பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*
    அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்* 

    ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி* 
    பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)


    கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி* 
    இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து* 

    விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர* 
    பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்* 
    இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து 

    கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்* 
    பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து* 
    வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்* 

    இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்* 
    பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த* 
    அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து* 

    வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்* 
    பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று* 
    இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து* 

    மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்* 
    பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய*  கறி வளர் கொடி துன்னிப்* 
    போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய*  பூம் பொழில் இமயத்துள்* 

    ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து*  இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்* 
    பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!      


    இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர* 
    அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*

    பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்* 
    பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!  


    ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்* 
    ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*

    தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி* 
    பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
    களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 

    வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
    அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)


    காசை ஆடை மூடி ஓடிக்*  காதல் செய் தானவன் ஊர்* 
    நாசம் ஆக நம்ப வல்ல*  நம்பி நம் பெருமான்* 

    வேயின் அன்ன தோள் மடவார்*  வெண்ணெய் உண்டான் இவன் என்று* 
    ஏச நின்ற எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே* (2)


    தையலாள்மேல் காதல் செய்த*  தானவன் வாள் அரக்கன்* 
    பொய் இலாத பொன் முடிகள்*  ஒன்பதோடு ஒன்றும் அன்று* 

    செய்த வெம் போர் தன்னில்*  அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள* 
    எய்த எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*     


    முன் ஓர் தூது*  வானரத்தின் வாயில் மொழிந்து*  
    அரக்கன் மன் ஊர் தன்னை*  வாளியினால் மாள முனிந்து*

    அவனே பின் ஓர் தூது*  ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்* 
    இன்னார் தூதன் என நின்றான்*  எவ்வுள் கிடந்தானே* 


    பந்து அணைந்த மெல்விரலாள்*  பாவைதன் காரணத்தால்* 
    வெந் திறல் ஏறு ஏழும் வென்ற*  வேந்தன் விரி புகழ் சேர்* 

    நந்தன் மைந்தன் ஆக ஆகும்*  நம்பி நம் பெருமான்* 
    எந்தை தந்தை தம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*  


    பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு*  பண்டு ஆல் இலைமேல்* 
    சால நாளும் பள்ளி கொள்ளும்*  தாமரைக் கண்ணன் எண்ணில்* 

    நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்*  நெய்தல் அம் தண் கழனி* 
    ஏலம் நாறும் பைம் புறவின்*  எவ்வுள் கிடந்தானே*  


    சோத்தம் நம்பி என்று*  தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்* 
    ஆத்தன் நம்பி செங்கண் நம்பி*  ஆகிலும் தேவர்க்கு எல்லாம்* 

    மூத்த நம்பி முக்கண் நம்பி என்று*  முனிவர் தொழுது* 
    ஏத்தும் நம்பி எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி*  திசைமுகனார்* 
    தங்கள் அப்பன் சாமி அப்பன்*  பாகத்து இருந்த*

    வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்*  சூழ் கழல் சூடநின்ற* 
    எங்கள் அப்பன் எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*


    முனிவன் மூர்த்தி மூவர் ஆகி*  வேதம் விரித்து உரைத்த புனிதன்*
    பூவை வண்ணன் அண்ணல்*  புண்ணியன் விண்ணவர்கோன்* 

    தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்*  தன் அடியார்க்கு இனியன்*
    எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    பந்து இருக்கும் மெல் விரலாள்*  பாவை பனி மலராள்* 
    வந்து இருக்கும் மார்வன்*  நீல மேனி மணி வண்ணன்* 

    அந்தரத்தில் வாழும்*  வானோர் நாயகன் ஆய் அமைந்த* 
    இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*


    இண்டை கொண்டு தொண்டர் ஏத்த*  எவ்வுள் கிடந்தானை* 
    வண்டு பாடும் பைம் புறவின்*  மங்கையர் கோன் கலியன், 

    கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை*  ஈர் ஐந்தும் வல்லார்* 
    அண்டம் ஆள்வது ஆணை*  அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)    


    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
    தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 

    கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
    தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 


    காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
    ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
    தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.  


    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த* 
    வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த* 
    செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த* 
    பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்* 

    கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்* 
    திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 


    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
    தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்* 

    பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*
    புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
    இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

    அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக* 
    செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த* 
    தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்* 
    தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*
    ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

    மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்* 
    தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்* 
    அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

    பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள* 
    திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
    ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

    கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
    பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)


    கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
    அரசு அவன் தம்பிக்கு*  அளித்தவன் உறைகோயில்*

    செம்பலாநிரை செண்பகம்மாதவி*  சூதகம் வாழைகள்சூழ்* 
    வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர*  வண்புருடோத்தமமே.       


    பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி*  அக்காளியன் பண அரங்கில்* 
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த*  உம்பர்கோன் உறைகோயில்*

    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்* 
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
    கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*

    கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து*  அதன் பாகனைச் சாடிப் புக்கு*  
    ஒருங்க மல்லரைக் கொன்று*  பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*

    கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு*  கழனியில் மலி வாவி* 
    மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து*  ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட* 
    வாணனை ஆயிரம் தோள்களும்*  துணித்தவன் உறை கோயில்*

    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்*  பகலவன் ஒளி மறைக்கும்* 
    மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று*  அயன் அலர் கொடு தொழுது ஏத்த* 
    கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய*   கண்ணன் வந்து உறை கோயில்* 

    கொங்கை கோங்குஅவை காட்ட*  வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்* 
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.  


    உளைய ஒண் திறல் பொன்பெயரோன்*  தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
    வெம் சினத்து அரி பரி கீறிய*  அப்பன் வந்து உறை கோயில்*

    இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு*  எழில் கொள் பந்து அடிப்போர்*
    கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.       


    வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்*  வன்சாபம் மற்றுஅதுநீங்க* 
    மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த*  எம்முகில் வண்ணன் உறைகோயில்*

    பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்*  வண்பழம் விழ வெருவிப் போய்* 
    வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    இந்து வார் சடை ஈசனைப் பயந்த*  நான் முகனைத் தன் எழில் ஆரும்* 
    உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்* 

    குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து*  தன் குருளையைத் தழுவிப் போய்* 
    மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
    அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 

    பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
    எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   


    தாம்*  தம் பெருமை அறியார்*  
    தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*

    காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
    கூந்தல் கமழும்*  கூடலூரே.


    செறும் திண்*  திமில் ஏறு உடைய*  பின்னை 
    பெறும் தண் கோலம்*  பெற்றார் ஊர்போல்*

    நறும் தண் தீம்*  தேன் உண்ட வண்டு* 
    குறிஞ்சி பாடும்*  கூடலூரே.


    பிள்ளை உருவாய்த்*  தயிர் உண்டு*  அடியேன்
    உள்ளம் புகுந்த*  ஒருவர் ஊர்போல்*

    கள்ள நாரை*  வயலுள்*  கயல்மீன்
    கொள்ளை கொள்ளும்*  கூடலூரே.


    கூற்று ஏர் உருவின்*  குறள் ஆய்*  நிலம் நீர்
    ஏற்றான் எந்தை*  பெருமான் ஊர்போல்*

    சேற்று ஏர் உழவர்*  கோதைப் போது ஊண்*
    கோல் தேன் முரலும்*  கூடலூரே.


    தொண்டர் பரவ*  சுடர் சென்று அணவ* 
    அண்டத்து அமரும்*  அடிகள் ஊர்போல்*

    வண்டல் அலையுள்*  கெண்டை மிளிர* 
    கொண்டல் அதிரும்*  கூடலூரே. 


    தக்கன் வேள்வி*  தகர்த்த தலைவன்*
    துக்கம் துடைத்த*  துணைவர் ஊர்போல்*

    எக்கல் இடு*  நுண் மணல்மேல்*  எங்கும்
    கொக்கின் பழம் வீழ்*  கூடலூரே.


    கருந் தண் கடலும்*  மலையும் உலகும்*
    அருந்தும் அடிகள்*  அமரும் ஊர்போல*

    பெருந் தண் முல்லைப்*  பிள்ளை ஓடிக்*
    குருந்தம் தழுவும்*  கூடலூரே.


    கலை வாழ்*  பிணையோடு அணையும்*  திருநீர் 
    மலை வாழ் எந்தை*  மருவும் ஊர்போல்*

    இலை தாழ் தெங்கின்*  மேல்நின்று*  இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின்*  கூடலூரே.


