பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தொண்டீர்! உய்யும் வகைகண்டேன்*  துளங்கா அரக்கர் துளங்க,*  முன்- 
    திண்தோள் நிமிர சிலைவளைய*  சிறிதே முனிந்த திருமார்வன்,*

    வண்டுஆர் கூந்தல் மலர்மங்கை*  வடிக்கண் மடந்தை மாநோக்கம்- 
    கண்டான்,*  கண்டு கொண்டுஉகந்த*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   (2)


    பொருந்தா அரக்கர் வெம்சமத்துப்*  பொன்ற அன்று புள்ஊர்ந்து* 
    பெருந்தோள் மாலி தலைபுரள*  பேர்ந்த அரக்கர் தென்இலங்கை*

    இருந்தார் தம்மைஉடன் கொண்டு*  அங்கு எழில்ஆர் பிலத்துப்புக்கு ஒளிப்ப* 
    கருந்தாள் சிலைகைக் கொண்டான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    வல்லி இடையாள் பொருட்டாக*  மதிள் நீர் இலங்கையார் கோவை* 
    அல்லல் செய்து வெம்சமத்துள்*  ஆற்றல் மிகுத்த ஆற்றலான்*

    வல்ஆள்அரக்கர் குலப்பாவை வாட*  முனி தன் வேள்வியைக்* 
    கல்விச் சிலையால் காத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.  (2)


    மல்லை முந்நீர் அதர்பட*  வரிவெம் சிலைகால் வளைவித்து* 
    கொல்லை விலங்கு பணிசெய்ய*  கொடியோன் இலங்கை புகல்உற்று*

    தொல்லை மரங்கள் புகப்பெய்து*  துவலை நிமிர்ந்து வான்அணவ* 
    கல்லால் கடலை அடைத்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    ஆமைஆகி அரிஆகி*  அன்னம்ஆகி,*  அந்தணர்தம்- 
    ஓமம்ஆகி ஊழிஆகி*  உவரி சூழ்ந்த நெடும்புணரி*

    சேமமதிள் சூழ்இலங்கைக்கோன்*  சிரமும் கரமும் துணித்து,*  முன்- 
    காமன் பயந்தான் கருதும்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    வருந்தாது இரு நீ மடநெஞ்சே*  நம்மேல் வினைகள் வாரா,*  முன்- 
    திருந்தா அரக்கர் தென்இலங்கை*  செந்தீ உண்ண சிவந்து ஒருநாள்*

    பெருந்தோள் வாணற்கு அருள்புரிந்து*  பின்னை மணாளன்ஆகி*  முன்- 
    கருந்தாள் களிறுஒன்று ஒசித்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    இலைஆர் மலர்ப்பூம் பொய்கைவாய்*  முதலை-தன்னால் அடர்ப்புண்டு* 
    கொலைஆர் வேழம் நடுக்குஉற்றுக் குலைய*  அதனுக்கு அருள்புரிந்தான்*

    அலை நீர்இலங்கை தசக்கிரீவற்கு*  இளையோற்கு அரசை அருளி*  முன்- 
    கலைமாச் சிலையால் எய்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.   


    மால்ஆய் மனமே! அருந்துயரில்*  வருந்தாது இரு நீ, வலிமிக்க* 
    கால்ஆர் மருதும் காய்சினத்த கழுதும்*  கதமா கழுதையும்* 

    மால்ஆர் விடையும் மதகரியும்*  மல்லர் உயிரும் மடிவித்து* 
    காலால் சகடம் பாய்ந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே. 


    குன்றால் மாரி பழுதுஆக்கி*  கொடிஏர் இடையாள் பொருட்டாக* 
    வன்தாள் விடைஏழ் அன்றுஅடர்த்த*  வானோர் பெருமான் மாமாயன்*

    சென்றான் தூது பஞ்சவர்க்குஆய்*  திரிகால் சகடம் சினம்அழித்து* 
    கன்றால் விளங்காய் எறிந்தான்ஊர்*  கண்ணபுரம் நாம் தொழுதுமே.


