பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்* 
    எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

    கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்* 
    கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)


    சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச* 
    மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்* 
    கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.  


    அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு- 
    எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

    சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*
    கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே 


    இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை* 
    நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

    இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*
    கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்* 
    மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்* 
    கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு* 
    மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட* 
    கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.


    விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி* 
    மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

    அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்* 
    கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 


    திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்* 
    அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*

    நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு- 
    கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.


     வடதிசை மதுரை சாளக்கிராமம்*  வைகுந்தம் துவரை அயோத்தி* 
    இடமுடை வதரி இடவகையுடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    தடவரை அதிரத் தரணி விண்டிடியத்*  தலைப்பற்றிக் கரைமரம்சாடி* 
    கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


     மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை- 
    ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

    மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்* 
    கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)


    பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்* 
    வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

    தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு* 
    கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)


    கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
    நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*

    திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    அண்ணா அடியேன் இடரைக் களையாயே.


    கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
    நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
    எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.


    குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
    நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

    சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
    நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 


    கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
    நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*

    தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.


    வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
    நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
    பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.


    கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
    நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.


    கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
    நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

    சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 


    வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
    நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*

    சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
    ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.


    பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
    நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*

    தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
    'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 


    நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
    செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*

    கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)


    சீலம் இல்லாச் சிறியனேலும்*  செய்வினையோ பெரிதால்,* 
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி*  'நாராயணா! என்று என்று,*

    காலந்தோறும் யான் இருந்து*  கைதலைபூசல் இட்டால்* 
    கோல மேனி காண வாராய்*  கூவியும் கொள்ளாயே.


    கொள்ள மாளா இன்ப வெள்ளம்*  கோது இல தந்திடும்,*  என் 
    வள்ளலேயோ! வையம் கொண்ட*  வாமனாவோ! என்று என்று,* 

    நள் இராவும் நன் பகலும்*  நான் இருந்து ஓலம் இட்டால்,* 
    கள்ள மாயா! உன்னை*  என் கண் காண வந்து ஈயாயே.


    'ஈவு இலாத தீவினைகள்*  எத்தனை செய்தனன்கொல்?* 
    தாவி வையம் கொண்ட எந்தாய்!*  தாமோதரா! என்று என்று* 

    கூவிக் கூவி நெஞ்சு உருகி*  கண்பனி சோர நின்றால்,* 
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய்*  பாவியேன் காண வந்தே.   


    'காண வந்து என் கண்முகப்பே*  தாமரைக்கண் பிறழ,* 
    ஆணி செம்பொன் மேனி எந்தாய்!*  நின்று அருளாய் என்று என்று,* 

    நாணம் இல்லாச் சிறு தகையேன்*  நான் இங்கு அலற்றுவது என்,* 
    பேணி வானோர் காணமாட்டாப்*  பீடு உடை அப்பனையே? 


    அப்பனே! அடல் ஆழியானே,*  ஆழ் கடலைக் கடைந்த 
    துப்பனே,*  உன் தோள்கள் நான்கும்*  கண்டிடக்கூடுங்கொல்? என்று*

    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு*  ஆவி துவர்ந்து துவர்ந்து,* 
    இப்பொழுதே வந்திடாய் என்று*  ஏழையேன் நோக்குவனே.    


    நோக்கி நோக்கி உன்னைக் காண்பான்*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை*  நாள்தோறும் என்னுடைய,* 

    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும்*  அல்ல புறத்தினுள்ளும்,* 
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்!*  நின்னை அறிந்து அறிந்தே.


    அறிந்து அறிந்து தேறித் தேறி*  யான் எனது ஆவியுள்ளே,* 
    நிறைந்த ஞான மூர்த்தியாயை*  நின்மலமாக வைத்து,* 

    பிறந்தும் செத்தும் நின்று இடறும்*  பேதைமை தீர்ந்தொழிந்தேன்* 
    நறுந் துழாயின் கண்ணி அம்மா!*  நான் உன்னைக் கண்டுகொண்டே!


    கண்டுகொண்டு என் கைகள் ஆர*  நின் திருப்பாதங்கள்மேல்,* 
    எண் திசையும் உள்ள பூக்கொண்டு*  ஏத்தி உகந்து உகந்து,* 

    தொண்டரோங்கள் பாடி ஆட*  சூழ் கடல் ஞாலத்துள்ளே,* 
    வண் துழாயின் கண்ணி வேந்தே!*  வந்திடகில்லாயே.   


    இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன்*  ஐம்புலன் வெல்ல கில்லேன்,* 
    கடவன் ஆகி காலந்தோறும்*  பூப்பறித்து ஏத்த கில்லேன்,*

    மட வல் நெஞ்சம் காதல் கூர*  வல்வினையேன் அயர்ப்பாய்த்,* 
    தடவுகின்றேன் எங்குக் காண்பன்*  சக்கரத்து அண்ணலையே?  


    சக்கரத்து அண்ணலே என்று*  தாழ்ந்து கண்ணீர் ததும்ப,* 
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன்*  பாவியேன் காண்கின்றிலேன்,* 

    மிக்க ஞான மூர்த்தி ஆய*  வேத விளக்கினை*  என் 
    தக்க ஞானக் கண்களாலே*  கண்டு தழுவுவனே.          


    தழுவிநின்ற காதல் தன்னால்*  தாமரைக் கண்ணன் தன்னை,* 
    குழுவு மாடத் தென் குருகூர்*  மாறன் சடகோபன்,*  சொல் 

    வழுவு இலாத ஒண் தமிழ்கள்*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    தழுவப் பாடி ஆட வல்லார்*  வைகுந்தம் ஏறுவரே.