பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்* 
    அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்* 

    ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்! 


    சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து* 
    புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா* 

    அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!*  
    வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!     


    சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்* 
    காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்* 

    வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   


    வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை* 
    நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து* 

    எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி* 
    நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    


    இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று* 
    நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை* 

    கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி* 
    நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து*  திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு* 
    ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்*  உணர்விலேன் ஆதலால் நமனார்*

    பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்*  பரமனே! பாற்கடல் கிடந்தாய்!* 
    நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்* 
    துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*

    வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!            


    ஏவினார் கலியார் நலிக என்று*  என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
    ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*

    பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு*  உன் பாதமே பரவி நான் பணிந்து*
    என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி*  உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
    தான் உடைக் குரம்பை பிரியும்போது*  உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்* 

    தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!*  திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!* 
    நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!         


    ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*
    இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*

    காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்* 
    ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)      


    நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
    வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*

    மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
    எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)


    பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 
    நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*

    கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே.   


    ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
    வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 

    கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
    ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  


    விண்டாரை வென்று ஆவி*  விலங்கு உண்ண மெல் இயலார்* 
    கொண்டாடும் மல் அகலம்*  அழல் ஏற வெம் சமத்துக்*

    கண்டாரை கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரைக், 
    கொண்டாடும் நெஞ்சு உடையார்*  அவர் எங்கள் குலதெய்வமே.


    பிச்சச் சிறு பீலிச்*  சமண் குண்டர் முதலாயோர்* 
    விச்சைக்கு இறை என்னும்*  அவ் இறையைப் பணியாதே*

    கச்சிக் கிடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நச்சித் தொழுவாரை*  நச்சு என் தன் நல் நெஞ்சே!  


    புலன் கொள் நிதிக் குவையோடு*  புழைக் கை மா களிற்று இனமும்* 
    நலம் கொள் நவமணிக் குவையும்*  சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,* 

    கலங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வலங்கொள் மனத்தார்அவரை*  வலங்கொள் என் மட நெஞ்சே!


    பஞ்சிச் சிறு கூழை*  உரு ஆகி மருவாத* 
    வஞ்சப் பெண் நஞ்சு உண்ட*  அண்ணல் முன் நண்ணா*

    கஞ்சைக் கடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நெஞ்சில் தொழுவாரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே!


    செழு நீர் மலர்க் கமலம்*  திரை உந்து வன் பகட்டால்* 
    உழும் நீர் வயல் உழவர் உழ*  பின் முன் பிழைத்து எழுந்த* 

    கழு நீர் கடி கமழும்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    தொழும் நீர் மனத்தவரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே . 


    பிணங்கள் இடு காடு அதனுள்*  நடம் ஆடு பிஞ்ஞகனோடு* 
    இணங்கு திருச் சக்கரத்து*  எம் பெருமானார்க்கு இடம்*

    விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வணங்கும் மனத்தார் அவரை*  வணங்கு என்தன் மட நெஞ்சே!


    கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
    அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 

    வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
    முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       


    தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே* 
    பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!* 

    தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி* 
    ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)


    பிணிஅவிழு நறுநீல*  மலர் கிழிய பெடையோடும்*   
    அணிமலர்மேல் மதுநுகரும்*  அறுகால சிறு வண்டே!* 

    மணிகழுநீர் மருங்குஅலரும்*  வயல் ஆலி மணவாளன்*   
    பணிஅறியேன் நீ சென்று*  என் பயலை நோய் உரையாயே.


    நீர்வானம் மண் எரி கால் ஆய்*  நின்ற நெடுமால்* 
    தன்தார் ஆய நறுந் துளவம்*  பெறும் தகையேற்கு அருளானே*

    சீர்ஆரும் வளர்பொழில்சூழ்*  திருவாலி வயல்வாழும்* 
    கூர்வாய சிறுகுருகே!*  குறிப்புஅறிந்து கூறாயே.      


