பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    ஆனிரை மேய்க்க நீ போதி*  அருமருந்து ஆவது அறியாய்* 
    கானகம் எல்லாம் திரிந்து*  உன் கரிய திருமேனி வாட* 

    பானையிற் பாலைப் பருகிப்*  பற்றாதார் எல்லாம் சிரிப்ப* 
    தேனில் இனிய பிரானே* செண்பகப் பூச் சூட்ட வாராய்* (2) 


    கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
    உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 

    திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
    மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 


    மச்சொடு மாளிகை ஏறி*  மாதர்கள்தம் இடம் புக்கு* 
    கச்சொடு பட்டைக் கிழித்து*  காம்பு துகில் அவை கீறி* 

    நிச்சலும் தீமைகள் செய்வாய்!*  நீள் திருவேங்கடத்து எந்தாய்!* 
    பச்சைத் தமனகத்தோடு*  பாதிரிப் பூச் சூட்ட வாராய்.


    தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத்*  தீமை செய்யாதே* 
    மருவும் தமனகமும் சீர்*  மாலை மணம் கமழ்கின்ற*

    புருவம் கருங்குழல் நெற்றி*  பொலிந்த முகிற்-கன்று போலே* 
    உருவம் அழகிய நம்பீ!* உகந்து இவை சூட்ட நீ வாராய்.


    புள்ளினை வாய் பிளந்திட்டாய்!*  பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்!* 
    கள்ள அரக்கியை மூக்கொடு*  காவலனைத் தலை கொண்டாய்!* 

    அள்ளி நீ வெண்ணெய் விழுங்க*  அஞ்சாது அடியேன் அடித்தேன்* 
    தெள்ளிய நீரில் எழுந்த*  செங்கழுநீர் சூட்ட வாராய்.


    எருதுகளோடு பொருதி*  ஏதும் உலோபாய் காண் நம்பீ!* 
    கருதிய தீமைகள் செய்து*  கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!* 

    தெருவின்கண் தீமைகள் செய்து*  சிக்கென மல்லர்களோடு* 
    பொருது வருகின்ற பொன்னே*  புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்.


    குடங்கள் எடுத்து ஏற விட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே!* 
    மடம் கொள் மதிமுகத்தாரை*  மால்செய வல்ல என் மைந்தா!* 

    இடந்திட்டு இரணியன் நெஞ்சை*  இரு பிளவு ஆக முன் கீண்டாய்!* 
    குடந்தைக் கிடந்த எம் கோவே!*  குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்.


    சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
    சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 

    ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
    ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.


    அண்டத்து அமரர்கள் சூழ*  அத்தாணியுள் அங்கு இருந்தாய்!* 
    தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்!*  தூமலராள் மணவாளா!*

    உண்டிட்டு உலகினை ஏழும்*  ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்!* 
    கண்டு நான் உன்னை உகக்கக்*  கருமுகைப் பூச் சூட்ட வாராய்.


    செண்பக மல்லிகையோடு* செங்கழுநீர் இருவாட்சி* 
    எண் பகர் பூவும் கொணர்ந்தேன்*  இன்று இவை சூட்ட வா என்று* 

    மண் பகர் கொண்டானை*  ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை* 
    பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பத்தே. (2)


    திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
    நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*

    குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
    உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   


    துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
    குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*

    வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
    இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
    போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*

    மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
    என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.


    'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
    'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 

    தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
    ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
    காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 

    பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
    ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          


    தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
    வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*

    மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
    என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
    'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 

    களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
    இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
    புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 

    குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
    இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)


    பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
    அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 

    மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
    என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


    அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
    என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 

    மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
    பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        


    கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*

    ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
    நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.


    நாரணன் முழு ஏழ் உலகுக்கும்*  நாதன் வேத மயன்,* 
    காரணம் கிரிசை கருமம் இவை*  முதல்வன் எந்தை,*

    சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்*  தொழுது ஏத்த நின்று,* 
    வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்*  என் மாதவனே.   


