம் மண்ணினைத்* 
    தானத்தே வைத்தானால் இன்று முற்றும் 
     தரணி இடந்தானால் இன்று முற்றும் 


    அங் கமலக் கண்ணன்தன்னை*  அசோதைக்கு* 
    மங்கை நல்லார்கள்*  தாம் வந்து முறைப்பட்ட* 

    அங்கு அவர் சொல்லைப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
     இங்கு இவை வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே* (2) 


    நெறிந்த கருங்குழல் மடவாய்!*  நின் அடியேன் விண்ணப்பம்*
    செறிந்த மணி முடிச் சனகன்*  சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-

    அறிந்து அரசு களைகட்ட*  அருந்தவத்தோன் இடை விலங்கச்* 
    செறிந்த சிலைகொடு தவத்தைச்*  சிதைத்ததும் ஓர் அடையாளம்*  (2)


    அல்லியம்பூ மலர்க்கோதாய்!*  அடிபணிந்தேன் விண்ணப்பம்* 
    சொல்லுகேன் கேட்டருளாய்*  துணைமலர்க் கண் மடமானே!*

    எல்லியம் போது இனிதிருத்தல்*  இருந்தது ஓர் இட வகையில்* 
    மல்லிகை மா மாலைகொண்டு*  அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*


    கலக்கிய மா மனத்தனளாய்க்*  கைகேசி வரம் வேண்ட* 
    மலக்கிய மா மனத்தனனாய்*  மன்னவனும் மறாது ஒழியக்*

    குலக்குமரா! காடு உறையப் போ என்று*  விடை கொடுப்ப* 
    இலக்குமணன் தன்னொடும்*  அங்கு ஏகியது ஓர் அடையாளம்*


    வார் அணிந்த முலை மடவாய்!*  வைதேவீ! விண்ணப்பம்* 
    தேர் அணிந்த அயோத்தியர்கோன்*  பெருந்தேவீ! கேட்டருளாய்*

    கூர் அணிந்த வேல் வலவன்*  குகனோடும் கங்கைதன்னிற்* 
    சீர் அணிந்த தோழமை*  கொண்டதும் ஓர் அடையாளம்*


    மான் அமரும் மென்நோக்கி!*  வைதேவீ! விண்ணப்பம்*
    கான் அமரும் கல்-அதர் போய்க்*  காடு உறைந்த காலத்துத்* 

    தேன் அமரும் பொழிற் சாரல்*  சித்திரகூடத்து இருப்பப்*
    பால்மொழியாய்! பரதநம்பி*  பணிந்ததும் ஓர் அடையாளம*


    சித்திரகூடத்து இருப்பச்*  சிறுகாக்கை முலை தீண்ட* 
    அத்திரமே கொண்டு எறிய*  அனைத்து உலகும் திரிந்து ஓடி*

    வித்தகனே! இராமாவோ!*  நின் அபயம் என்று அழைப்ப*
    அத்திரமே அதன்கண்ணை*  அறுத்ததும் ஓர் அடையாளம்*


    மின் ஒத்த நுண்- இடையாய்!*  மெய்- அடியேன் விண்ணப்பம்* 
    பொன் ஒத்த மான் ஒன்று*  புகுந்து இனிது விளையாட*

    நின் அன்பின் வழிநின்று*  சிலை பிடித்து எம்பிரான் ஏகப்* 
    பின்னே அங்கு இலக்குமணன்*  பிரிந்ததும் ஓர் அடையாளம்*


    மைத் தகு மா மலர்க்குழலாய்!*  வைதேவீ விண்ணப்பம்* 
    ஒத்த புகழ் வானரக்கோன்*  உடன் இருந்து நினைத் தேட* 

    அத்தகு சீர் அயோத்தியர்கோன்*  அடையாளம் இவை மொழிந்தான்* 
    இத் தகையால் அடையாளம்*  ஈது அவன் கைம் மோதிரமே*    


    திக்கு நிறை புகழாளன்*  தீ வேள்விச் சென்ற நாள்* 
    மிக்க பெரும் சபை நடுவே*  வில் இறுத்தான் மோதிரம் கண்டு*

    ஒக்குமால் அடையாளம்*  அனுமான்! என்று*  உச்சிமேல்- 
    வைத்துக்கொண்டு உகந்தனளால்*  மலர்க்குழலாள் சீதையுமே (2)


    வார் ஆரும் முலை மடவாள்*  வைதேவி தனைக் கண்டு* 
    சீர் ஆரும் திறல் அனுமன்*  தெரிந்து உரைத்த அடையாளம்* 

    பார் ஆரும் புகழ்ப் புதுவைப்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    ஏர் ஆரும் வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே* (2)


    துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
    ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 

    எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)


    சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
    நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 

    போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
    ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
    நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!

    சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்* 
    அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!


    ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
    முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*

    அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
    அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    பையரவினனைப் பாற்கடலுள்*  பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!* 
    உய்யஉலகு படைக்கவேண்டி*  உந்தியிற் தோற்றினாய் நான்முகனை* 

    வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்*  காலனையும் உடனே படைத்தாய்* 
    ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
    மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*

    எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
    அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
    எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*

    வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
    அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
    இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 

    வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
    ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
    அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 

    நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
    அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
    ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*

    வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
    தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)