பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    ஐய புழுதி உடம்பு அளைந்து*  இவள் பேச்சும் அலந்தலையாய்ச்* 
    செய்ய நூலின் சிற்றாடை*  செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்* 

    கையினில் சிறுதூதை யோடு*  இவள் முற்றில் பிரிந்தும் இலள்* 
    பை அரவணைப் பள்ளியானொடு*  கைவைத்து இவள்வருமே.* (2)


    வாயிற் பல்லும் எழுந்தில*  மயிரும் முடி கூடிற்றில* 
    சாய்வு இலாத குறுந்தலைச்* சில பிள்ளைகளோடு இணங்கி* 

    தீ இணக்கு இணங்கு ஆடி வந்து*  இவள் தன் அன்ன செம்மை சொல்லி* 
    மாயன் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே* 


    பொங்கு வெண்மணல் கொண்டு*  சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்* 
    சங்கு சக்கரம் தண்டு வாள்*  வில்லும் அல்லது இழைக்கலுறாள்* 

    கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில*  கோவிந்தனோடு இவளைச்* 
    சங்கை யாகி என் உள்ளம்*  நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே.* 


    ஏழை பேதை ஓர் பாலகன் வந்து*  என் பெண்மகளை எள்கி* 
    தோழிமார் பலர் கொண்டுபோய்ச்*  செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?* 

    ஆழியான் என்னும் ஆழ மோழையில்*  பாய்ச்சி அகப்படுத்தி* 
    மூழை உப்பு அறியாது என்னும்*  மூதுரையும் இலளே*


    நாடும் ஊரும் அறியவே போய்*  நல்ல துழாய் அலங்கல்- 
    சூடி*  நாரணன் போம் இடம் எல்லாம்*  சோதித்து உழிதர்கின்றாள்* 

    கேடு வேண்டுகின்றார் பலர் உளர்*  கேசவனோடு இவளைப்* 
    பாடிகாவல் இடுமின் என்று என்று*  பார் தடுமாறினதே.*


    பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து*  இவள் பாடகமும் சிலம்பும்* 
    இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு*  என்னோடு இருக்கலுறாள்*

    பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று*  இவள் பூவைப் பூவண்ணா என்னும்* 
    வட்ட வார் குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    பேசவும் தரியாத பெண்மையின்*  பேதையேன் பேதை இவள்* 
    கூசமின்றி நின்றார்கள்*  தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய்* 

    கேசவா என்றும் கேடிலீ என்றும்*  கிஞ்சுக வாய் மொழியாள்* 
    வாச வார்குழல் மங்கைமீர்!*  இவள் மால் உறுகின்றாளே.*


    காறை பூணும் கண்ணாடி காணும்*  தன் கையில் வளை குலுக்கும்* 
    கூறை உடுக்கும் அயர்க்கும்*  தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்* 

    தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்*  தேவன் திறம் பிதற்றும்* 
    மாறில் மா மணிவண்ணன்மேல்*  இவள் மால் உறுகின்றாளே.*


    கைத்தலத்து உள்ள மாடு அழியக்*  கண்ணாலங்கள் செய்து*  இவளை- 
    வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?*  நம்மை வடுப்படுத்தும்*

    செய்த்தலை எழு நாற்றுப் போல்*  அவன் செய்வன செய்துகொள்ள* 
    மைத் தடமுகில் வண்ணன் பக்கல்*  வளர விடுமின்களே.*


    பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து*   பேணி நம் இல்லத்துள்ளே* 
    இருத்துவான் எண்ணி நாம் இருக்க*  இவளும் ஒன்று எண்ணுகின்றாள்* 

    மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்*  வார்த்தை படுவதன்முன்* 
    ஒருப்படுத்து இடுமின் இவளை* உலகளந்தான் இடைக்கே.*


    ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்*  நாராயணனுக்கு*  இவள்- 
    மாலதாகி மகிழ்ந்தனள் என்று*  தாய் உரை செய்ததனை* 

    கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் சொன்ன* 
    மாலை பத்தும் வல்லவர்கட்கு*  இல்லை வரு துயரே.* (2)


    கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
    வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*

    வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
    அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    


    பண்டு இவன் ஆயன் நங்காய்!*  படிறன் புகுந்து*
    என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து*

    அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  கிளிபோல் மிழற்றி நடந்து* 
    வண்டு அமர் கானல் மல்கும்*  வயல் ஆலி புகுவர்கொலோ!       


    அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!*  அரக்கர் குலப் பாவை தன்னை* 
    வெம் சின மூக்கு அரிந்த*  விறலோன் திறம் கேட்கில் மெய்யே* 

    பஞ்சிய மெல் அடி*  எம் பணைத் தோளி பரக்கழிந்து* 
    வஞ்சி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!     


    ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*
    மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*

    மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
    போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 


    தாய் எனை என்று இரங்காள்*  தடந் தோளி தனக்கு அமைந்த* 
    மாயனை மாதவனை*  மதித்து என்னை அகன்ற இவள்*

    வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
    தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*

    வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
    இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    


    அன்னையும் அத்தனும் என்று*  அடியோமுக்கு இரங்கிற்றிலள்* 
    பின்னைதன் காதலன்தன்*  பெருந் தோள் நலம் பேணினளால்*

    மின்னையும் வஞ்சியையும்*  வென்று இலங்கும் இடையாள் நடந்து* 
    புன்னையும் அன்னமும் சூழ்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


    முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
    சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*

    பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
    மற்று எல்லாம் கைதொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    


    காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்* 
    பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*

    தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
    வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!


    தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
    போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*

    காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
    மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)


    பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை*  பங்கயக் கண்ணனை,* 
    பயில இனிய*  நம் பாற்கடல் சேர்ந்த பரமனை,* 

    பயிலும் திரு உடையார்*  எவரேலும் அவர் கண்டீர்,* 
    பயிலும் பிறப்பிடை தோறு*  எம்மை ஆளும் பரமரே. (2)


    ஆளும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    தோளும் ஓர் நான்கு உடைத்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை*

    தாளும் தடக் கையும் கூப்பிப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    நாளும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடை நாதரே.


    நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும்*  நறும் துழாய்ப் 
    போதனை*  பொன் நெடும் சக்கரத்து*  எந்தை பிரான் தன்னை*

    பாதம் பணிய வல்லாரைப்*  பணியும் அவர் கண்டீர்,* 
    ஓதும் பிறப்பிடைதோறு*  எம்மை ஆளுடையார்களே.


    உடை ஆர்ந்த ஆடையன்*  கண்டிகையன் உடை நாணினன்* 
    புடை ஆர் பொன் நூலினன்*  பொன் முடியன் மற்றும் பல்கலன்,* 

    நடையா உடைத் திருநாரணன்*  தொண்டர் தொண்டர் கண்டீர்,* 
    இடை ஆர் பிறப்பிடைதோறு*  எமக்கு எம் பெருமக்களே.


    பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை,*  அமரர்கட்கு* 
    அருமை ஒழிய*  அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை,*

    பெருமை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    வருமையும் இம்மையும்*  நம்மை அளிக்கும் பிராக்களே.


    அளிக்கும் பரமனை கண்ணனை*  ஆழிப் பிரான் தன்னை,* 
    துளிக்கும் நறும் கண்ணித்*  தூமணி வண்ணன் எம்மான்தன்னை,* 

    ஒளிக் கொண்ட சோதியை*  உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்,* 
    சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச்*  சன்ம சன்மாந்தரம் காப்பரே.


    சன்ம சன்மாந்தரம் காத்து*  அடியார்களைக் கொண்டுபோய்,* 
    தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க்*  கொள்ளும் அப்பனை,* 

    தொன்மை பிதற்ற வல்லாரைப்*  பிதற்றும் அவர் கண்டீர்,* 
    நன்மை பெறுத்து எம்மை*  நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே.


    நம்பனை ஞாலம் படைத்தவனை*  திரு மார்பனை,* 
    உம்பர் உலகினில் யார்க்கும்*  உணர்வு அரியான் தன்னை,* 

    கும்பி நரகர்கள் ஏத்துவரேலும்*  அவர் கண்டீர்,* 
    எம் பல் பிறப்பிடைதோறு*  எம் தொழுகுலம் தாங்களே.


    குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
    நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 

    வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
    கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.


    அடி ஆர்ந்த வையம் உண்டு*  ஆல் இலை அன்னவசம் செய்யும,* 
    படி யாதும் இல் குழவிப்படி*  எந்தை பிரான் தனக்கு,* 

    அடியார் அடியார் தம்*  அடியார் அடியார் தமக்கு* 
    அடியார் அடியார் தம்*  அடியார் அடியோங்களே.


    அடி ஓங்கு நூற்றுவர் வீய*  அன்று ஐவர்க்கு அருள்செய்த- 
    நெடியோனைத்,*  தென் குருகூர்ச் சடகோபன்*  குற்றேவல்கள்,* 

    அடி ஆர்ந்த ஆயிரத்துள்*  இவை பத்து அவன் தொண்டர்மேல் 
    முடிவு,*  ஆரக் கற்கிற்கில்*  சன்மம் செய்யாமை முடியுமே. (2)