பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
    செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*

    திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
    உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)


    தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
    என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 

    மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
    என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)


    கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
    உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 

    இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
    அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.


    பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
    அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 

    புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
    பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.


    ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
    நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 

    சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
    பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.


    மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
    உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 

    பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
    சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.


    குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
    இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 

    எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
    சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.


    உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
    சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*

    உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட* 
    வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.


    தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
    மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 

    சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
    பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.


    செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
    ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 

    இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
    திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.


    கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
    தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 

    மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
    எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)


    நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
    இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 

    எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
    நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       


    சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
    மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*

    நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
    எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்


    பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*    
    மூசி வண்டு முரலும்*  கண்ணி முடியீர்*

    உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து*  இங்கு அயர்த்தோம்*
    அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்*  இந்தளூரீரே!


    ஆசை வழுவாது ஏத்தும்*  எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு 
    தேசம் அறிய*  உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*

    காசின் ஒளியில் திகழும் வண்ணம்*  காட்டீர் எம் பெருமான்* 
    வாசி வல்லீர்! இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே!             


    தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்*  திசையும் இரு நிலனும்* 
    ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்*  அடியோம் காணோமால்*

    தாய் எம் பெருமான்*  தந்தை தந்தை ஆவீர்*  அடியோமுக் 
    கே எம் பெருமான் அல்லீரோ நீர்*  இந்தளூரீரே!


    சொல்லாது ஒழியகில்லேன்*  அறிந்த சொல்லில்*  நும் அடியார் 
    எல்லாரோடும் ஒக்க*  எண்ணியிருந்தீர் அடியேனை*

    நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்*  நமக்கு இவ் உலகத்தில்* 
    எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்*  இந்தளூரீரே!


    மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள*  எம்மைப் பணி அறியா* 
    வீட்டீர் இதனை வேறே சொன்னோம்*  இந்தளூரீரே*

    காட்டீர் ஆனீர்*  நும்தம் அடிக்கள் காட்டில்*  உமக்கு இந்த 
    நாட்டே வந்து தொண்டர் ஆன*  நாங்கள் உய்யோமே.  


    முன்னை வண்ணம் பாலின் வண்ணம்*  முழுதும் நிலைநின்ற* 
    பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்*  வண்ணம் எண்ணுங்கால்* 

    பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்*  புரையும் திருமேனி* 
    இன்ன வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே!


    எந்தை தந்தை தம்மான் என்று என்று*  எமர் ஏழ் அளவும்* 
    வந்து நின்ற தொண்டரோர்க்கே*  வாசி வல்லீரால்*

    சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்*  சிறிதும் திருமேனி* 
    இந்த வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே.     


    ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*

    சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
    ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)


    நண்ணாதார் முறுவலிப்ப*  நல் உற்றார் கரைந்து ஏங்க,* 
    எண் ஆராத் துயர் விளைக்கும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    கண்ணாளா! கடல் கடைந்தாய்!*  உன கழற்கே வரும் பரிசு,* 
    தண்ணாவாது அடியேனைப்*  பணி கண்டாய் சாமாறே. (2)        


    சாம் ஆறும் கெடும் ஆறும்*  தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து,* 
    ஏமாறிக் கிடந்து அலற்றும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 

    ஆம் ஆறு ஒன்று அறியேன் நான்*  அரவு அணையாய்! அம்மானே,* 
    கூமாறே விரைகண்டாய்*  அடியேனை குறிக்கொண்டே.


    கொண்டாட்டும் குலம் புனைவும்*  தமர் உற்றார் விழு நிதியும்,* 
    வண்டு ஆர் பூங் குழலாளும்,*  மனை ஒழிய உயிர் மாய்தல்,* 

    கண்டு ஆற்றேன் உலகு இயற்கை*  கடல்வண்ணா! அடியேனைப்* 
    பண்டேபோல் கருதாது*  உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.


    கொள் என்று கிளர்ந்து எழுந்த*  பெரும் செல்வம் நெருப்பு ஆக,* 
    கொள் என்று தமம் மூடும்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும்பரிசு,* 
    வள்ளல் செய்து அடியேனை*  உனது அருளால் வாங்காயே. 


    வாங்கு நீர் மலர் உலகில்*  நிற்பனவும் திரிவனவும்,* 
    ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்*  பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,* 

    ஈங்கு இதன்மேல் வெம் நரகம்*  இவை என்ன உலகு இயற்கை?* 
    வாங்கு எனை நீ மணிவண்ணா!*  அடியேனை மறுக்கேலே.    


    மறுக்கி வல் வலைப்படுத்தி*  குமைத்திட்டு கொன்று உண்பர்,* 
    அறப்பொருளை அறிந்து ஓரார்*  இவை என்ன உலகு இயற்கை?* 

    வெறித் துளவ முடியானே!*  வினையேனை உனக்கு அடிமை- 
    அறக்கொண்டாய்,*  இனி என் ஆர் அமுதே!*  கூயருளாயே.  


    ஆயே! இவ் உலகத்து*  நிற்பனவும் திரிவனவும்* 
    நீயே மற்று ஒரு பொருளும்*  இன்றி நீ நின்றமையால்,* 

    நோயே மூப்பு இறப்பு பிறப்பு*  பிணியே என்று இவை ஒழிய,* 
    கூயேகொள் அடியேனை*  கொடு உலகம் காட்டேலே.


    காட்டி நீ கரந்து உமிழும்*  நிலம் நீர் தீ விசும்பு கால்,* 
    ஈட்டி நீ வைத்து அமைத்த*  இமையோர் வாழ் தனி முட்டைக்,* 

    கோட்டையினில் கழித்து*  என்னை உன் கொழும் சோதி உயரத்துக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  எஞ்ஞான்று கூட்டுதியே?   


    கூட்டுதி நின் குரை கழல்கள்*  இமையோரும் தொழாவகைசெய்து,* 
    ஆட்டுதி நீ அரவு அணையாய்!*  அடியேனும் அஃது அறிவன்,* 

    வேட்கை எல்லாம் விடுத்து*  என்னை உன் திருவடியே சுமந்து உழலக்,* 
    கூட்டு அரிய திருவடிக்கள்*  கூட்டினை நான் கண்டேனே.   


    கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும்*  ஐங்கருவி 
    கண்ட இன்பம்,*  தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்,*

    ஒண் தொடியாள் திருமகளும்*  நீயுமே நிலாநிற்ப,* 
    கண்ட சதிர் கண்டொழிந்தேன்*  அடைந்தேன் உன் திருவடியே. 


    திருவடியை நாரணனை*  கேசவனை பரஞ்சுடரை,* 
    திருவடி சேர்வது கருதி*  செழுங் குருகூர்ச் சடகோபன்,* 

    திருவடிமேல் உரைத்த தமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    திருவடியே அடைவிக்கும்*  திருவடி சேர்ந்து ஒன்றுமினே. (2)