பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
    உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*

    ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
    அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)


    பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
    வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

    சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
    அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 


    நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
    செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*

    பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
    ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
    வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*

    நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
    அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
    பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 

    கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
    அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   


    தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
    தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-

    சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
    ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  


    கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
    இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 

    பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
    அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 


    நெடியானே! கடிஆர் கலிநம்பீ!*  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்* 
    கடிஆர் காளையர்ஐவர் புகுந்து*  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*

    குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*   கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி* 
    அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!*   அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


    கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
    போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 

    தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
    ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*


    அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
    கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*

    சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
    மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)


    ஏழையர் ஆவிஉண்ணும்*  இணைக் கூற்றம்கொலோ அறியேன்,* 
    ஆழிஅம் கண்ணபிரான்*  திருக்கண்கள் கொலோ அறியேன்,*

    சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும்கண்டீர்,* 
    தோழியர்காள்! அன்னைமீர்!* என்செய்கேன் துயராட்டியேனே?  (2)


    ஆட்டியும் தூற்றியும் நின்று*  அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?* 
    மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*

    ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,* 
    மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.


    வாலியதுஓர் கனிகொல்*  வினையாட்டியேன் வல்வினைகொல்,* 
    கோலம் திரள்பவளக்*  கொழும்துண்டம்கொலோ? அறியேன்,*

    நீல நெடுமுகில்போல்*  திருமேனி அம்மான் தொண்டைவாய்,* 
    ஏலும் திசையுள்எல்லாம்*  வந்து தோன்றும் என்இன்உயிர்க்கே. 


    இன்உயிர்க்கு ஏழையர்மேல்* வளையும் இணை நீலவிற்கொல்,* 
    மன்னிய சீர்மதனன்* கருப்புச் சிலை கொல்,*  மதனன்

    தன்உயிர்த் தாதை* கண்ணபெருமான் புருவம்அவையே,* 
    என்உயிர் மேலனவாய்* அடுகின்றன என்றும் நின்றே  


    என்றும் நின்றேதிகழும்*  செய்ய ஈன்சுடர் வெண்மின்னுக்கொல்,* 
    அன்றி என்ஆவிஅடும்*  அணி முத்தம்கொலோ? அறியேன்,*

    குன்றம் எடுத்தபிரான்*  முறுவல் எனதுஆவிஅடும்* 
    ஒன்றும் அறிகின்றிலேன்* அன்னைமீர்! எனக்கு உய்வுஇடமே       


    உய்விடம் ஏழையர்க்கும்*  அசுரர்க்கும் அரக்கர்கட்கும்* 
    எவ்விடம் என்றுஇலங்கி* மகரம் தழைக்கும் தளிர்கொல்,*

    பைவிடப் பாம்புஅணையான்*  திருக்குண்டலக் காதுகளே?* 
    கைவிடல் ஒன்றும்இன்றி*  அடுகின்றன காண்மின்களே 


    காண்மின்கள் அன்னையர்காள்*! என்று காட்டும் வகைஅறியேன்,* 
    நாள்மன்னு வெண்திங்கள் கொல்!* நயந்தார்கட்கு நச்சுஇலைகொல்,*

    சேண்மன்னு நால்தடம்தோள்*  பெருமான்தன் திருநுதலே?,* 
    கோள்மன்னி ஆவிஅடும்* கொடியேன் உயிர் கோள்இழைத்தே


    கோள்இழைத் தாமரையும்*  கொடியும் பவளமும் வில்லும்,.* 
    கோள்இழைத் தண் முத்தமும்*  தளிரும் குளிர்வான் பிறையும்,*

    கோள்இழையாஉடைய*  கொழும்சோதி வட்டம்கொல் கண்ணன், 
    கோள்இழை வாள் முகமாய்*  கொடியேன் உயிர் கொள்கின்றதே? 


    கொள்கின்ற கோள் இருளைச்*  சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்,* 
    உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்?*  அன்று மாயன் குழல்,*

    விள்கின்ற பூந்தண்துழாய்*  விரை நாற வந்து என் உயிரைக்,* 
    கள்கின்றவாறு அறியீர்*  அன்னைமீர்! கழறாநிற்றிரே.


    நிற்றி முற்றத்துள் என்று*  நெரித்த கையர் ஆய்*  
    என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும்*  வைதிர் சுடர்ச் சோதி மணிநிறம்ஆய்,*

    முற்ற இம்மூவுலகும்*  விரிகின்ற சுடர்முடிக்கே,* 
    ஒற்றுமை கொண்டது உள்ளம்*  அன்னைமீர்! நசை என் நுங்கட்கே?  


    கட்கு அரிய பிரமன் சிவன்*  இந்திரன் என்று இவர்க்கும்,* 
    கட்கு அரிய கண்ணனைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    உட்கு உடை ஆயிரத்துள்*  இவையும் ஒரு பத்தும் வல்லார்,* 
    உட்கு உடை வானவரோடு*  உடனாய் என்றும் மாயாரே. (2)