    தானாக நினையானேல்*  தன் நினைந்து நைவேற்கு*
    ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்*  வலி செய்ய மெலிவேனோ?*

    தேன் வாய வரி வண்டே!*  திருவாலி நகர் ஆளும்*   
    ஆன்ஆயற்கு என் உறு நோய்*  அறிய சென்று உரையாயே.


    வாள் ஆய கண் பனிப்ப*  மென் முலைகள் பொன் அரும்ப* 
    நாள் நாளும்*  நின் நினைந்து நைவேற்கு*

    ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!*  வரை எடுத்த தோளாளா*
    என்தனக்கு ஓர்*  துணையாளன் ஆகாயே!


    தார் ஆய தன் துளவம்*  வண்டு உழுதவரை மார்பன்* 
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த*  புள் பாகன் என் அம்மான்*

    தேர் ஆரும் நெடு வீதித்*  திருவாலி நகர் ஆளும்* 
    கார் ஆயன் என்னுடைய*  கன வளையும் கவர்வானோ! 


    கொண்டு அரவத் திரை உலவு*  குரை கடல்மேல் குலவரைபோல்* 
    பண்டு அரவின் அணைக் கிடந்து*  பார் அளந்த பண்பாளா!*

    வண்டு அமரும் வளர் பொழில் சூழ்*  வயல் ஆலி மைந்தா!* 
    என் கண் துயில் நீ கொண்டாய்க்கு*  என் கன வளையும் கடவேனோ!?


    குயில் ஆலும் வளர் பொழில் சூழ்*  தண் குடந்தைக் குடம் ஆடி* 
    துயிலாத கண்_இணையேன்*  நின் நினைந்து துயர்வேனோ!*

    முயல் ஆலும் இள மதிக்கே*  வளை இழந்தேற்கு*
    இது நடுவே வயல் ஆலி மணவாளா!*  கொள்வாயோ மணி நிறமே!  


    நிலை ஆளா நின் வணங்க*  வேண்டாயே ஆகிலும் என்* 
    முலை ஆள ஒருநாள்*  உன் அகலத்தால் ஆளாயே*

    சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!*  திருமெய்யமலையாளா*
    நீஆள வளை ஆள மாட்டோமே. 


    மை இலங்கு கருங் குவளை*  மருங்கு அலரும் வயல் ஆலி* 
    நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை*  நெடுமாலை* 

    கை இலங்கு வேல் கலியன்*  கண்டு உரைத்த தமிழ் மாலை* 
    ஐஇரண்டும் இவை வல்லார்க்கு*  அரு வினைகள் அடையாவே. (2)


    தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
    நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 

    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
    காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    


    மண் இடந்து ஏனம் ஆகி*  மாவலி வலி தொலைப்பான்* 
    விண்ணவர் வேண்டச் சென்று*  வேள்வியில் குறை இரந்தாய்!*

    துண் என மாற்றார்தம்மைத்*  தொலைத்தவர் நாங்கை மேய* 
    கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    உருத்து எழு வாலி மார்வில்*  ஒரு கணை உருவ ஓட்டி*    
    கருத்து உடைத் தம்பிக்கு*  இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*

    பருத்து எழு பலவும் மாவும்*  பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்* 
    கருத்தனே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.    


    முனைமுகத்து அரக்கன் மாள*  முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*  ஆங்கு 
    அனையவற்கு இளையவற்கே*  அரசு அளித்து அருளினானே*

    சுனைகளில் கயல்கள் பாயச்*  சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்* 
    கனை கழல் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே. 


    பட அரவு உச்சிதன்மேல்*  பாய்ந்து பல் நடங்கள்செய்து* 
    மடவரல் மங்கைதன்னை*  மார்வகத்து இருத்தினானே!*

    தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
    கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   


    மல்லரை அட்டு மாள*  கஞ்சனை மலைந்து கொன்று* 
    பல் அரசு அவிந்து வீழப்*  பாரதப் போர் முடித்தாய்*

    நல் அரண் காவின் நீழல்*  நறை கமழ் நாங்கை மேய* 
    கல் அரண் காவளம் தண்  பாடியாய்!* களைகண் நீயே.            


