பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    இந்திரனோடு பிரமன்*   ஈசன் இமையவர் எல்லாம்* 
    மந்திர மா மலர் கொண்டு*  மறைந்து உவராய் வந்து நின்றார்*

    சந்திரன் மாளிகை சேரும்*  சதுரர்கள் வெள்ளறை நின்றாய்* 
    அந்தியம் போது இது ஆகும்*  அழகனே!  காப்பிட வாராய்  (2)


    கன்றுகள் இல்லம் புகுந்து*  கதறுகின்ற பசு எல்லாம்*
    நின்றொழிந்தேன் உன்னைக் கூவி*  நேசமேல் ஒன்றும் இலாதாய்!*

    மன்றில் நில்லேல் அந்திப் போது*  மதிற் திருவெள்ளறை நின்றாய்!* 
    நன்று கண்டாய் என்தன் சொல்லு*  நான் உன்னைக் காப்பிட வாராய் 


    செப்பு ஓது மென்முலையார்கள்*  சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு* 
    அப்போது நான் உரப்பப் போய்*  அடிசிலும் உண்டிலை ஆள்வாய்!* 

    முப் போதும் வானவர் ஏத்தும்*  முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! 
    இப்போது நான் ஒன்றும் செய்யேன்*  எம்பிரான் காப்பிட வாராய்!


    கண்ணில் மணல்கொடு தூவிக்*  காலினால் பாய்ந்தனை என்று என்று* 
    எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு* -இவர் ஆர்?- முறைப்படுகின்றார்* 

    கண்ணனே!  வெள்ளறை நின்றாய்!*  கண்டாரொடே தீமை செய்வாய்! 
    வண்ணமே வேலையது ஒப்பாய்!*  வள்ளலே! காப்பிட வாராய்        


    பல்லாயிரவர் இவ் ஊரில்*  பிள்ளைகள் தீமைகள் செய்வார்*
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது*  எம்பிரான்!  நீ இங்கே வாராய்* 

    நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!*  ஞானச் சுடரே!  உன்மேனி*
    சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்*  சொப்படக் காப்பிட வாராய்  


    கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்*  கரு நிறச் செம் மயிர்ப் பேயை* 
    வஞ்சிப்பதற்கு விடுத்தான்*  என்பது ஓர் வார்த்தையும் உண்டு* 

    மஞ்சு தவழ் மணி மாட*  மதிற் திருவெள்ளறை நின்றாய்! 
    அஞ்சுவன் நீ அங்கு நிற்க*  அழகனே!  காப்பிட வாராய்


    கள்ளச் சகடும் மருதும்*  கலக்கு அழிய உதைசெய்த* 
    பிள்ளையரசே!*  நீ பேயைப் பிடித்து முலை உண்ட பின்னை* 

    உள்ளவாறு ஒன்றும் அறியேன்*  ஒளியுடை வெள்ளறை நின்றாய்!*
    பள்ளிகொள் போது இது ஆகும்*  பரமனே!  காப்பிட வாராய்   


    இன்பம் அதனை உயர்த்தாய்!*  இமையவர்க்கு என்றும் அரியாய்!* 
    கும்பக் களிறு அட்ட கோவே!*  கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே!* 

    செம்பொன் மதில் வெள்ளறையாய்!*  செல்வத்தினால் வளர் பிள்ளாய்! 
    கம்பக் கபாலி காண் அங்கு*  கடிது ஓடிக் காப்பிட வாராய்     


    இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு*  எழில் மறையோர் வந்து நின்றார்* 
    தருக்கேல் நம்பி!  சந்தி நின்று*  தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்* 

    திருக்காப்பு நான் உன்னைச் சாத்த*  தேசு உடை வெள்ளறை நின்றாய்!*
    உருக் காட்டும் அந்தி விளக்கு*  இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் 


    போது அமர் செல்வக்கொழுந்து*  புணர் திருவெள்ளறையானை* 
    மாதர்க்கு உயர்ந்த அசோதை*  மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்* 

    வேதப் பயன் கொள்ள வல்ல*  விட்டுசித்தன் சொன்ன மாலை* 
    பாதப் பயன் கொள்ள வல்ல*  பத்தர் உள்ளார் வினை போமே  (2)


    திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
    முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 

    எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
    அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     


    வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்*  வேதம் உரைத்து இமையோர் வணங்கும்* 
    செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்* 

    வந்து குறள்உருவாய் நிமிர்ந்து*  மாவலி வேள்வியில் மண்அளந்த* 
    அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே.   


    செம்பொன்இலங்கு வலங்கைவாளி *  திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்* 
    உம்பர்இருசுடர்ஆழியோடு*  கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே* 

    வெம்பு சினத்து அடல் வேழம்வீழ*  வெண்மருப்புஒன்று பறித்து*
    இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே . 


    மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி*  மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
    அதன்மருப்புஒன்று வாங்கும்*  ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்* 

    வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி*  வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து* 
    அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்ட புயகரத்தேன் என்றாரே. 


