பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
    ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*

    நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
    தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)


    காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்*  கண்டே போனேன்,* 
    மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்*  மற்று வந்தாரும் இல்லை,*

    மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்*  வெண்ணெயேஅன்று, இருந்த*
    பாலும் பதின்குடம் கண்டிலேன்*  பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!


    தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!*  உறி மேலைத் தடாநிறைந்த,*
    வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை*   வாரி விழுங்கி யிட்டு,*

    கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்*  கைஎல்லாம் நெய்,*  வயிறு-
    பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்*  பேதையேன் என்செய்கேனோ!


    மைந்நம்பு வேல்கண்நல்லாள்*  முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
    தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது*  அவன் இவை செய்தறியான்*

    பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்*  பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,* 
    இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை*  என்செய்கேன் என்செய்கேனோ!


    தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்*  தோழிமார் ஆரும்இல்லை,* 
    சந்த மலர்க்குழலாள்*  தனியே விளையாடும்இடம் குறுகி,*

    பந்து பறித்து துகில்பற்றிக் கீறி*  படிறன் படிறு செய்யும்,* 
    நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்*  நந்தன் பெற்ற மதலை,* 
    அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே*   அல்லில்தான் வந்த பின்னை,*

    கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி*  கமலச் செவ்வாய் வெளுப்ப,* 
    என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று*  ஆயர் விழவுஎடுப்ப,* 
    பாசனம் நல்லன பண்டிகளால்*  புகப் பெய்த அதனை எல்லாம்,*

    போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு*  உன்மகன் இன்று நங்காய்,* 
    மாயன் அதனை எல்லாம் முற்ற*  வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்! 


    தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்*  ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,* 
    ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்*  நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*

    சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று*  இரப்பன் உரப்பகில்லேன்* 
    பேய்ச்சி முலைஉண்ட பின்னை*  இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே! 


    ஈடும் வலியும் உடைய*  இந் நம்பி பிறந்த எழு திங்களில்,* 
    ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி*  யமுனை நீராடப் போனேன்,*

    சேடன் திருமறு மார்வன்*  கிடந்து  திருவடியால்,*  மலை போல்-
    ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை*  உரப்புவது அஞ்சுவனே!


    அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!*  ஆயிரம் நாழி நெய்யை,*
    பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று*  பாகம்தான் வையார்களே,*

    கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்*  என்கை வலத்துஆதும் இல்லை,* 
    நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!*  என்செய்கேன் என்செய்கேனோ!


    அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!*  ஆயர் மடமக்களை,*
    பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்*  பின்னே சென்றுஒளித்திருந்து,*

    அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*  அரவுஏர்இடையார் இரப்ப,* 
    மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற*  மரம் ஏறி இருந்தாய் போலும் 


    அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு*  ஆண்மையும் சேவகமும்,* 
    உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க*  உரைத்திலன் தான்இன்று போய்,*

    பச்சிலைப் பூங்கடம்பு ஏறி*  விசைகொண்டு  பாய்ந்து புக்கு*  ஆயிரவாய்-
    நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    தம்பரம் அல்லன ஆண்மைகளைத்*  தனியேநின்று தாம் செய்வரோ?,
    எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்*  இனி யான்என் செய்கேன்?,*

    அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்*  அங்குஅனல் செங்கண்உடை,*
    வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


    அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
    மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*

    கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
    இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   


    செஞ்சொல் கவிகாள்! உயிர்காத்துஆட் செய்ம்மின்*  திருமாலிருஞ்சோலை* 
    வஞ்சக் கள்வன் மாமாயன்*  மாயக் கவியாய் வந்து*  என்-

    நெஞ்சும் உயிரும் உள்கலந்து*  நின்றார் அறியா வண்ணம்*  என்- 
    நெஞ்சும் உயிரும் அவைஉண்டு*  தானே ஆகி நிறைந்தானே.   (2) 


    தானே ஆகி நிறைந்து*  எல்லாஉலகும் உயிரும் தானேஆய்* 
    தானே யான்என்பான்ஆகி*  தன்னைத் தானே துதித்து*  எனக்குத்-

    தேனே பாலே கன்னலே அமுதே*  திருமாலிருஞ்சோலைக்* 
    கோனே ஆகி நின்றொழிந்தான்*  என்னை முற்றும் உயிர்உண்டே.