    மூத்தவற்கு அரசு வேண்டி*  முன்பு தூது எழுந்தருளி* 
    மாத்தமர் பாகன் வீழ*  மத கரி மருப்பு ஒசித்தாய்*

    பூத்தமர் சோலை ஓங்கி*  புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்* 
    காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    ஏவிளங் கன்னிக்கு ஆகி*  இமையவர் கோனைச் செற்று* 
    காவளம் கடிது இறுத்துக்*  கற்பகம் கொண்டு போந்தாய்*

    பூவளம் பொழில்கள் சூழ்ந்த*  புரந்தரன் செய்த நாங்கைக் 
    காவளம்பாடி மேய*  கண்ணனே!  களைகண் நீயே.   


    சந்தம் ஆய் சமயம் ஆகி*  சமய ஐம் பூதம் ஆகி* 
    அந்தம் ஆய் ஆதி ஆகி*  அரு மறை அவையும் ஆனாய்*

    மந்தம் ஆர் பொழில்கள்தோறும்*  மட மயில் ஆலும் நாங்கைக்* 
    கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.


    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும்*  நாங்கைக் 
    காவளம் பாடிமேய*  கண்ணனைக் கலியன் சொன்ன* 

    பாவளம் பத்தும் வல்லார்*  பார்மிசை அரசர் ஆகிக்* 
    கோ இள மன்னர் தாழக்*  குடைநிழல் பொலிவர்தாமே.    


    கைம்மான மழ களிற்றை*  கடல் கிடந்த கருமணியை* 
    மைம்மான மரகதத்தை*  மறை உரைத்த திருமாலை* 

    எம்மானை எனக்கு என்றும் இனியானை*  பனி காத்த 
    அம்மானை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.


    பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
    ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

    கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
    ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
    தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 

    தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
    ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே.      


    வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
    தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 

    பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
    அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  


    நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
    ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*

    பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
    ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.        


    தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
    கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 

    வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
    அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  


    சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
    வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-

    கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
    அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        


    துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
    அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த

    எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
    அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
    மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*

    மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
    அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   


    ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
    காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*

    நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
    தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        


    அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*  அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்* 
    கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்*  பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர்*

    வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*  மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்* 
    செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*  குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்* 
    எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*  இணைஅடிக்கீழ் இனிது இருப்பீர்! இன வண்டு ஆலும்*

    உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*  உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள* 
    செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி*  பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா* 
    செவ்வி மாதிரம் எட்டும் தோளா*  அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*

    கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்* 
    தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.  


    பைங் கண் ஆள்அரி உரு ஆய் வெருவ நோக்கி*  பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி* 
    அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*  அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*

    வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*  விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த* 
    செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    அன்று உலகம் மூன்றினையும் அளந்து*  வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு* 
    வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*  விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து* 

    பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*  புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
    தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*  தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்* 
    தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*  தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்* 

    மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*  விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட* 
    தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே* 
    இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*

    மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்* 
    சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்*  மன் எல்லாம் முன் அவியச் சென்று*  வென்றிச் 
    செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்*  சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*

    இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு*  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட* 
    திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே. 


    தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
    பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*

    பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
    தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.


    செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்*  திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்* 
    பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்*  புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*

    அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*  பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி* 
    வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*  விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.


    சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
    சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*

    செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
    அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     


    கோவானார் மடியக்*  கொலையார் மழுக்கொண்டு அருளும்* 
    மூவா வானவனை*  முழுநீர் வண்ணனை*  அடியார்க்கு-

    ஆ! ஆ! என்று இரங்கித்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    தேவாதி தேவனை*  யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.


    உடையானை*  ஒலி நீர் உலகங்கள் படைத்தானை* 
    விடையான் ஓட அன்று*  விறல் ஆழி விசைத்தானை*

    அடையார் தென் இலங்கை அழித்தானை*  அணி அழுந்தூர்- 
    உடையானை*  அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.     


    குன்றால் மாரி தடுத்தவனை*  குல வேழம் அன்று- 
    பொன்றாமை*  அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*

    அன்று ஆவின்நறுநெய்*  அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்- 
    நின்றானை*  அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.


