பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    என் நாதன் தேவிக்கு*  அன்று இன்பப்பூ ஈயாதாள்* 
    தன் நாதன் காணவே*  தண்பூ மரத்தினை*

    வன் நாதப் புள்ளால்*  வலியப் பறித்திட்ட* 
    என் நாதன் வன்மையைப் பாடிப் பற* 
    எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2) 


    என் வில் வலி கண்டு*  போ என்று எதிர்வந்தான்* 
    தன் வில்லினோடும்*  தவத்தை எதிர்வாங்கி* 

    முன் வில் வலித்து*  முதுபெண் உயிருண்டான்* 
    தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற* 
    தாசரதி தன்மையைப் பாடிப் பற.*


    உருப்பிணி நங்கையைத்*  தேர் ஏற்றிக் கொண்டு* 
    விருப்புற்று அங்கு ஏக*  விரைந்து எதிர் வந்து* 

    செருக்கு உற்றான்*  வீரம் சிதையத்*  தலையைச்- 
    சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற* 
    தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.*


    மாற்றுத்தாய் சென்று*  வனம்போகே என்றிட* 
    ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து*  எம்பிரான்! என்று அழ* 

    கூற்றுத் தாய் சொல்லக்*  கொடிய வனம் போன* 
    சீற்றம் இலாதானைப் பாடிப் பற* 
    சீதை மணாளனைப் பாடிப் பற.*


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சன வண்ணனைப் பாடிப் பற* 
    அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற.*


    முடி ஒன்றி*  மூவுலகங்களும் ஆண்டு*  உன்- 
    அடியேற்கு அருள் என்று*  அவன்பின் தொடர்ந்த* 

    படியில் குணத்துப்*  பரத நம்பிக்கு*  அன்று- 
    அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற* 
    அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*


    காளியன் பொய்கை*  கலங்கப் பாய்ந்திட்டு*  அவன்- 
    நீள்முடி ஐந்திலும்*  நின்று நடம்செய்து*

    மீள அவனுக்கு*  அருள்செய்த வித்தகன்* 
    தோள்-வலி வீரமே பாடிப் பற* 
    தூ மணிவண்ணனைப் பாடிப் பற.*


    தார்க்கு இளந்தம்பிக்கு*  அரசு ஈந்து*  தண்டகம்- 
    நூற்றவள்*  சொற்கொண்டு போகி*  நுடங்கு இடைச்- 

    சூர்ப்பணகாவைச்*  செவியொடு மூக்கு*  அவள்- 
    ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற* 
    அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*


    மாயச் சகடம் உதைத்து*  மருது இறுத்து* 
    ஆயர்களோடு போய்*  ஆநிரை காத்து*  அணி- 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற* 
    ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.* 


    காரார் கடலை அடைத்திட்டு*  இலங்கை புக்கு* 
    ஓராதான் பொன்முடி*  ஒன்பதோடு ஒன்றையும்* 

    நேரா அவன்தம்பிக்கே*  நீள் அரசு ஈந்த* 
    ஆராவமுதனைப் பாடிப் பற* 
    அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.*


    நந்தன் மதலையைக்*  காகுத்த னைநவின்று* 
    உந்தி பறந்த*  ஒளியிழை யார்கள்சொல்* 

    செந்தமிழ்த் தென்புதுவை*  விட்டு சித்தன்சொல்* 
    ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு*  அல்லல் இல்லையே.* (2)


    சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
    நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*

    சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
    வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)


    திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க*  தேவரொடு தானவர்கள் திசைப்ப*
    இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்* 

    எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்*  ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்* 
    மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*  அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
    முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*  முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*

    எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி*  இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய* 
    வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்*  காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி* 
    தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்*  செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்* 
    மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!       


    மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா*  இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர* 
    தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,

    செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*  செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்* 
    மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*  பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு* 
    திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்*  தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்*  உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்*  பெரிய 
    வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து*  வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்* 
    உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை*  உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*

    இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்*  ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்* 
    வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! 


    ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த*  அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்* 
    கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்*  குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*  மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப* 
    மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!   


    வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு*  மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி* 
    எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்*  ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*

    செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப*  சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து* 
    மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர்  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
    வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*

    மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
    சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)


    சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,* 
    என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

    தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,* 
    என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே. 


    உளனாகவே எண்ணி*  தன்னை ஒன்றாக தன் செல்வத்தை* 
    வளனா மதிக்கும்*  இம் மானிடத்தைக் கவி பாடி என்,*

    குளன் ஆர் கழனிசூழ்*  கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே,* 
    உளனாய எந்தையை*  எந்தை பெம்மானை ஒழியவே? 


    ஒழிவு ஒன்று இல்லாத*  பல் ஊழிதோறு ஊழி நிலாவப்,*  போம் 
    வழியைத் தரும் நங்கள்*  வானவர் ஈசனை நிற்கப் போய்,*

    கழிய மிக நல்லவான்*  கவி கொண்டு புலவீர்காள்,* 
    இழியக் கருதி*  ஓர் மானிடம் பாடல் என் ஆவதே.


    என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும்*  புலவீர்காள்,* 
    மன்னா மனிசரைப் பாடிப்*  படைக்கும் பெரும் பொருள்?,*

    மின் ஆர் மணிமுடி*  விண்ணவர் தாதையைப் பாடினால்,* 
    தன்னாகவே கொண்டு*  சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.


    கொள்ளும் பயன் இல்லை*  குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,* 
    வள்ளல் புகழ்ந்து*  நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,* 

    கொள்ளக் குறைவு இலன்*  வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல்,*  என் 
    வள்ளல் மணிவண்ணன் தன்னைக்*  கவி சொல்ல வம்மினோ.


    வம்மின் புலவீர்!*  நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ,* 
    இம் மன் உலகினில்*  செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்,*

    நும் இன் கவி கொண்டு*  நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்,* 
    செம் மின் சுடர் முடி*  என் திருமாலுக்குச் சேருமே.


    சேரும் கொடை புகழ்*  எல்லை இலானை,*  ஓர் ஆயிரம் 
    பேரும் உடைய பிரானை அல்லால்*  மற்று யான் கிலேன்,* 

    மாரி அனைய கை*  மால் வரை ஒக்கும் திண் தோள் என்று,* 
    பாரில் ஓர் பற்றையைப்*  பச்சைப் பசும் பொய்கள் பேசவே.


    வேயின் மலிபுரை தோளி*  பின்னைக்கு மணாளனை,* 
    ஆய பெரும்புகழ்*  எல்லை இலாதன பாடிப்போய்,* 

    காயம் கழித்து*  அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்,* 
    மாய மனிசரை*  என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? 


    வாய்கொண்டு மானிடம் பாடவந்த*  கவியேன் அல்லேன்.* 
    ஆய்கொண்ட சீர்வள்ளல்*  ஆழிப் பிரான் எனக்கே உளன்,*

    சாய் கொண்ட இம்மையும் சாதித்து*  வானவர் நாட்டையும்,* 
    நீ கண்டுகொள் என்று*  வீடும் தரும் நின்றுநின்றே!


    நின்றுநின்று பல நாள் உய்க்கும்*  இவ் உடல் நீங்கிப்போய்,* 
    சென்று சென்று ஆகிலும் கண்டு*  சன்மம் கழிப்பான் எண்ணி,* 

    ஒன்றிஒன்றி உலகம் படைத்தான்*  கவி ஆயினேற்கு,* 
    என்றும் என்றும் இனி*  மற்றொருவர் கவி ஏற்குமே? 


    ஏற்கும் பெரும்புகழ்*  வானவர் ஈசன் கண்ணன் தனக்கு,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  வண் குருகூர்ச் சடகோபன் சொல்,* 

    ஏற்கும் பெரும்புகழ்  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து,* 
    ஏற்கும் பெரும்புகழ்*  சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.