    பெருகு காதல் அடியேன்*  உள்ளம்- 
    உருகப் புகுந்த*  ஒருவர் ஊர் போல்* 

    அருகு கைதை மலர*  கெண்டை 
    குருகு என்று அஞ்சும்* கூடலூரே.    


    காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
    மேவித் திகழும்*  கூடலூர்மேல்*

    கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
    பாவைப் பாட*  பாவம் போமே.


    பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில்*  பொருள் இன்பம் என இரண்டும் 
    இறுத்தேன்*  ஐம்புலன்கள் கடன் ஆயின*  வாயில் ஒட்டி

    அறுத்தேன்*  ஆர்வச் செற்றம் அவைதம்மை*  மனத்து அகற்றி 
    வெறுத்தேன்*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.    


    மறந்தேன் உன்னை முன்னம்*  மறந்த மதி இல் மனத்தால்* 
    இறந்தேன் எத்தனையும்*  அதனால் இடும்பைக் குழியில்*

    பிறந்தே எய்த்து ஒழிந்தேன்*  பெருமான்! திரு மார்பா!* 
    சிறந்தேன் நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே


    மான் ஏய் நோக்கியர்தம்*  வயிற்றுக் குழியில் உழைக்கும்* 
    ஊன் ஏய் ஆக்கை தன்னை*  உதவாமை உணர்ந்து உணர்ந்து*

    வானே! மா நிலமே!*  வந்து வந்து என் மனத்து இருந்த 
    தேனே*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.      


    பிறிந்தேன் பெற்ற மக்கள்*  பெண்டிர் என்று இவர் பின் உதவாது 
    அறிந்தேன்*  நீ பணித்த அருள் என்னும்*  ஒள் வாள் உருவி

    எறிந்தேன்*  ஐம்புலன்கள் இடர் தீர*  எறிந்து வந்து 
    செறிந்தேன்*  நின் அடிக்கே*  திருவிண்ணகர் மேயவனே.   


    பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள்*  பல்லாண்டு இசைப்ப* 
    ஆண்டார் வையம் எல்லாம்*  அரசு ஆகி*  முன் ஆண்டவரே-

    மாண்டார் என்று வந்தார்*  அந்தோ! மனைவாழ்க்கை-தன்னை* 
    வேண்டேன் நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    கல்லா ஐம்புலன்கள் அவை*  கண்டவாறு செய்யகில்லேன்* 
    மல்லா! மல் அமருள் மல்லர் மாள*  மல் அடர்த்த!*

    மல்லா மல்லல் அம் சீர்*  மதிள் நீர் இலங்கை அழித்த 
    வில்லா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.


    வேறா யான் இரந்தேன்*  வெகுளாது மனக்கொள் எந்தாய்!* 
    ஆறா வெம் நரகத்து*  அடியேனை இடக் கருதி* 

    கூற ஐவர் வந்து குமைக்கக்*  குடிவிட்டவரைத்* 
    தேறாது உன் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே.   


    தீ வாய் வல் வினையார்*  உடன் நின்று சிறந்தவர்போல்* 
    மேவா வெம் நரகத்து இட*  உற்று விரைந்து வந்தார்*

    மூவா வானவர்தம் முதல்வா!*  மதி கோள் விடுத்த 
    தேவா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே 


    போது ஆர் தாமரையாள்*  புலவி குல வானவர்தம் 
    கோதா*  கோது இல் செங்கோல்*  குடை மன்னர் இடை நடந்த

    தூதாதூ*  மொழியாய் சுடர்போல்*  என் மனத்து இருந்த 
    வேதா*  நின் அடைந்தேன்*  திருவிண்ணகர் மேயவனே


    தேன் ஆர் பூம் புறவில்*  திருவிண்ணகர் மேயவனை* 
    வான் ஆரும் மதிள் சூழ்*  வயல் மங்கையர்கோன் மருவார்*

    ஊன் ஆர் வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்* 
    கோன் ஆய் வானவர்தம்*  கொடி மா நகர் கூடுவரே.      


    புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து*  என்னை உள்ளம் கொண்ட- 
    கள்வா! என்றலும்*  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*

    உள்ளே நின்று உருகி*  நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்* 
    நள்ளேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*    


    ஓடா ஆள் அரியின்*  உரு ஆய் மருவி என் தன்-
    மாடே வந்து*  அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*

    பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு* 
    நாடேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*.   


    எம்மானும் எம் அனையும்*  என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்* 
    அம்மானும் அம்மனையும்*  அடியேனுக்கு ஆகி நின்ற*

    நல் மான ஒண் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ!*  உன்- 
    மைம் மான வண்ணம் அல்லால்*  மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*        


    சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்*  உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல் 
    உறைவாய்*  என் நெஞ்சின் உள்ளே*  உறைவாய் உறைந்ததுதான்*

    அறியாது இருந்தறியேன் அடியேன்*  அணி வண்டு கிண்டும்* 
    நறை வாரும் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    நீண்டாயை வானவர்கள்*  நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்* 
    ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு*  நான் அடிமை

    பூண்டேன்*  என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்* 
    நான்தான் உனக்கு ஒழிந்தேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    எம் தாதை தாதை அப்பால்*  எழுவர் பழ அடிமை 
    வந்தார்*  என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*

    அந்தோ! என் ஆர் உயிரே!*  அரசே அருள் எனக்கு* 
    நந்தாமல் தந்த எந்தாய்!*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    மன் அஞ்ச ஆயிரம் தோள்*  மழுவில் துணித்த மைந்தா* 
    என் நெஞ்சத்துள் இருந்து*  இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்* 

    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்*  வளைத்து வைத்தேன்* 
    நல் நெஞ்ச அன்னம் மன்னும்*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    எப்போதும் பொன் மலர் இட்டு*  இமையோர் தொழுது*  தங்கள்- 
    கைப்போது கொண்டு இறைஞ்சி*  கழல்மேல் வணங்க நின்றாய்*

    இப்போது என் நெஞ்சின் உள்ளே*  புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- 
    நல் போது வண்டு கிண்டும்*  நறையூர் நின்ற நம்பீயோ!*           


    ஊன் நேர் ஆக்கைதன்னை*  உழந்து ஓம்பி வைத்தமையால்* 
    யான் ஆய் என்தனக்கு ஆய்*  அடியேன் மனம் புகுந்த

    தேனே!*  தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்* 
    நானே எய்தப் பெற்றேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*     


    நல் நீர் வயல் புடை சூழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கல் நீர மால் வரைத் தோள்*  கலிகன்றி மங்கையர்கோன்*

    சொல் நீர சொல்மாலை*  சொல்லுவார்கள் சூழ் விசும்பில்- 
    நல் நீர்மையால் மகிழ்ந்து*  நெடுங் காலம் வாழ்வாரே.  (2)


    என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்* 
    தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்*  அன்று இடந்தவனை தழலே புரை*

    மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*  சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்* 
    பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*  என் மனம் போற்றி என்னாதே*


    தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
    வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!

    துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
    கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)


    நீள்நிலா முற்றத்து*  நின்றுஇவள் நோக்கினாள்,* 
    காணுமோ!*  கண்ணபுரம் என்று காட்டினாள்,*

    பாணனார் திண்ணம் இருக்க*  இனிஇவள்- 
    நாணுமோ,?*  நன்று நன்று நறையூரர்க்கே. 


    அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
    வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*

    பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
    உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)


    உண்ணும் நாள்இல்லை*  உறக்கமும் தான்இல்லை,* 
    பெண்மையும் சால*  நிறைந்திலள் பேதைதான்,*

    கண்ணன்ஊர் கண்ணபுரம்*  தொழும் கார்க்கடல்- 
    வண்ணர்மேல்,*  எண்ணம் இவட்கு இது என்கொலோ!


    கண்ணன்ஊர்*  கண்ணபுரம் தொழும் காரிகை,* 
    பெண்மைஎன் தன்னுடை*  உண்மை உரைக்கின்றாள்,*

    வெண்ணெய்உண்டு ஆப்புண்ட*  வண்ணம் விளம்பினால்,* 
    வண்ணமும்*  பொன்நிறம் ஆவது ஒழியுமே. 