    கஞ்சனைக் காய்ந்தானை*  கண்ணமங்கையுள் நின்றானை* 
    வஞ்சனப் பேய் முலையூடு*  உயிர் வாய் மடுத்து உண்டானை* 

    செஞ்சொல் நான்மறையோர்*  தென் அழுந்தையில் மன்னி நின்ற* 
    அஞ்சனக் குன்றம் தன்னை*  அடியேன் கண்டுகொண்டேனே*.


    பெரியானை*  அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்* 
    உரி யானை உகந்தானவனுக்கும்*  உணர்வதனுக்கு

    அரியானை*  அழுந்தூர் மறையோர்கள்*  அடிபணியும் 
    கரியானை*  அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.      


    திருவாழ் மார்வன் தன்னை*  திசை மண்நீர் எரிமுதலா* 
    உருவாய் நின்றவனை*  ஒலிசேரும் மாருதத்தை*

    அருவாய் நின்றவனை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    கருவார் கற்பகத்தை*  கண்டுகொண்டு களித்தேனே*      


    நிலையாளாக*  என்னை யுகந்தானை*  நிலமகள்தன்-
    முலையாள் வித்தகனை*  முதுநான்மறை வீதிதொறும்*

    அலையாரும் கடல்போல் முழங்கும்*  தென்னழுந்தையில் மன்னி நின்ற*
    கலையார் சொற்பொருளைக்*  கண்டு கொண்டு களித்தேனே*.


    பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
    வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*

    ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   


    திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
    அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*

    கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
    முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.


    தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
    திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*

    வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
    கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)


    பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்*  பொன்ற அன்று புள்ஊர்ந்து* 
    பெருந்தோள் மாலி தலைபுரள*  பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*

    இருந்தார் தம்மைஉடன் கொண்டு*  அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப* 
    கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
    அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*

    வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
    கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)


    மல்லை முந்நீர் அதர்பட*  வரிவெம் சிலைகால் வளைவித்து* 
    கொல்லை விலங்கு பணிசெய்ய*  கொடியோன் இலங்கை புகல்உற்று*

    தொல்லை மரங்கள் புகப்பெய்து*  துவலை நிமிர்ந்து வான்அணவ* 
    கல்லால் கடலை அடைத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    ஆமைஆகி அரிஆகி*  அன்னம்ஆகி,*  அந்தணர்தம்- 
    ஓமம்ஆகி ஊழிஆகி*  உவரி சூழ்ந்த நெடும்புணரி*

    சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்*  சிரமும் கரமும் துணித்து,*  முன்- 
    காமன் பயந்தான் கருதும்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    வருந்தாது இரு நீ மடநெஞ்சே*  நம்மேல் வினைகள் வாரா,*  முன்- 
    திருந்தா அரக்கர் தென்இலங்கை*  செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*

    பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து*  பின்னை மணாளன்ஆகி*  முன்- 
    கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்*  முதலை-தன்னால் அடர்ப்புண்டு* 
    கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய*  அதனுக்கு அருள்புரிந்தான்*

    அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு*  இளையோற்கு அரசை அருளி*  முன்- 
    கலைமாச் சிலையால் எய்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   


    மால்ஆய் மனமே! அருந்துயரில்*  வருந்தாது இரு நீ, வலிமிக்க* 
    கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்*  கதமா கழுதையும்* 

    மால்ஆர் விடையும் மதகரியும்*  மல்லர் உயிரும் மடிவித்து* 
    காலால் சகடம் பாய்ந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    குன்றால் மாரி பழுதுஆக்கி*  கொடிஏர் இடையாள் பொருட்டாக* 
    வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த*  வானோர் பெருமான் மாமாயன்*

    சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்*  திரிகால் சகடம் சினம்அழித்து* 
    கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை* 
    திருமா மகளால் அருள்மாரி*  செழு நீர்ஆலி வளநாடன்*

    மருவுஆர் புயல்கைக் கலிகன்றி*  மங்கை வேந்தன் ஒலிவல்லார்* 
    இருமா நிலத்துக்கு அரசுஆகி*  இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 


    அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*

    தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
    கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)


    துங்கஆர் அரவத் திரைவந்து உலவ*  தொடுகடலுள்,-
    பொங்குஆர் அரவில் துயிலும்*  புனிதர்ஊர் போலும்,*

    செங்கால் அன்னம்*  திகழ்தண் பணையில் பெடையோடும்,*
    கொங்குஆர் கமலத்து*  அலரில் சேரும் குறுங்குடியே.