    கருமா முகில்தோய் நெடுமாடக்* கண்ணபுரத்து எம் அடிகளை* 
    திருமா மகளால் அருள்மாரி*  செழு நீர்ஆலி வளநாடன்*

    மருவுஆர் புயல்கைக் கலிகன்றி*  மங்கை வேந்தன் ஒலிவல்லார்* 
    இருமா நிலத்துக்கு அரசுஆகி*  இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. 


    எல்லியும் காலையும்*  தன்னை நினைந்துஎழ* 
    நல்ல அருள்கள்*  நமக்கேதந்து அருள்செய்வான்*

    அல்லிஅம் தண்ணம்துழாய்*  முடிஅப்பன்ஊர்* 
    செல்வர்கள் வாழும்*  திருக்கடித் தானமே   (2)


    திருக்கடித் தானமும்*  என்னுடையச் சிந்தையும்* 
    ஒருக்கடுத்துஉள்ளே*  உறையும்பிரான் கண்டீர்*

    செருக்கடுத்துஅன்று*  திகைத்த அரக்கரை* 
    உருக்கெடவாளி*  பொழிந்த ஒருவனே. 


    ஒருவர் இருவர் ஓர்*  மூவர்என நின்று* 
    உருவுகரந்து*  உள்ளும்தோறும் தித்திப்பான்*

    திருஅமர் மார்வன்*  திருக்கடித்தானத்தை* 
    மருவிஉறைகின்ற*  மாயப்பிரானே.    


    மாயப்பிரான்*  எனவல்வினை மாய்ந்துஅற* 
    நேசத்தினால் நெஞ்சம்*  நாடு குடிகொண்டான்*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்தை* 
    வாசப்பொழில்மன்னு*  கோயில்கொண்டானே.       


    கோயில் கொண்டான்தன்*  திருக்கடித் தானத்தை* 
    கோயில்கொண்டான்*  அதனோடும் என்நெஞ்சகம்*;

    கோயில்கொள்*  தெய்வம்எல்லாம் தொழ*  வைகுந்தம் 
    கோயில்கொண்ட*  குடக்கூத்த அம்மானே. 


    கூத்தஅம்மான்*  கொடியேன்இடர் முற்றவும்* 
    மாய்த்தஅம்மான்*  மதுசூத அம்மான்உறை*

    பூத்தபொழில்தண்*  திருக்கடித் தானத்தை* 
    ஏத்தநில்லா*  குறிக்கொள்மின் இடரே.   


    கொண்டமின் இடர்கெட*  உள்ளத்து கோவிந்தன்* 
    மண்விண் முழுதும்*  அளந்தஒண்தாமரை*

    மண்ணவர் தாம்தொழ*  வானவர் தாம்வந்து* 
    நண்ணு திருக்கடித்தான நகரே


    தான நகர்கள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    வான்இந் நிலம்கடல்*  முற்றும் எம்மாயற்கே*

    ஆனவிடத்தும் என் நெஞ்சும்*  திருக்கடித் 
    தான நகரும்*  தனதாயப் பதியே.


    தாயப்பதிகள்*  தலைச்சிறந்து எங்கெங்கும்* 
    மாயத்தினால் மன்னி*  வீற்றிருந்தான்உறை*

    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்துள்* 
    ஆயர்க்குஅதிபதி*  அற்புதன்தானே. 


    அற்புதன் நாராயணன்*  அரி வாமனன்* 
    நிற்பது மேவி*  இருப்பது என்நெஞ்சகம்*

    நல்புகழ் வேதியர்*  நான்மறை நின்றுஅதிர்* 
    கற்பகச் சோலைத்*  திருக்கடித் தானமே.  (2)


    சோலைத் திருக்கடித்தானத்து*  உறைதிரு 
    மாலை*  மதிள்குருகூர்ச் சடகோபன் சொல்*

    பாலோடு அமுதுஅன்ன*  ஆயிரத்து இப்பத்தும்* 
    மேலை வைகுந்தத்து*  இருத்தும் வியந்தே.  (2)