பிரபந்த தனியன்கள்

தரவு கொச்சகக் கலிப்பா
தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர 
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர், 
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.
 
இருவிகற்ப நேரிசை வெண்பா
உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில் 
புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே 
வைத்தெடுத்த பக்கம் வலிது.

   பாசுரங்கள்


    பிறப்பினோடு பேர்இடர்ச்*  சுழிக்கண் நின்றும் நீங்கும்அஃது,* 
    இறப்ப வைத்த ஞான நீசரைக்*  கரைக் கொடுஏற்றுமா,* 

    பெறற்குஅரிய நின்னபாத*  பத்திஆன பாசனம்,* 
    பெறற்குஅரிய மாயனே!*  எனக்கு நல்க வேண்டுமே.  


    இரந்து உரைப்பது உண்டுவாழி*  ஏமநீர் நிறத்துஅமா,* 
    வரம் தரும் திருக்குறிப்பில்*  வைத்ததுஆகில் மன்னு சீர்,*

    பரந்த சிந்தை ஒன்றி நின்று*  நின்னபாத பங்கயம்,* 
    நிரந்தரம் நினைப்பதாக*  நீ நினைக்க வேண்டுமே  (2)


    விள்வுஇலாத காதலால்*  விளங்குபாத போதில்வைத்து,* 
    உள்ளுவேனது ஊனநோய்*  ஒழிக்குமா தெழிக்குநீர்ப்,*

    பள்ளிமாய பன்றிஆய*  வென்றிவீர குன்றினால்* 
    துள்ளுநீர் வரம்பு செய்த*  தோன்றல் ஒன்று சொல்லிடே.


    திருக்கலந்து சேரும்மார்ப!*  தேவதேவ தேவனே,* 
    இருக்கலந்த வேதநீதி*  ஆகி நின்ற நின்மலா,*

    கருக்கலந்த காளமேக*  மேனிஆய நின்பெயர்,* 
    உருக்கலந்து ஒழிவிலாது*  உரைக்குமாறு உரைசெயே.      


    கடுங்க வந்தன் வக்கரன்*  கரன் முரன் சிரம் அவை, 
    இடந்து கூறு செய்த*  பல்படைத் தடக்கை மாயனே,*

    கிடந்துஇருந்து நின்றுஇயங்கு*  போதும் நின்ன பொற்கழல்,* 
    தொடர்ந்து மீள்வுஇலாதது ஒர்*  தொடர்ச்சி நல்க வேண்டுமே.    


    மண்ணை உண்டுஉமிழ்ந்து*  பின் இரந்து கொண்டுஅளந்து,*  மண்- 
    கண்ணுள் அல்லதுஇல்லைஎன்று*  வென்ற காலம் ஆயினாய்,*

    பண்ணை வென்ற இன்சொல் மங்கை*  கொங்கை தங்கு பங்கயக்- 
    கண்ண,*  நின்ன வண்ணம் அல்லதுஇல்லை*  எண்ணும் வண்ணமே.    


    கறுத்துஎதிர்ந்த காலநேமி*  காலனோடு கூட அன்று,* 
    அறுத்த ஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்தினாய்,*

    தொறுக்கலந்த ஊனம்அஃது*  ஒழிக்க அன்று குன்றம்முன்,* 
    பொறுத்த நின் புகழ்க்குஅலால் ஒர்*  நேசம்இல்லை நெஞ்சமே!


    காய்சினத்த காசிமன்னன்*  வக்கரன் பவுண்டிரன்,* 
    மாசினத்த மாலிமான்*  சுமாலிகேசி தேனுகன்,* 

    நாசம்உற்று வீழநாள்*  கவர்ந்த நின் கழற்குஅலால்,* 
    நேசபாசம் எத்திறத்தும்*  வைத்திடேன் எம் ஈசனே! 


    கேடுஇல் சீர் வரத்தினாய்க்*  கெடும்வரத்து அயன் அரன், 
    நாடினோடு நாட்டம்ஆயிரத்தன்*  நாடு நண்ணினும்,* 

    வீடதுஆன போகம்எய்தி*  வீற்றிருந்த போதிலும்*, 
    கூடும்ஆசை அல்லதுஒன்று*  கொள்வனோ? குறிப்பிலே?  


