பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
    வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*

    எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
    அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)


    முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண*  முனிவரொடு தானவர்கள் திசைப்ப*  வந்து- 
    பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்*  பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்* 

    செந்நெல் மலிகதிர் கவரி வீச*  சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி* 
    அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*


    குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு*  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*  
    நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன*  நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*

    மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு*  வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*  
    அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*     


    சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்*  திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி* 
    இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*  எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*

    புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க*  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல* 
    அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


    சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி*  திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு* 
    மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-  மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*

    இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்* 
    அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


    வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*  மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி* 
    தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்*  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*

    தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்* 
    ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* 


    பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி*  பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்* 
    அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*  அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*

    செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க* 
    அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


    கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து* 
    வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*

    செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
    அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


    ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற* 
    நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி*  நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*

    சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்* 
    ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*      


    பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
    அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*

    கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
    ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)


    மாயா! வாமனனே!*  மதுசூதா நீ அருளாய்,* 
    தீயாய் நீர் ஆய் நிலன் ஆய்*  விசும்பு ஆய் கால் ஆய்,* 

    தாயாய்  தந்தையாய்*  மக்களாய்  மற்றுமாய் முற்றுமாய்,* 
    நீயாய்  நீ நின்றவாறு*  இவை என்ன நியாயங்களே! (2) 


    அங்கண்  மலர்த் தண் துழாய்முடி*  அச்சுதனே! அருளாய்,* 
    திங்களும் ஞாயிறும் ஆய்*  செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,* 

    பொங்கு பொழி மழை ஆய்*  புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ, 
    வெங்கண்வெங் கூற்றமும் ஆம்*  இவை என்ன விசித்திரமே!


    சித்திரத் தேர் வலவா!*  திருச் சக்கரத்தாய்! அருளாய்,* 
    எத்தனை ஓர் உகமும்*  அவை ஆய் அவற்றுள் இயலும்,* 

    ஒத்த ஓண் பல் பொருள்கள்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,* 
    வித்தகத்தாய் நிற்றி நீ*  இவை என்ன விடமங்களே! 


    கள் அவிழ் தாமரைக்கண்*  கண்ணனே! எனக்கு ஒன்று அருளாய்,* 
    உள்ளதும் இல்லதும் ஆய்*  உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்,*

    வெள்ளத் தடம் கடலுள்*  விட நாகு அணைமேல் மருவி,* 
    உள்ளப் பல் யோகு செய்தி*  இவை என்ன உபாயங்களே!     


    பாசங்கள் நீக்கி*  என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,*  நீ 
    வாச மலர்த் தண் துழாய்முடி*  மாயவனே! அருளாய்,*

    காயமும் சீவனும் ஆய்*  கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,* 
    மாயங்கள் செய்துவைத்தி*  இவை என்ன மயக்குக்களே!       


    மயக்கா! வாமனனே!*  மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,* 
    அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய்*  அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்,* 

    வியப்பு ஆய் வென்றிகள் ஆய்*  வினை ஆய் பயன் ஆய் பின்னும்நீ,* 
    துயக்கு ஆய் நீ நின்றவாறு*  இவை என்ன துயரங்களே! 


    துயரங்கள் செய்யும் கண்ணா!*  சுடர் நீள் முடியாய் அருளாய்,*
    துயரம் செய் மானங்கள் ஆய்*  மதன் ஆகி உகவைகள் ஆய்,* 

    துயரம் செய் காமங்கள் ஆய்*  துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,* 
    துயரங்கள் செய்துவைத்தி*  இவை என்ன சுண்டாயங்களே.


    என்ன சுண்டாயங்களால்*  நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா,* 
    இன்னது ஓர் தன்மையை என்று*  உன்னை யாவர்க்கும் தேற்றரியை,* 

    முன்னிய மூவுலகும்*  அவை ஆய் அவற்றைப் படைத்து,*
    பின்னும் உள்ளாய்! புறத்தாய்*!  இவை என்ன இயற்கைகளே!


    என்ன இயற்கைகளால்*  எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
    துன்னு கரசரணம் முதலாக*  எல்லா உறுப்பும்,* 

    உன்னு சுவை ஒளி*  ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,* 
    உன்னை உணரவுறில்*  உலப்பு இல்லை நுணுக்கங்களே.


    இல்லை நுணுக்கங்களே*  இதனில் பிறிது என்னும் வண்ணம்* 
    தொல்லை நல் நூலில் சொன்ன*  உருவும் அருவும் நீயே:* 

    அல்லித் துழாய் அலங்கல்*  அணி மார்ப என் அச்சுதனே,* 
    வல்லது ஓர் வண்ணம் சொன்னால்*  அதுவே உனக்கு ஆம்வண்ணமே.        


    ஆம் வண்ணம் இன்னது ஒன்று*  என்று அறிவது அரிய அரியை,* 
    ஆம் வண்ணத்தால்*  குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த* 

    ஆம் வண்ண ஒண் தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    ஆம் வண்ணத்தால் உரைப்பார்*  அமைந்தார் தமக்கு என்றைக்குமே. (2)