பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை- வெற்பிடை இட்டு*  அதன் ஓசை கேட்கும்* 
    கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்*  காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்*

    புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை*  புரை புரையால் இவை செய்ய வல்ல* 
    அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  (2)  


    வருக வருக வருக இங்கே*  வாமன நம்பீ!  வருக இங்கே* 
    கரிய குழல் செய்ய வாய் முகத்து*  எம்  காகுத்த நம்பீ!  வருக இங்கே*

    அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்!*  அஞ்சனவண்ணா*  அசலகத்தார்* 
    பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்*  பாவியேனுக்கு இங்கே போதராயே  


    திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு*  தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்* 
    உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்*  உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்* 

    அருகு இருந்தார் தம்மை அநியாயம்  செய்வதுதான்*  வழக்கோ? அசோதாய்!* 
    வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்*  வாழ ஒட்டான் மதுசூதனனே


    கொண்டல்வண்ணா!  இங்கே போதராயே*  கோயிற் பிள்ளாய்!  இங்கே போதராயே* 
    தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த*  திருநாரணா!  இங்கே போதராயே* 

    உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி*  ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
    கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்*  கண்ணபிரான் கற்ற கல்வி தானே


    பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்*  பல்வளையாள் என்மகள் இருப்ப*
    மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று*  இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்* 

    சாளக்கிராமம் உடைய நம்பி*  சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்* 
    ஆலைக் கரும்பின் மொழி அனைய*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  


    போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்*  போதரேன் என்னாதே போதர் கண்டாய்* 
    ஏதேனும் சொல்லி அசலகத்தார்*  ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்* 

    கோதுகலம் உடைக்குட்டனேயோ!*  குன்று எடுத்தாய்!  குடம் ஆடு கூத்தா!* 
    வேதப் பொருளே!  என் வேங்கடவா!*  வித்தகனே!  இங்கே போதராயே


    செந்நெல் அரிசி சிறு பருப்புச்*  செய்த அக்காரம் நறுநெய் பாலால்* 
    பன்னிரண்டு திருவோணம் அட்டேன்*  பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்* 

    இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி*  எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    கேசவனே!  இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே*
    நேசம் இலாதார் அகத்து இருந்து*  நீ விளையாடாதே போதராயே*

    தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்*  தொண்டரும் நின்ற இடத்தில் நின்று*
    தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்*  தாமோதரா!  இங்கே போதராயே 


    கன்னல் இலட்டுவத்தோடு சீடை*  காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு* 
    என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்*  இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்* 

    பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்*  பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்* 
    உன்மகன் தன்னை அசோதை நங்காய்!*  கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே 


    சொல்லில் அரசிப் படுதி நங்காய்!*  சூழல் உடையன் உன்பிள்ளை தானே*
    இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்*  கையில் வளையைக் கழற்றிக்கொண்டு* 

    கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற*  அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து* 
    நல்லன நாவற் பழங்கள் கொண்டு*  நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே 


    வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
    பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 

    கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
    எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 


    சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
    நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*

    பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
    மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     


    கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
    தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          


    உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
    வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
    பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   


    அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
    எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
    பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 


    தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
    முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
    பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.


    திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
    புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
    பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   


    இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
    பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            


    குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
    மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*

    விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
    படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     


    பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 

    கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 


    பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 

    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
    உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        


    எம்மாவீட்டுத்*  திறமும் செப்பம்,*  நின் 
    செம்மா பாடபற்புத்*  தலைசேர்த்து ஒல்லை,-

    கைம்மா துன்பம்*  கடிந்த பிரானே,* 
    அம்மா அடியேன்*  வேண்டுவது ஈதே.     


    ஈதே யான் உன்னைக்*  கொள்வது எஞ்ஞான்றும்,*  என் 
    மை தோய் சோதி*  மணிவண்ண எந்தாய்,*

    எய்தா நின் கழல்*  யான் எய்த,*  ஞானக் 
    கைதா* காலக் கழிவு செய்யேலே. 


    செய்யேல் தீவினை என்று*  அருள் செய்யும்,*  என் 
    கை ஆர் சக்கரக்*  கண்ண பிரானே,*

    ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்*  நின் கழல் 
    எய்யாது ஏத்த,*  அருள்செய் எனக்கே.


    எனக்கே ஆட்செய்*  எக்காலத்தும் என்று,*  என் 
    மனக்கே வந்து*  இடைவீடு இன்றி மன்னி,*

    தனக்கே ஆக*  எனைக் கொள்ளும் ஈதே,* 
    எனக்கே கண்ணனை*  யான் கொள் சிறப்பே. 


    சிறப்பில் வீடு*  சுவர்க்கம் நரகம்,* 
    இறப்பில் எய்துக*  எய்தற்க,*  யானும்

    பிறப்பு இல்*  பல் பிறவிப் பெருமானை,* 
    மறப்பு ஒன்று இன்றி*  என்றும் மகிழ்வனே.


    மகிழ் கொள் தெய்வம்*  உலோகம் அலோகம்,* 
    மகிழ் கொள் சோதி*  மலர்ந்த அம்மானே,*

    மகிழ் கொள் சிந்தை*  சொல் செய்கை கொண்டு,*  என்றும் 
    மகிழ்வுற்று*  உன்னை வணங்க வாராயே.      


    வாராய்*  உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,* 
    பேராதே யான் வந்து*  அடையும்படி

    தாராதாய்,*  உன்னை என்னுள்*  வைப்பில் என்றும் 
    ஆராதாய்,*  எனக்கு என்றும் எக்காலே.   


    எக்காலத்து எந்தையாய்*  என்னுள் மன்னில்,*  மற்று 
    எக் காலத்திலும்*  யாதொன்றும் வேண்டேன்,*

    மிக்கார் வேத*  விமலர் விழுங்கும்,*  என் 
    அக்காரக் கனியே*  உன்னை யானே.       


    யானே என்னை*  அறியகிலாதே,* 
    யானே என் தனதே*  என்று இருந்தேன்,*

    யானே நீ*  என் உடைமையும் நீயே,* 
    வானே ஏத்தும்*  எம் வானவர் ஏறே


    ஏறேல் ஏழும்*  வென்று ஏர் கொள் இலங்கையை,* 
    நீறே செய்த*  நெடுஞ் சுடர்ச் சோதி,*

    தேறேல் என்னை*  உன் பொன் அடி சேர்த்து*  ஒல்லை- 
    வேறே போக*  எஞ்ஞான்றும் விடலே.  


    விடல் இல் சக்கரத்து*  அண்ணலை மேவல்* 
    விடல் இல் வண் குருகூர்ச்*  சடகோபன்,*

    கெடல் இல் ஆயிரத்துள்*  இவை பத்தும்,* 
    கெடல் இல் வீடு செய்யும்*  கிளர்வார்க்கே.