பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
    பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*

    கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
    அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
    தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*

    பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
    அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
    துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
    அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  


    மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
    பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*

    சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
    ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     


    எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
    பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*

    வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
    அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    


    ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
    ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*

    ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
    ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
    எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*

    வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
    அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 


    ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
    சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*

    பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
    ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


    பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
    மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச

    சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
    ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


    பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
    அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*

    மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      


    நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்*  ஆகிலும் இனி உன்னை விட்டு* 
    ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன்*  அரவின் அணை அம்மானே* 

    சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்*  சிரீவரமங்கல நகர்* 
    வீற்றிருந்த எந்தாய்!*  உனக்கு மிகை அல்லேன் அங்கே*.    


    அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்*  உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து*  நான் 
    எங்குற்றேனும் அல்லேன்*  இலங்கை செற்ற அம்மானே* 

    திங்கள் சேர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கலநகர் உறை* 
    சங்கு சக்கரத்தாய்!*  தமியேனுக்கு அருளாயே*.         


    கருளப் புள் கொடி சக்கரப் படை*  வான நாட! என் கார்முகில் வண்ணா* 
    பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி*  அடிமைகொண்டாய்*

    தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்*  சிரீவரமங்கலநகர்க்கு* 
    அருள்செய்து அங்கு இருந்தாய்!*  அறியேன் ஒரு கைம்மாறே*


    மாறு சேர் படை நூற்றுவர் மங்க*  ஓர் ஐவர்க்கு ஆய் அன்று மாயப்போர் பண்ணி* 
    நீறு செய்த எந்தாய்!*  நிலம் கீண்ட அம்மானே* 

    தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    ஏறி வீற்றிருந்தாய்!*  உன்னை எங்கு எய்தக் கூவுவனே?*    


    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?*  எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று* 
    கைதவங்கள் செய்யும்*  கரு மேனி அம்மானே*

    செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    கைதொழ இருந்தாய்*  அது நானும் கண்டேனே*.


    ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!*  என்றும் என்னை ஆளுடை* 
    வான நாயகனே!*  மணி மாணிக்கச்சுடரே*

    தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்*  கைதொழ உறை* 
    வானமாமலையே!*  அடியேன் தொழ வந்தருளே*. (2)    


    வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட*  வானவர் கொழுந்தே!*  உலகுக்கு ஓர்- 
    முந்தைத் தாய் தந்தையே!*  முழு ஏழ் உலகும் உண்டாய்!* 

    செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    அந்தம் இல் புகழாய்!*  அடியேனை அகற்றேலே*.       


    அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை*  நன்கு அறிந்தனன்* 
    அகற்றி என்னையும் நீ*  அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்* 

    பகல் கதிர் மணி மாடம் நீடு*  சிரீவரமங்கை வாணனே*  என்றும்- 
    புகற்கு அரிய எந்தாய்!*  புள்ளின் வாய் பிளந்தானே!*    


    புள்ளின் வாய் பிளந்தாய்! மருது இடை போயினாய்!*  எருது ஏழ் அடர்த்த*  என்- 
    கள்ள மாயவனே!*  கருமாணிக்கச் சுடரே*

    தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார்*  மலி தண் சிரீவரமங்கை* 
    யுள் இருந்த எந்தாய்!*  அருளாய் உய்யுமாறு எனக்கே*.  


    ஆறு எனக்கு நின் பாதமே*  சரண் ஆகத் தந்தொழிந்தாய்*  உனக்கு ஓர்கைம் 
    மாறு நான் ஒன்று இலேன்*  எனது ஆவியும் உனதே*

    சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும்*  மலி தண் சிரீவரமங்கை* 
    நாறு பூந் தண் துழாய் முடியாய்!*  தெய்வ நாயகனே!*.


    தெய்வ நாயகன் நாரணன்*  திரிவிக்கிரமன் அடி இணைமிசை* 
    கொய் கொள் பூம் பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன்*

    செய்த ஆயிரத்துள் இவை*  தண் சிரீவரமங்கை மேய பத்துடன்* 
    வைகல் பாட வல்லார்*  வானோர்க்கு ஆரா அமுதே*. (2)