    வடவரை நின்றும் வந்து*  இன்று கணபுரம்,- 
    இடவகை கொள்வது*  யாம்என்று பேசினாள்,*

    மடவரல் மாதர் என் பேதை*  இவர்க்குஇவள்- 
    கடவதுஎன்,?*  கண்துயில் இன்று இவர் கொள்ளவே.


    தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
    இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*

    துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
    அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    


    தொண்டுஎல்லாம் நின்அடியே*  தொழுது உய்யுமா- 
    கண்டு,*  தான் கண்ணபுரம்*  தொழப் போயினாள்*

    வண்டுஉலாம் கோதை என் பேதை*  மணிநிறம்- 
    கொண்டுதான்,*  கோயின்மை செய்வது தக்கதே?


    முள்எயிறு ஏய்ந்தில,*  கூழை முடிகொடா,* 
    தெள்ளியள் என்பதுஓர்*  தேசுஇலள் என்செய்கேன்,*

    கள்அவிழ் சோலைக்*  கணபுரம் கைதொழும்- 
    பிள்ளையைப்,*  பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 


    கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
    பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*

    சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
    நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)


    பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
    மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*

    என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)


    தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்*  சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
    சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்*  செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*

    பாடக மெல்அடியார் வணங்க*  பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
    ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*  மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
    தாயின நாயகர் ஆவர் தோழீ!*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*

    சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்*  செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
    ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்*  அச்சோ ஒருவர் அழகியவா!        


    வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,* 
    நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*

    செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,* 
    அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!  


    கோழியும் கூடலும் கோயில் கொண்ட*  கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
    பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*  மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
    ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வெம்சின வேழ மருப்புஒசித்த*  வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
    தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*   

    கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த*  காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,* 
    அஞ்சன மாமலையேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*   பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,* 
    பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    அணிகெழு தாமரை அன்ன கண்ணும்*  அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
    அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா! 


    மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட*  மாலிருஞ் சோலை மணாளர் வந்து,*  என்-
    நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*  நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*

    மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த*  மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,* 
    அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    எண்திசையும் எறிநீர்க் கடலும்*  ஏழ்உலகும் உடனே விழுங்கி,* 
    மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்*  மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*

    கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்*  கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்* 
    அண்டத்து அமரர் பணிய நின்றார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
    கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-

    இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
    மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)


    இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை*   இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* 
    பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன்  பட்டனன்*  இனி யாவர்க்கு உரைக்கோம்*

    குரக்கு நாயகர்காள்! இளங்கோவே*   கோல வல்வில் இராம பிரானே* 
    அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை*  நாங்கள்  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  (2)


    பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்*   பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
    சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்*   செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*

    ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்*   ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்* 
    அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்*   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தண்ட காரணியம் புகுந்து*  அன்று  தையலை தகவிலி எம்கோமான்*
    கொண்டு போந்து கெட்டான்*  எமக்கு இங்குஓர்  குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*

    பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்*  பேசுகின்றதுஎன்? தாசரதீ,*  உன்-
    அண்ட வாணர் உகப்பதே செய்தாய்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    எஞ்சல்இல் இலங்கைக்குஇறை*  எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
    நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று*  நங்கையை அவன் தம்பியே சொன்னான்*

    விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்*  வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
    அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்*  சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து* 
    வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே*  குற்றம் ஆயிற்றுக் காணீர்*

    கும்பனோடு நிகும்பனும் பட்டான்*  கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி* 
    அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.


    ஓத மாகடலைக் கடந்துஏறி*  உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து* 
    காதல் மக்களும் சுற்றமும் கொன்று*  கடி இலங்கை மலங்க எரித்து*     

    தூது வந்த குரங்குக்கே*  உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே* 
    ஆதர் நின்று படுகின்றது அந்தோ!*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று*  தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
    மாழை மான்மட நோக்கியை விட்டு*  வாழகில்லா மதிஇல் மனத்தானை*    

    ஏழையை இலங்கைக்கு இறை தன்னை*  எங்களை ஒழியக் கொலை அவனை* 
    சூழு மாநினை மாமணி வண்ணா!*  சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா*  அம்கயல் கண்ணினார்கள் இருப்ப* 
    தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து*  தஞ்சமே சில தாபதர்என்று*

    புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த*  புன்மையாளன் நெஞ்சில் புக எய்த* 
    அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ   


    புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்*  பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
    சரங்களே கொடிதுஆய் அடுகின்ற*  சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*

    இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!*  இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா* 
    குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!*  கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர*  அணி இலங்கை அழித்தவன் தன்னை* 
    பொங்கு மாவலவன் கலி கன்றி*  புகன்ற பொங்கத்தம் கொண்டு,*  இவ்உலகினில்-

    எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!*  இம்மையே இடர் இல்லை,*  இறந்தால்- 
    தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்*  சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!   (2)


    குன்றம் எடுத்து மழைதடுத்து*  இளையாரொடும்*
    மன்றில் குரவை பிணைந்த மால்*  என்னை மால்செய்தான்,*

    முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்*  கிடந்தீர்கின்ற*
    அன்றிலின் கூட்டைப்*  பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ!   (2)


    பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து*  அரிமாச்செகுத்து,*
    ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு*  வன் பேய்முலை-

    வாங்கி உண்ட,*  அவ்வாயன் நிற்க இவ்வாயன் வாய்,*
    ஏங்கு வேய்ங்குழல்*  என்னோடாடும் இளமையே!.


    மல்லோடு கஞ்சனும்*  துஞ்ச வென்ற மணிவண்ணன்,*
    அல்லி மலர்த்தண்துழாய்*  நினைந்திருந்தேனையே,*

    எல்லியில் மாருதம்*  வந்தடும், அதுவன்றியும்,*
    கொல்லை வல்லேற்றின் மணியும்*  கோயின்மை செய்யுமே!.


    பொருந்து மாமரம்*  ஏழும் எய்த புனிதனார்*
    திருந்து சேவடி*  என்மனத்து நினைதொறும்,*

    கருந்தண் மாகடல்*  மங்குலார்க்கும் அதுவன்றியும்,*
    வருந்த வாடை வரும்*  இதற்கினி என்செய்கேன்!


    அன்னை முனிவதும்*  அன்றிலின் குரல் ஈர்வதும்,*
    மன்னு மறிகடல் ஆர்ப்பதும்*  வளை சோர்வதும்*

    பொன்னங் கலையல்குல்*  அன்ன மென்னடைப் பூங்குழல்,*
    பின்னை மணாளர்*  திறத்தவாயின பின்னையே


    ஆழியும் சங்கும் உடைய*  நங்கள் அடிகள்தாம்,*
    பாழிமையான கனவில்*  நம்மைப் பகர்வித்தார்,*

    தோழியும் நானும்  ஒழிய*  வையம் துயின்றது,*
    கோழியும் கூகின்றதில்லைக்*  கூரிருள் ஆயிற்றே!. 


    காமன் தனக்கு முறையல்லேன்*  கடல் வண்ணனார்,*
    மாமணவாளர்*  எனக்குத் தானும் மகன்சொல்லில்,*

    யாமங்கள் தோறும் எரி வீசும்*  என்னிளங் கொங்கைகள்,*
    மாமணி வண்ணர்*  திறத்த வாய் வளர்கின்றவே!


    மஞ்சுறு மாலிருஞ் சோலை*  நின்ற மணாளனார்,*
    நெஞ்சம் நிறைகொண்டு போயினார்*  நினைகின்றிலர்,*

    வெஞ்சுடர் போய் விடியாமல்*  எவ்விடம் புக்கதோ,*
    நஞ்சு உடலம் துயின்றால்*  நமக்கினி நல்லதே! 


    காமன் கணைக்கு ஓர்இலக்கம்ஆய்*  நலத்தில்மிகு,*
    பூமரு கோல*  நம் பெண்மை சிந்தித்திராது போய்*

    தூமலர் நீர்கொடு*  தோழி.நாம் தொழுதேத்தினால்*
    கார்முகில் வண்ணரைக்*  கண்களால் காணலாம் கொலோ!.


    வென்றி விடையுடன்*  ஏழடர்த்த அடிகளை,*
    மன்றில் மலிபுகழ்*  மங்கைமன் கலிகன்றிசொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  உரைப்பவர் தங்கள்மேல்*
    என்றும் நில்லா வினை*  ஒன்றும் சொல்லில் உலகிலே  (2)