    சுருக்குவாரை இன்றியே*  சுருங்கினாய் சுருங்கியும்,* 
    பெருக்குவாரை இன்றியே*  பெருக்கமெய்து பெற்றியோய்,*  

    செருக்குவார்கள் தீக்குணங்கள்*  தீர்த்ததேவ தேவன்என்று,* 
    இருக்குவாய் முனிக்கணங்கள்*  ஏத்த யானும் ஏத்தினேன்.  


    தூயனாயும் அன்றியும்*  சுரும்புஉலாவு தண்துழாய்,* 
    மாய!நின்னை நாயினேன்*  வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்,*

    நீயும் நின் குறிப்பினிற்*  பொறுத்து நல்கு வேலைநீர்* 
    பாயலோடு பத்தர்சித்தம்*  மேய வேலை வண்ணனே! 


    வைது நின்னை வல்லவா*  பழித்தவர்க்கும் மாறில்போர்* 
    செய்து நின்ன செற்றத் தீயில்*  வெந்தவர்க்கும் வந்து உனை*

    எய்தல்ஆகும் என்பர் ஆதலால்*  எம்மாய நாயினேன்,* 
    செய்தகுற்றம் நற்றமாக*  வேகொள் ஞால நாதனே!  


    வாள்கள்ஆகி நாள்கள் செல்ல*  நோய்மைகுன்றி மூப்புஎய்தி,* 
    மாளும்நாள் அதுஆதலால்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*

    ஆளதுஆகும் நன்மைஎன்று*  நன்குணர்ந்துஅது அன்றியும்,* 
    மீள்வுஇலாத போகம்*  நல்க வேண்டும் மால பாதமே.    


    சலம்கலந்த செஞ்சடைக்*  கறுத்தகண்டன் வெண்தலைப்* 
    புலன்கலங்க உண்ட பாதகத்தன்*  வன் துயர் கெட,*

    அலங்கல் மார்வில் வாச நீர்*  கொடுத்தவன் அடுத்தசீர்,* 
    நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம்*  எண்ணு வாழி நெஞ்சமே!


    ஈனமாய எட்டும் நீக்கி*  ஏதம்இன்றி மீதுபோய்,* 
    வானம்ஆள வல்லையேல்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*

    ஞானம்ஆகி ஞாயிறுஆகி*  ஞாலமுற்றும் ஓர்எயிற்று,* 
    ஏனமாய் இடந்த மூர்த்தி*  எந்தை பாதம் எண்ணியே. 


    அத்தன்ஆகி அன்னைஆகி*  ஆளும் எம் பிரானுமாய்,* 
    ஒத்துஒவ்வாத பல் பிறப்புஒழித்து*  நம்மை ஆட்கொள்வான்,*

    முத்தனார் முகுந்தனார்*  புகுந்து நம்முள் மேவினர்,* 
    எத்தினால் இடர்க் கடற்கிடத்தி*  ஏழை நெஞ்சமே!  (2)


    மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
    நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*

    வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
    கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  


    அச்சம் நோயொடு அல்லல்*  பல்பிறப்பு அவாய மூப்புஇவை,* 
    வைத்த சிந்தை வைத்த ஆக்கை*  மாற்றி வானில் ஏற்றுவான்,*

    அச்சுதன் அனந்த கீர்த்தி*  ஆதி அந்தம் இல்லவன்,* 
    நச்சு நாகனைக் கிடந்த*  நாதன் வேத கீதனே. 


    சொல்லினும் தொழிற்கணும்*  தொடக்குஅறாத அன்பினும்,* 
    அல்லும் நன்பகலினோடும்*  ஆன மாலை காலையும்,*

    அல்லி நாள்-மலர்க் கிழத்தி*  நாத!பாத போதினைப்,* 
    புல்லிஉள்ளம் விள்வுஇலாது*  பூண்டு மீண்டது இல்லையே.


    பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
    என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*

    உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
    மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)


    இயக்குஅறாத பல்பிறப்பில்*  என்னை மாற்றி இன்று வந்து,* 
    உயக்கொள் மேக வண்ணன் நண்ணி*  என்னிலாய தன்னுளே,*

    மயக்கினான் தன் மன்னுசோதி*  ஆதலால் என் ஆவிதான்,- 
    இயக்குஎலாம் அறுத்து*  அறாத இன்ப வீடு பெற்றதே  (2)