பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கைம்மான மதயானை*  இடர்தீர்த்த கருமுகிலை* 
    மைம்மான மணியை*  அணிகொள் மரகதத்தை* 

    எம்மானை எம்பிரானை ஈசனை*  என்மனத்துள்- 
    அம்மானை*  அடியேன் அடைந்து உய்ந்து போனேனே.  (2)


    தருமான மழைமுகிலை*  பிரியாது தன்அடைந்தார்*
    வரும்மானம் தவிர்க்கும்*  மணியை அணிஉருவின்*

    திருமாலை அம்மானை*  அமுதத்தை கடல்கிடந்த-
    பெருமானை*  அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே. 


    விடைஏழ் அன்றுஅடர்த்து*  வெகுண்டு விலங்கல்உறப்*
    படையால்ஆழி தட்ட*  பரமன் பரஞ்சோதி*

    மடைஆர் நீலம்மல்கும் வயல்சூழ்*  கண்ணபுரம்ஒன்று-
    உடையானுக்கு*  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?    


    மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
    புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*

    தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
    அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)


    வந்தாய் என்மனத்தே*  வந்துநீ புகுந்தபின்னை,* 
    எந்தாய்! போய்அறியாய்*  இதுவே அமையாதோ*

    கொந்துஆர் பைம்பொழில்சூழ்*  குடந்தைக் கிடந்துஉகந்த-
    மைந்தா,*  உன்னைஎன்றும்*  மறவாமை பெற்றேனே. 


    எஞ்சா வெம்நரகத்து*  அழுந்தி நடுங்குகின்றேற்கு*
    அஞ்சேல்என்று அடியேனை*  ஆட்கொள்ள வல்லானை*

    நெஞ்சே! நீநினையாது*  இறைப்பொழுதும் இருத்திகண்டாய்*
    மஞ்சுஆர் மாளிகைசூழ்*  வயல்ஆலி மைந்தனையே.


    பெற்றார் பெற்றுஒழிந்தார்*  பின்னும்நின்று அடியேனுக்கு*
    உற்றான்ஆய் வளர்த்து*  என்உயிர்ஆகி நின்றானை*

    முற்றா மாமதிகோள் விடுத்தானை*  எம்மானை*
    எத்தால் யான்மறக்கேன்*  இதுசொல்என் ஏழைநெஞ்சே!


    கற்றார் பற்றுஅறுக்கும்*  பிறவிப் பெருங்கடலே*
    பற்றா வந்து அடியேன்*  பிறந்தேன் பிறந்தபின்னை*

    வற்றா நீர்வயல்சூழ்*  வயல்ஆலி அம்மானைப்-
    பெற்றேன்*  பெற்றதுவும்*  பிறவாமை பெற்றேனே.


    கண்ணார் கண்ணபுரம்*  கடிகை கடிகமழும்*
    தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*

    விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
    கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?


    செருநீர வேல்வலவன்*  கலிகன்றி மங்கையர்கோன்*
    கருநீர் முகில்வண்ணன்*  கண்ண புரத்தானை*

    இருநீர்இன் தமிழ்*  இன்இசை மாலைகள் கொண்டுதொண்டீர்* 
    வரும்நீர் வையம்உய்ய*  இவைபாடி ஆடுமினே.   (2)


    கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
    திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*

    திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)


    அன்னைமீர் இதற்கு என்செய்கேன்?*  அணிமேருவின் மீதுஉலவும்* 
    துன்னுசூழ் சுடர் ஞாயிறும்*  அன்றியும்  பல்சுடர்களும்போல்*

    மின்னு நீள்முடிஆரம் பல்கலன்*  தான்உடை எம்பெருமான்* 
    புன்னைஅம் பொழில்சூழ்*  திருப்புலியூர்  புகழும்இவளே.


    புகழும் இவள்நின்று இராப்பகல்*  பொருநீர்க்கடல் தீப்பட்டு*  எங்கும் 
    திகழும்எரியொடு செல்வதுஒப்ப*  செழும்கதிர்ஆழிமுதல்*

    புகழும் பொருபடை ஏந்தி*  போர்புக்கு  அசுரரைப் பொன்றுவித்தான்* 
    திகழும் மணிநெடு மாடம்நீடு*   திருப்புலியூர் வளமே.      


    ஊர்வளம்கிளர் சோலையும்*  கரும்பும்   பெரும்செந்நெலும் சூழ்ந்து* 
    ஏர்வளம்கிளர் தண்பணைக்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

    சீர்வளம்கிளர் மூவுலகுஉண்டுஉமிழ்*  தேவபிரான்* 
    பேர்வளம்கிளர்ந்தன்றிப் பேச்சுஇலள்*  இன்று இப்புனைஇழையே.   


    புனைஇழைகள் அணிவும் ஆடைஉடையும்*   புதுக்கணிப்பும்* 
    நினையும் நீர்மையதுஅன்று இவட்குஇது*  நின்று  நினைக்கப்புக்கால்*

    சுனையினுள் தடம்தாமரை மலரும்*  தண் திருப்புலியூர்* 
    முனைவன் மூவுலகுஆளி*  அப்பன்  திருஅருள் மூழ்கினளே.  


    திருஅருள் மூழ்கி வைகலும்*  செழுநீர்நிறக் கண்ணபிரான்* 
    திருஅருள்களும் சேர்ந்தமைக்கு*  அடையாளம் திருந்தஉள*

    திருஅருள் அருளால் அவன்*  சென்று   சேர்தண் திருப்புலியூர்* 
    திருஅருள் கமுகுஒண் பழத்தது*  மெல்லியல் செவ்விதழே


    மெல்இலைச் செல்வவண் கொடிப்புல்க*   வீங்குஇளம்தாள்கமுகின்* 
    மல்இலை மடல்வாழை*  ஈன்கனி சூழ்ந்து  மணம்கமழ்ந்து*

    புல்இலைத் தெங்கினூடு*  கால் உலவும்தண் திருப்புலியூர்* 
    மல்லல்அம் செல்வக் கண்ணன் தாள்அடைந்தாள்*   இம் மடவரலே   


    மடவரல் அன்னைமீர்கட்கு*  என்சொல்லிச் சொல்லுகேன்?  மல்லைச்செல்வ* 
    வடமொழி மறைவாணர்*  வேள்வியுள் நெய்அழல்வான் புகைபோய்த்*

    திடவிசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்*  தண் திருப்புலியூர்* 
    படஅரவுஅணையான் தன்நாமம் அல்லால்*  பரவாள் இவளே.


    பரவாள் இவள் நின்று இராப்பகல்*  பனிநீர்நிறக் கண்ணபிரான்* 
    விரவார்இசை மறை வேதியர்ஒலி*  வேலையின்  நின்றுஒலிப்ப*

    கரவார் தடம்தொறும் தாமரைக்கயம்*  தீவிகை நின்றுஅலரும்* 
    புரவார் கழனிகள் சூழ்*  திருப்புலியூர்ப்  புகழ்அன்றிமற்றே 


    அன்றி மற்றோர் உபாயம்என்*  இவள்அம்தண் துழாய்கமழ்தல்* 
    குன்றமாமணி மாடமாளிகைக்*  கோலக்  குழாங்கள் மல்கி*

    தென்திசைத் திலதம்புரை*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    நின்ற மாயப்பிரான் திருவருளாம்*  இவள் நேர்பட்டதே.  


    நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை* 
    நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*

    நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும் 
    நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)