    என்னை முற்றும் உயிர்உண்டு*  என் மாயஆக்கை இதனுள்புக்கு* 
    என்னை முற்றும் தானேஆய்*  நின்ற மாய அம்மான் சேர்*

    தென்நன் திருமாலிருஞ்சோலைத்*  திசைகை கூப்பிச் சேர்ந்தயான்* 
    இன்னும் போவேனே கொலோ!*  என்கொல் அம்மான் திருஅருளே?


    என்கொல் அம்மான் திருஅருள்கள்?*  உலகும் உயிரும் தானேயாய்*
    நன்கு என் உடலம் கைவிடான்*  ஞாலத்தூடே நடந்து உழக்கி*

    தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற*  திருமாலிருஞ்சோலை* 
    நங்கள் குன்றம் கைவிடான்*  நண்ணா அசுரர் நலியவே.


    நண்ணா அசுரர் நலிவுஎய்த*  நல்ல அமரர் பொலிவுஎய்த* 
    எண்ணாதனகள் எண்ணும்*  நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப*

    பண்ணார் பாடலின் கவிகள்*  யானாய்த் தன்னைத் தான்பாடி* 
    தென்னா என்னும் என்அம்மான்*  திருமாலிருஞ்சோலையானே.


    திருமாலிருஞ்சோலை யானேயாகி*  செழு மூவுலகும்*  தன்- 
    ஒருமா வயிற்றின்உள்ளே வைத்து*  ஊழி ஊழி தலையளிக்கும்*

    திருமால்என்னை ஆளும்மால்*  சிவனும் பிரமனும்காணாது* 
    அருமால் எய்தி அடிபரவ*  அருளை ஈந்த அம்மானே. 


    அருளை ஈ என்அம்மானே! என்னும்*  முக்கண் அம்மானும்* 
    தெருள்கொள் பிரமன்அம்மானும்*  தேவர் கோனும் தேவரும்*

    இருள்கள் கடியும் முனிவரும்*  ஏத்தும் அம்மான் திருமலை* 
    மருள்கள் கடியும் மணிமலை*  திருமாலிருஞ்சோலை மலையே.   


    திருமாலிருஞ்சோலை மலையே*  திருப்பாற் கடலே என்தலையே* 
    திருமால்வைகுந்தமே*  தண் திருவேங்கடமே எனதுஉடலே*

    அருமாமாயத்து எனதுஉயிரே*  மனமே வாக்கே கருமமே* 
    ஒருமா நொடியும் பிரியான்*  என் ஊழி முதல்வன் ஒருவனே.  (2)


    ஊழி முதல்வன் ஒருவனேஎன்னும்*  ஒருவன் உலகுஎல்லாம்* 
    ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து*  காத்து கெடுத்துஉழலும்*

    ஆழி வண்ணன் என்அம்மான்*  அம்தண் திருமாலிருஞ்சோலை* 
    வாழி மனமே! கைவிடேல்*  உடலும் உயிரும் மங்கஒட்டே. 


    மங்க ஒட்டு உன் மாமாயை*  திருமாலிருஞ்சோலைமேய* 
    நங்கள் கோனே! யானேநீஆகி*  என்னை அளித்தானே*

    பொங்குஐம் புலனும் பொறிஐந்தும்*  கருமேந்திரியம் ஐம்பூதம்* 
    இங்கு இவ்உயிர்ஏய் பிரகிருதி*  மான்ஆங்காரம் மனங்களே. 


    மான்ஆங்காரம் மனம்கெட*  ஐவர் வன்கையர் மங்க* 
    தான்ஆங்கார மாய்ப்புக்கு*  தானே தானே ஆனானைத்*

    தேனாங் காரப் பொழில்குருகூர்ச்*  சடகோபன் சொல்ஆயிரத்துள்* 
    மான்ஆங்காரத்துஇவை பத்தும்*  திருமாலிருஞ் சோலைமலைக்கே.  (2)