    மாதவன் என்றதே கொண்டு*  என்னை இனி இப்பால் பட்டது,* 
    யாது அவங்களும் சேர்கொடேன் என்று*  என்னுள் புகுந்து இருந்து,* 

    தீது அவம் கெடுக்கும் அமுதம்*  செந்தாமரைக் கண் குன்றம்,* 
    கோது அவம் இல் என் கன்னல் கட்டி*  எம்மான் என் கோவிந்தனே.


    கோவிந்தன் குடக் கூத்தன்*  கோவலன் என்று என்றே குனித்துத்* 
    தேவும் தன்னையும்*  பாடி ஆடத் திருத்தி*  என்னைக் கொண்டு என்

    பாவம் தன்னையும்*  பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மேவும் தன்மையம் ஆக்கினான்*  வல்லன் எம்பிரான் விட்டுவே.


    விட்டு இலங்கு செஞ்சோதித்*  தாமரை பாதம் கைகள் கண்கள,* 
    விட்டு இலங்கு கருஞ்சுடர்*  மலையே திரு உடம்பு,*

    விட்டு இலங்கு மதியம் சீர்*  சங்கு சக்கரம் பரிதி,* 
    விட்டு இலங்கு முடி அம்மான்*  மதுசூதனன் தனக்கே.


    மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று*  எத்தாலும் கருமம் இன்றி,* 
    துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட*  நின்று ஊழி ஊழிதொறும்,*

    எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும்*  எனக்கே அருள்கள் செய்ய,* 
    விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான்*  திரிவிக்கிரமனையே.  


    திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண்*  எம்மான் என் செங்கனி வாய்* 
    உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு*  நிறத்தனன் என்று என்று,*  உள்ளி

    பரவிப் பணிந்து*  பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே,* 
    மருவித் தொழும் மனமே தந்தாய்*  வல்லைகாண் என் வாமனனே


    வாமனன் என் மரகத வண்ணன்*  தாமரைக் கண்ணினன்- 
    காமனைப் பயந்தாய்,*  என்று என்று உன் கழல்*  பாடியே பணிந்து,*

    தூ மனத்தனனாய்ப்*  பிறவித் துழதி நீங்க,*  என்னைத் 
    தீ மனம் கெடுத்தாய்*  உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.    


    சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்*  என்று என்று இராப்பகல் வாய் 
    வெரீஇ,*  அலமந்து கண்கள் நீர் மல்கி*  வெவ்வுயிர்த்து உயிர்த்து,*

    மரீஇய தீவினை மாள இன்பம் வளர*  வைகல் வைகல் 
    இரீஇ*  உன்னை என்னுள் வைத்தனை*  என் இருடீகேசனே. 


    இருடீகேசன் எம் பிரான்*  இலங்கை அரக்கர் குலம்,* 
    முருடு தீர்த்த பிரான் எம்மான்*  அமரர் பெம்மான் என்று என்று,*

    தெருடியாகில் நெஞ்சே வணங்கு*  திண்ணம் அறி அறிந்து,* 
    மருடியேலும் விடேல் கண்டாய்*  நம்பி பற்பநாபனையே.   


    பற்பநாபன் உயர்வு அற உயரும்*  பெரும் திறலோன்,* 
    எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு*  எனக்கே தன்னைத் தந்த

    கற்பகம்,*  என் அமுதம் கார் முகில் போலும்*  வேங்கட நல் 
    வெற்பன்,*  விசும்போர் பிரான்*  எந்தை தாமோதரனே.     


    தாமோதரனை தனி முதல்வனை*  ஞாலம் உண்டவனை,* 
    ஆமோ தரம் அறிய*  ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்,*

    தாமோதரன் உரு ஆகிய*  சிவற்கும் திசைமுகற்கும்,* 
    ஆமோ தரம் அறிய*  எம்மானை என் ஆழி வண்ணனையே.       


    வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
    கண்ணனை நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
    பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே.