பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    நல்லது ஓர் தாமரைப் பொய்கை*  நாண்மலர் மேல் பனி சோர* 
    அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு*  அழகழிந்தால் ஒத்ததாலோ* 

    இல்லம் வெறியோடிற்றாலோ*  என்மகளை எங்கும் காணேன்* 
    மல்லரை அட்டவன் பின்போய்*  மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2) 


    ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத*  உருவறைக் கோபாலர் தங்கள்* 
    கன்று கால் மாறுமா போலே*  கன்னி இருந்தாளைக் கொண்டு* 

    நன்றும் கிறி செய்து போனான்*  நாராயணன் செய்த தீமை*
    என்றும் எமர்கள் குடிக்கு*  ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*


    குமரி மணம் செய்து கொண்டு*  கோலம் செய்து இல்லத்து இருத்தி* 
    தமரும் பிறரும் அறியத்*  தாமோதரற்கு என்று சாற்றி* 

    அமரர் பதியுடைத் தேவி*  அரசாணியை வழிபட்டு* 
    துமிலம் எழப் பறை கொட்டித்*  தோரணம் நாட்டிடுங் கொல்லோ?* 


    ஒரு மகள் தன்னை உடையேன்*  உலகம் நிறைந்த புகழால்* 
    திருமகள் போல வளர்த்தேன்*  செங்கண் மால் தான் கொண்டு போனான்* 

    பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*  பெரும்பிள்ளை பெற்ற அசோதை* 
    மருமகளைக் கண்டு உகந்து*  மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?* 


    தம் மாமன் நந்தகோபாலன்*  தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்* 
    செம்மாந்திரே என்று சொல்லி*  செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்*

    கொம்மை முலையும் இடையும்*  கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு* 
    இம் மகளைப் பெற்ற தாயர்* இனித் தரியார் என்னுங் கொல்லோ?* 


    வேடர் மறக்குலம் போலே*  வேண்டிற்றுச் செய்து என்மகளைக்* 
    கூடிய கூட்டமே யாகக்*  கொண்டு குடி வாழுங் கொல்லோ?* 

    நாடும் நகரும் அறிய*  நல்லது ஓர் கண்ணாலம் செய்து* 
    சாடு இறப் பாய்ந்த பெருமான்*  தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*


    அண்டத்து அமரர் பெருமான்*  ஆழியான் இன்று என்மகளைப்* 
    பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?* 

    கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து*  கோவலப் பட்டம் கவித்துப்* 
    பண்டை மணாட்டிமார் முன்னே*  பாதுகாவல் வைக்குங் கொல்லோ?* 


    குடியிற் பிறந்தவர் செய்யும்*  குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ!* 
    நடை ஒன்றும் செய்திலன் நங்காய்!*  நந்தகோபன் மகன் கண்ணன்* 

    இடை இருபாலும் வணங்க*  இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்* 
    கடைகயிறே பற்றி வாங்கிக்*  கை தழும்பு ஏறிடுங் கொல்லோ?* 


    வெண்ணிறத் தோய் தயிர் தன்னை*  வெள்வரைப்பின் முன் எழுந்து* 
    கண் உறங்காதே இருந்து*  கடையவும் தான்வல்லள் கொல்லோ?* 

    ஒண்ணிறத் தாமரைச் செங்கண்*  உலகளந்தான் என்மகளைப்* 
    பண் அறையாப் பணிகொண்டு*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?*


    மாயவன் பின்வழி சென்று*  வழியிடை மாற்றங்கள் கேட்டு* 
    ஆயர்கள் சேரியிலும் புக்கு*  அங்குத்தை மாற்றமும் எல்லாம்*

    தாயவள் சொல்லிய சொல்லைப்*  தண் புதுவைப் பட்டன் சொன்ன* 
    தூய தமிழ் பத்தும் வல்லார்*  தூ மணிவண்ணனுக்கு ஆளரே* (2) 


    நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
    எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*

    எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
    மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)


    முதலைத் தனி மா முரண் தீர அன்று*  முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய* 
    விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி*  வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*

    பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்*  பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்* 
    மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*  அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்* 
    இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*  அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*

    அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*  அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி* 
    மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று*  திசை நான்கும் நான்கும் இரிய*  செருவில் 
    கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய*  கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*

    முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*  ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்* 
    மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*  இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து* 
    தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து*  தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*

    குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே*  குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு* 
    மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!


    பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்*  பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*  அவள்தன் 
    உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*  உடனே சுவைத்தான் இடம்*

    ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி*  கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து* 
    மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


    தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்* 
    இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*  

    மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*  
    முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    


    துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*  துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
    முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*  விளைவித்த அம்மான் இடம்*

    வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று*  மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்* 
    வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  


    விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*  விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்* 
    படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று*  இமையோர் பரவும் இடம்*

    பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப*  தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்* 
    மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!


    வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
    என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*

    கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
    விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)


    முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்*  சீர் 
    அடியானே,*  ஆழ் கடலைக் கடைந்தாய்!*  புள் ஊர் 

    கொடியானே,*  கொண்டல் வண்ணா!*  அண்டத்து உம்பரில் 
    நெடியானே!,*  என்று கிடக்கும் என் நெஞ்சமே. (2)


    நெஞ்சமே! நீள் நகர் ஆக*  இருந்த என் 
    தஞ்சனே,*  தண் இலங்கைக்கு இறையைச் செற்ற 

    நஞ்சனே,*  ஞாலம் கொள்வான்*  குறள் ஆகிய 
    வஞ்சனே,*  என்னும் எப்போதும்,*  என் வாசகமே


    வாசகமே ஏத்த அருள் செய்யும்*  வானவர் தம்- 
    நாயகனே,*  நாள் இளம் திங்களைக்*  கோள் விடுத்து,* 

    வேய் அகம் பால் வெண்ணெய்*  தொடு உண்ட ஆன் ஆயர்- 
    தாயவனே,*  என்று தடவும் என் கைகளே.


    கைகளால் ஆரத்*  தொழுது தொழுது உன்னை,* 
    வைகலும் மாத்திரைப்*  போதும் ஓர் வீடு இன்றி,*

    பை கொள் பாம்பு ஏறி*  உறை பரனே,*  உன்னை 
    மெய்கொள்ளக் காண(  விரும்பும் என் கண்களே.


    கண்களால் காண*  வருங்கொல்?  என்று ஆசையால்,* 
    மண் கொண்ட வாமனன்*  ஏற மகிழ்ந்து செல்,* 

    பண் கொண்ட புள்ளின்*   சிறகு ஒலி பாவித்து,* 
    திண் கொள்ள ஓர்க்கும்*  கிடந்து என் செவிகளே.


    செவிகளால் ஆர*  நின் கீர்த்திக் கனி என்னும் 
    கவிகளே*  காலப் பண் தேன்*  உறைப்பத் துற்று,* 

    புவியின்மேல்*  பொன் நெடும் சக்கரத்து உன்னையே.* 
    அவிவு இன்றி ஆதரிக்கும்*  எனது ஆவியே.


    ஆவியே! ஆர் அமுதே!*  என்னை ஆளுடைத்,* 
    தூவி அம் புள் உடையாய்!*  சுடர் நேமியாய்,* 

    பாவியேன் நெஞ்சம்*  புலம்பப் பலகாலும்,* 
    கூவியும் காணப்பெறேன்*  உன கோலமே. 


    கோலமே! தாமரைக் கண்ணது ஓர்*  அஞ்சன 
    நீலமே,*  நின்று எனது ஆவியை* ஈர்கின்ற

    சீலமே,*  சென்று செல்லாதன*  முன் நிலாம் 
    காலமே,*  உன்னை எந் நாள் கண்டுகொள்வனே?


    கொள்வன் நான் மாவலி*  மூவடி தா என்ற 
    கள்வனே,*  கஞ்சனை வஞ்சித்து*  வாணனை

    உள் வன்மை தீர,*  ஓர் ஆயிரம் தோள் துணித்த* 
    புள் வல்லாய்,*  உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?


    பொருந்திய மா மருதின் இடை போய*  எம் 
    பெருந்தகாய்,*  உன் கழல்*  காணிய பேதுற்று,* 

    வருந்திநான்*  வாசகமாலை கொண்டு*  உன்னையே 
    இருந்து இருந்து*  எத்தனை காலம் புலம்புவனே? 


    புலம்பு சீர்ப்*  பூமி அளந்த பெருமானை,* 
    நலம்கொள்சீர்*  நன் குருகூர்ச் சடகோபன்,*  சொல் 

    வலம் கொண்ட ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்து, 
    இலங்குவான்*  யாவரும் ஏறுவர் சொன்னாலே. (2)