பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
    பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*

    செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      


    வங்கம் ஆர் கடல்கள் ஏழும்*  மலையும் வானகமும் மற்றும்* 
    அம் கண் மா ஞாலம் எல்லாம்*  அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*

    திங்கள் மா முகில் அணவு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
    எங்கள் மால் இறைவன் நாமம்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    ஒருவனை உந்திப் பூமேல்*  ஓங்குவித்து ஆகம்தன்னால்* 
    ஒருவனைச் சாபம் நீக்கி*  உம்பர் ஆள் என்று விட்டான்*

    பெரு வரை மதிள்கள் சூழ்ந்த*  பெரு நகர் அரவு அணைமேல்* 
    கரு வரை வண்ணன்தன் பேர்*  கருதி நான் உய்ந்த ஆறே.


    ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி*  உலகு எலாம் திரியும் ஈசன்* 
    ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன*  ஒண் புனலை ஈந்தான்* 

    தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த*  செறி வயல் தென் திருப்பேர்*
    வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.


    வக்கரன் வாய் முன் கீண்ட*  மாயனே என்று வானோர் 
    புக்கு*  அரண் தந்தருளாய் என்ன*  பொன் ஆகத்தானை* 

    நக்கு அரி உருவம் ஆகி*  நகம் கிளர்ந்து இடந்து உகந்த* 
    சக்கரச் செல்வன் தென்பேர்த்*  தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.


    விலங்கலால் கடல் அடைத்து*  விளங்கிழை பொருட்டு*  வில்லால் 
    இலங்கை மா நகர்க்கு இறைவன்*  இருபது புயம் துணித்தான்*

    நலம் கொள் நான்மறை வல்லார்கள்*  ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு* 
    மலங்கு பாய் வயல் திருப்பேர்*  மருவி நான் வாழ்ந்த ஆறே.


    வெண்ணெய் தான் அமுதுசெய்ய*  வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி* 
    கண்ணி ஆர் குறுங் கயிற்றால்*  கட்ட வெட்டொன்று இருந்தான்*

    திண்ண மா மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  வேலை 
    வண்ணனார் நாமம் நாளும்*  வாய் மொழிந்து உய்ந்த ஆறே.


    அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய*  ஆய்ப்பாடி தன்னுள்* 
    கொம்பு அனார் பின்னை கோலம்*  கூடுதற்கு ஏறு கொன்றான்* 

    செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  மேவும்- 
    எம்பிரான் நாமம் நாளும்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.


    நால் வகை வேதம் ஐந்து வேள்வி*  ஆறு அங்கம் வல்லார்* 
    மேலை வானவரின் மிக்க*  வேதியர் ஆதி காலம்* 

    சேல் உகள் வயல் திருப்பேர்ச்*  செங் கண் மாலோடும் வாழ்வார்* 
    சீல மா தவத்தர் சிந்தை ஆளி*  என் சிந்தையானே.


    வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
    கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*

    திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
    கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       


    மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
    வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*

    தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
    கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   


    என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி* 

    தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்- 
    நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*    


    சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய* 
    பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க* 

    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*      


    நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்* 

    மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்* 
    நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.             


    நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை* 
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்* 

    கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை* 
    என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*   


    காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 
    பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 

    சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 
    மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*


    பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்* 
    ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*

    மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*


    நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்* 
    ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*

    மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*    


    கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ* 
    குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*

    மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்* 
    சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?*  


    தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்* 
    தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்* 

    நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*   


    நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
    சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 

    நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
    சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*