பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
    வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-

    தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)


    தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி- 
    மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*

    திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே


    பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!* 
    அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

    சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே* 


    வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்* 
    தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*

    தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து 
    ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*


    நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்- 
    எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-

    செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே*  


    முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்* 
    கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*

    செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்* 
    தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே* 


    சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்- 
    மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*

    தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்- 
    தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)


    மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு* 
    உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்- 

    செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே* 


    கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
    பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*

    திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)


    சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*

    கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
    பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)


    என்றைக்கும் என்னை*  உய்யக்கொண்டு போகிய,* 
    அன்றைக்கு அன்று என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 

    இன் தமிழ் பாடிய ஈசனை*  ஆதியாய்- 
    நின்ற என் சோதியை,*  என் சொல்லி நிற்பனோ? (2)         


    என்சொல்லி நிற்பன்*  என் இன் உயிர் இன்று ஒன்றாய்,* 
    என்சொல்லால் யான்சொன்ன*  இன்கவி என்பித்து,* 

    தன்சொல்லால் தான்தன்னைக்*  கீர்த்தித்த மாயன்,*  என் 
    முன்சொல்லும்*  மூவுருவாம் முதல்வனே.


    ஆம் முதல்வன் இவன் என்று*  தன் தேற்றி,* என் 
    நா முதல் வந்து புகுந்து*  நல் இன் கவி,* 

    தூ முதல் பத்தர்க்குத்*  தான் தன்னைச் சொன்ன,*  என் 
    வாய் முதல் அப்பனை*  என்று மறப்பனோ? 


    அப்பனை என்று மறப்பன்*  என் ஆகியே,* 
    தப்புதல் இன்றி*  தனைக் கவி தான் சொல்லி,* 

    ஒப்பிலாத் தீவினையேனை*  உய்யக்கொண்டு* 
    செப்பமே செய்து*  திரிகின்ற சீர்கண்டே?  


    சீர் கண்டுகொண்டு*  திருந்து நல் இன்கவி,* 
    நேர்பட யான் சொல்லும்*  நீர்மை இலாமையில்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைப்,* 
    பார் பரவு இன்கவி* பாடும் பரமரே.  


    இன் கவி பாடும்*  பரம் கவிகளால்,* 
    தன் கவி தான் தன்னைப்*  பாடுவியாது இன்று* 

    நன்கு வந்து என்னுடன் ஆக்கி*  என்னால் தன்னை,* 
    வன் கவி பாடும்*  என் வைகுந்த நாதனே.


    வைகுந்த நாதன்*  என வல்வினை மாய்ந்து அறச்,* 
    செய் குந்தன் தன்னை*  என் ஆக்கி என்னால் தன்னை,* 

    வைகுந்தன் ஆகப்*  புகழ வண் தீம்கவி,* 
    செய் குந்தன் தன்னை*  எந்நாள் சிந்தித்து ஆர்வனோ!


    ஆர்வனோ ஆழிஅங்கை*  எம் பிரான் புகழ்,* 
    பார் விண் நீர் முற்றும்*  கலந்து பருகிலும்,* 

    ஏர்வு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னைச்,* 
    சீர்பெற இன்கவி*  சொன்ன திறத்துக்கே?


    திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம்*  திருமாலின் சீர்,* 
    இறப்பு எதிர்காலம்* பருகிலும் ஆர்வனோ,* 

    மறப்பு இலா என்னைத்*  தன்னாக்கி என்னால் தன்னை,* 
    உறப் பல இன்கவி*  சொன்ன உதவிக்கே?


    உதவிக் கைம்மாறு*  என் உயிர் என்ன உற்று எண்ணில்,* 
    அதுவும் மற்று ஆங்கவன்*  தன்னது என்னால் தன்னைப்,* 

    பதவிய இன்கவி*  பாடிய அப்பனுக்கு,* 
    எதுவும் ஒன்றும் இல்லை*  செய்வது இங்கும் அங்கே.


    இங்கும் அங்கும்*  திருமால் அன்றி இன்மை கண்டு,* 
    அங்ஙனே வண் குருகூர்ச்*  சடகோபன்,* 

    இங்ஙனே சொன்ன*  ஓர் ஆயிரத்து இப்பத்தும்,* 
    எங்ஙனே சொல்லினும்*  இன்பம் பயக்குமே. (2)