    கலைகளும் வேதமும் நீதிநூலும்*  கற்பமும் சொல் பொருள் தானும்*
    மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்*  நீர்மையினால் அருள் செய்து*

    நீண்ட மலைகளும் மாமணியும்*  மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
    அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


    எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்*  ஏதும் அறிகிலம் ஏந்திழையார்* 
    சங்கும் மனமும் நிறையும் எல்லாம்*  தம்மனஆகப் புகுந்து*

    தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா*  போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்* 
    அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


    முழுசிவண்டுஆடிய தண்துழாயின்*  மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
    சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்*  எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்* 

    எழுதிய தாமரை அன்னகண்ணும்*  ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்* 
    அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.


    மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க*  வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி* 
    அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்*  மற்றுஇவர் வண்ணம் எண்ணில்* 

    காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்*  கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
    என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தே என்றாரே.        


    தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா*  நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
    வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி*  வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு* 

    நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்*  நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
    அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன்என்றாரே.   


    மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்*  நீள்முடி மாலை வயிரமேகன்* 
    தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி*  அட்ட புயகரத்து ஆதிதன்னை* 

    கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்*  காமருசீர்க் கலிகன்றி*
    குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 


    அணைவது அரவு அணைமேல்*  பூம்பாவை ஆகம் 
    புணர்வது,*  இருவர் அவர் முதலும் தானே,*

    இணைவன்*  ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்,* 
    புணைவன்*  பிறவிக்கடல் நீந்துவார்க்கே.


    நீந்தும் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    நீந்தும் துயர் இல்லா*  வீடு முதல் ஆம்,*

    பூந் தண் புனல் பொய்கை*  யானை இடர் கடிந்த,* 
    பூந் தண் துழாய்*  என் தனி நாயகன் புணர்ப்பே.


    புணர்க்கும் அயன் ஆம்*  அழிக்கும் அரன் ஆம்,* 
    புணர்த்த தன் உந்தியொடு*  ஆகத்து மன்னி,* 

    புணர்த்த திருஆகித்*  தன் மார்வில் தான்சேர்,* 
    புணர்ப்பன் பெரும் புணர்ப்பு*  எங்கும் புலனே.


    புலன் ஐந்து மேயும்*  பொறி ஐந்தும் நீங்கி,* 
    நலம் அந்தம் இல்லது ஓர்*  நாடு புகுவீர்,*

    அலமந்து வீய*  அசுரரைச் செற்றான்,* 
    பலம் முந்து சீரில்*  படிமின் ஒவாதே. 


    ஓவாத் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
    மூவாத் தனி முதலாய்*  மூவுலகும் காவலோன்,*

    மா ஆகி ஆமை ஆய்*  மீன் ஆகி மானிடம் ஆம்,* 
    தேவாதி தேவ பெருமான்*  என் தீர்த்தனே.         


    தீர்த்தன் உலகு அளந்த*  சேவடிமேல் பூந்தாமம்,* 
    சேர்த்தி அவையே*  சிவன் முடிமேல் தான் கண்டு,*

    பார்த்தன் தெளிந்தொழிந்த*  பைந்துழாயான் பெருமை,* 
    பேர்த்தும் ஒருவரால்*  பேசக் கிடந்ததே?        


    கிடந்து இருந்து நின்று அளந்து*  கேழல் ஆய் கீழ்ப் புக்கு 
    இடந்திடும்,*  தன்னுள் கரக்கும் உமிழும்,*

    தடம் பெருந் தோள் ஆரத் தழுவும்*  பார் என்னும் 
    மடந்தையை,*  மால் செய்கின்ற,*  மால் ஆர் காண்பாரே?    


    காண்பார் ஆர்? எம் ஈசன்*  கண்ணனை என்காணுமாறு,?* 
    ஊண் பேசில் எல்லா*  உலகும் ஓர் துற்று ஆற்றா,*

    சேணபாலவீடோ*  உயிரோ மற்று எப் பொருட்கும்,* 
    ஏண் பாலும் சோரான்*  பரந்து உளன் ஆம் எங்குமே.


    எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
    இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*

    அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
    சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 


    சீர்மை கொள் வீடு*  சுவர்க்கம் நரகு ஈறா,* 
    ஈர்மை கொள் தேவர்*  நடுவா மற்று எப் பொருட்கும்,*

    வேர் முதல் ஆய் வித்து ஆய்*  பரந்து தனி நின்ற,* 
    கார் முகில் போல் வண்ணன்*  என் கண்ணனை நான் கண்டேனே.        


    கண் தலங்கள் செய்ய*  கரு மேனி அம்மானை,* 
    வண்டு அலம்பும் சோலை*  வழுதி வள நாடன்,*

    பண் தலையில் சொன்ன தமிழ்*  ஆயிரத்து இப் பத்தும் வலார்,* 
    விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்*  எம் மா வீடே.