    வாழக் கண்டோம்*  வந்து காண்மின் தொண்டீர்காள்,*
    கேழல் செங்கண்*  மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*

    ஏழைச் செங்கால்*  இன்துணை நாரைக்கு இரை தேடி,* 
    கூழைப் பார்வைக்*  கார்வயல் மேயும் குறுங்குடியே. 


    சிரம்முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 
    உரமும் கரமும் துணித்த*  உரவோன்ஊர் போலும்,*

    இரவும் பகலும்*  ஈன்தேன் முரல,*  மன்றுஎல்லாம்-
    குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.


    கவ்வைக் களிற்று மன்னர் மாள*  கலிமாத்தேர்-
    ஐவர்க்குஆய்,*  அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*

    மைவைத்து இலங்கு*  கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,* 
    கொவ்வைக் கனிவாய்க்*  கிள்ளை பேசும் குறுங்குடியே.


    தீநீர் வண்ண*  மாமலர் கொண்டு விரை ஏந்தி,* 
    தூநீர் பரவித்*  தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*

    மாநீர் வண்ணர்*  மருவி உறையும்இடம்,*  வானில்-
    கூன்நீர் மதியை*  மாடம் தீண்டும் குறுங்குடியே..


    வல்லிச்சிறு நுண்இடையாரிடை*  நீர்வைக்கின்ற,*
    அல்லல் சிந்தை தவிர*  அடைமின் அடியீர்காள்!,*

    சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,* 
    கொல்லை முல்லை*  மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே. 


    நார்ஆர்இண்டை*  நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,* 
    ஆரா அன்போடு*  எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*

    தாரா ஆரும்*  வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
    கூர்வாய் நாரை*  பேடையொடு ஆடும் குறுங்குடியே.


    நின்ற வினையும் துயரும் கெட*  மாமலர்ஏந்தி,* 
    சென்று பணிமின் எழுமின்*  தொழுமின் தொண்டீர்காள்,*

    என்றும் இரவும் பகலும்*  வரிவண்டு இசைபாட,* 
    குன்றின் முல்லை*  மன்றிடை நாறும் குறுங்குடியே..


    சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
    கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*

    கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
    நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)


    எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?*  நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
    சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*

    பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக*  பொன்மிடறு அத்தனைபோது,*
    அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.   (2)


    குன்றுஒன்று மத்தா அரவம் அளவி*  குரைமாகடலைக் கடைந்திட்டு,*  ஒருகால்-
    நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர*  நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*

    நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்*  மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,* 
    அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்*   உலப்புஇல் வலியார் அவர்பால்,*  வயிரம்-
    விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ*   அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*

    வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று*  மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
    அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.  


    தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன*  தான் சரண்ஆய் முரண்ஆயவனை*  உகிரால்-
    பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த*  பெருமான் திருமால் விரிநீர் உலகை,*

    வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை*  மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
    அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்*  அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
    தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்*  செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*

    வேண்டாமை நமன் தமர் என்தமரை*   வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
    ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 


    பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல*  பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*

    தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்*  சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
    அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே


    படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்*  தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*

    மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா*  விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,*  கடலை-
    அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு*  உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
    இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு*  இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*

    செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்*  செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
    அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.    


    சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா*  தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
    இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்*  இருகூறுசெய்த பெருமான் முனநாள்* 

    வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து*  மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
    அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*  வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
    அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*  உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*

    நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
    என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*  இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே.   (2) 


    மைந்நின்ற கருங்கடல் வாய்உலகுஇன்றி*  வானவரும் யாமும்எல்லாம்,* 
    நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது ஓரீர்,*

    எந்நன்றி செய்தாரா*  ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்?* 
    செய்ந்நன்றி குன்றேல்மின்*  தொண்டர்காள்! அண்டனைய ஏத்தீர்களே  (2)   


    நில்லாத பெருவெள்ளம்*  நெடுவிசும்பின் மீதுஓடி நிமிர்ந்த காலம்,* 
    மல்ஆண்ட தடக்கையால்*  பகிரண்டம்  அகப்படுத்த காலத்து,*  அன்று-

    எல்லாரும் அறியாரோ*  எம்பெருமான்  உண்டு உமிழ்ந்த எச்சில்தேவர்,* 
    அல்லாதார் தாம்உளரே?*  அவன்அருளே  உலகுஆவது அறியீர்களே?     


    நெற்றிமேல் கண்ணானும்*  நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,* 
    ஒற்றைக்கை வெண்பகட்டின்*  ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,*

    வெற்றிப்போர்க் கடல்அரையன்*  விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட,* 
    கொற்றப் போர்ஆழியான்*  குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியஆறே!    


    பனிப்பரவைத் திரைததும்ப*  பார்எல்லாம் நெடுங்கடலே ஆனகாலம்,*  
    இனிக் களைகண்இவர்க்கு இல்லை என்று*  உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி*

    முனித்தலைவன் முழங்குஒளிசேர்*  திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட* 
    கனிக்களவத் திருஉருவத்து ஒருவனையே*  கழல் தொழுமா கல்லீர்களே.  


    பார்ஆரும் காணாமே*  பரவைமா நெடுங்கடலே ஆனகாலம்,* 
    ஆரானும் அவனுடைய திருவயிற்றில்*  நெடுங்காலம் கிடந்தது,*  உள்ளத்து-

    ஓராத உணர்விலீர்! உணருதிரேல்*  உலகுஅளந்த உம்பர் கோமான்,* 
    பேராளன் பேரான*  பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே.  


    பேய்இருக்கும் நெடுவெள்ளம்*  பெருவிசும்பின் மீதுஓடிப் பெருகுகாலம்,* 
    தாய்இருக்கும் வண்ணமே*  உம்மைத்தன் வயிற்றுஇருத்தி உய்யக்கொண்டான்,*

    போய்இருக்க மற்றுஇங்குஓர்*  புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,*  பெற்ற- 
    தாய்இருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ*  மாட்டாத தகவுஅற்றீரே!


    மண்நாடும் விண்நாடும்*  வானவரும்  தானவரும் மற்றும்எல்லாம்* 
    உண்ணாத பெருவெள்ளம்*  உண்ணாமல்  தான்விழுங்கி உய்யக்கொண்ட,*

     


    கணணாளன் கண்ணமங்கை நகராளன்*   கழல்சூடி, அவனை உள்ளத்து* 
    எண்ணாத மானிடத்தை*  எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.


    மறம்கிளர்ந்த கருங்கடல் நீர்*  உரம்துரந்து பரந்துஏறி அண்டத்துஅப்பால்,* 
    புறம்கிளர்ந்த காலத்து*  பொன்உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,*

    அறம்கிளந்த திருவயிற்றின்*  அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    நிறம்கிளர்ந்த கருஞ்சோதி*  நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.


    அண்டத்தின் முகடுஅழுந்த*  அலைமுந்நீர்த்  திரைததும்ப ஆ! ஆ! என்று,* 
    தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்*  தான்அருளி,*  உலகம்ஏழும்-

    உண்டுஒத்த திருவயிற்றின்*  அகம்படியில்  வைத்து உம்மை உய்யக்கொண்ட,* 
    கொண்டல்கை மணிவண்ணன்*  தண்குடந்தை நகர் பாடி ஆடீர்களே.


    தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,* 
    யாவரையும் ஒழியாமே*  எம்பெருமான்  உண்டுஉமிழ்ந்தது அறிந்துசொன்ன,*

    காவளரும் பொழில்மங்கைக்*  கலிகன்றி  ஒலிமாலை கற்று வல்லார்,* 
    பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்*   பொன்உலகில் பொலிவர் தாமே.  (2)