பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
    மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து

    தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
    ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே


    வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
    காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*

    கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
    ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
    முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 

    கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
    அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
    நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*

    வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
    அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
    தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*

    போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
    ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
    தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*

    பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
    அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .


    ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
    காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*

    கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
    காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*

    ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
    ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 


    துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
    உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*

    வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
    அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


    மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
    ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*

    நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
    பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.


    ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
    நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 

    சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
    ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  


    எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
    எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 

    செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்*  திருக்குடந்தை* 
    அம் மா மலர்க்கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)   


    என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
    உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 

    கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
    செல் நாள் எந் நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே*


    செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
    உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 

    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
    அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*.


    அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
    தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*

    செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
    தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    


    சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடிசேரும்- 
    ஊழ் கண்டிருந்தே*  தூராக்குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*

    வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
    யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*.


    அரிஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
    எரி ஏய்! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*

    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
    தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*.


    களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்*  களைகண் மற்று இலேன்* 
    வளை வாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 

    தளரா உடலம் எனது ஆவி*  சரிந்து போம்போது* 
    இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  


    இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
    அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 

    திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
    அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*.


    வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
    ஆரா அமுதாய் அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 

    தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
    ஊராய்!*  உனக்கு ஆள் பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)


    உழலை என்பில் பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
    கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 

    குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)