பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    சிங்கம் அது ஆய் அவுணன்*  திறல் ஆகம் முன் கீண்டு உகந்த* 
    சங்கம் இடத்தானை*  தழல்ஆழி வலத்தானை*

    செங்கமலத் தயனையார்*  தென்ணழுந்தையில் மன்னிநின்ற* 
    அம் கமலக் கண்ணனை*  அடியேன் கண்டு கொண்டேனே*.(2)     


    கோவானார் மடியக்*  கொலையார் மழுக்கொண்டு அருளும்* 
    மூவா வானவனை*  முழுநீர் வண்ணனை*  அடியார்க்கு-

    ஆ! ஆ! என்று இரங்கித்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    தேவாதி தேவனை*  யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.


    உடையானை*  ஒலி நீர் உலகங்கள் படைத்தானை* 
    விடையான் ஓட அன்று*  விறல் ஆழி விசைத்தானை*

    அடையார் தென் இலங்கை அழித்தானை*  அணி அழுந்தூர்- 
    உடையானை*  அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.     


    குன்றால் மாரி தடுத்தவனை*  குல வேழம் அன்று- 
    பொன்றாமை*  அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*

    அன்று ஆவின்நறுநெய்*  அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்- 
    நின்றானை*  அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.


    கஞ்சனைக் காய்ந்தானை*  கண்ணமங்கையுள் நின்றானை* 
    வஞ்சனப் பேய் முலையூடு*  உயிர் வாய் மடுத்து உண்டானை* 

    செஞ்சொல் நான்மறையோர்*  தென் அழுந்தையில் மன்னி நின்ற* 
    அஞ்சனக் குன்றம் தன்னை*  அடியேன் கண்டுகொண்டேனே*.


    பெரியானை*  அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்* 
    உரி யானை உகந்தானவனுக்கும்*  உணர்வதனுக்கு

    அரியானை*  அழுந்தூர் மறையோர்கள்*  அடிபணியும் 
    கரியானை*  அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.      


    திருவாழ் மார்வன் தன்னை*  திசை மண்நீர் எரிமுதலா* 
    உருவாய் நின்றவனை*  ஒலிசேரும் மாருதத்தை*

    அருவாய் நின்றவனை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    கருவார் கற்பகத்தை*  கண்டுகொண்டு களித்தேனே*      


    நிலையாளாக*  என்னை யுகந்தானை*  நிலமகள்தன்-
    முலையாள் வித்தகனை*  முதுநான்மறை வீதிதொறும்*

    அலையாரும் கடல்போல் முழங்கும்*  தென்னழுந்தையில் மன்னி நின்ற*
    கலையார் சொற்பொருளைக்*  கண்டு கொண்டு களித்தேனே*.


    பேரானை*  குடந்தைப் பெருமானை*  இலங்கு ஒளிசேர்- 
    வாரார் வனமுலையாள்*  மலர்மங்கை நாயகனை,*

    ஆரா இன்னமுதை*  தென்னழுந்தையில் மன்னிநின்ற* 
    காரார் கருமுகிலை*  கண்டு கொண்டு களித்தேனே*. (2)   


    திறல் முருகனனையார்*  தென்னழுந்தையில் மன்னிநின்ற*
    அறமுதல் வனவனை*  அணியாலியர் கோன் மருவார்*

    கறைநெடு வேல்வலவன்*  கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
    முறைவழுவாமை வல்லார்*  முழுது ஆள்வர் வானுலகே*.


    பாமரு மூவுலகும் படைத்த*  பற்ப நாபாவோ,* 
    பாமரு மூவுலகும் அளந்த*  பற்ப பாதாவோ,*

    தாமரைக் கண்ணாவோ!*  தனியேன் தனிஆளாவோ,* 
    தாமரைக் கையாவோ!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே?  (2)


    என்றுகொல் சேர்வது அந்தோ*  அரன் நான்முகன் ஏத்தும்,*  செய்ய 
    நின் திருப்பாதத்தை*  யான்நிலம் நீர்எரி கால்,*  விண்உயிர்

    என்றுஇவை தாம்முதலா*  முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
    குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து*  அவை காத்த எம்கூத்தாவோ!


    காத்த எம்கூத்தாவோ!*  மலைஏந்திக் கல்மாரி தன்னை,* 
    பூத்தண் துழாய்முடியாய்!*  புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*

    வாய்த்த என் நான்முகனே!*  வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,* 
    ஏத்துஅரும் கீர்த்தியினாய்!*  உன்னை எங்குத் தலைப்பெய்வனே?


    எங்குத் தலைப்பெய்வன் நான்?*  எழில் மூவுலகும் நீயே,* 
    அங்கு உயர் முக்கண்பிரான்*  பிரம பெருமான் அவன்நீ,*

    வெங்கதிர் வச்சிரக் கை*  இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
    கொங்குஅலர் தண்அம் துழாய்முடி*  என்னுடைக் கோவலனே?   


    என்னுடைக் கோவலனே!*  என் பொல்லாக் கருமாணிக்கமே,* 
    உன்னுடை உந்தி மலர்*  உலகம் அவைமூன்றும் பரந்து,*

    உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்*  உன்னைக் கண்டுகொண்டிட்டு,* 
    என்னுடை ஆர்உயிரார்*  எங்ஙனேகொல் வந்து எய்துவரே? 


    வந்துஎய்து மாறுஅறியேன்*  மல்கு நீலச் சுடர்தழைப்ப,* 
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து*  ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*

    அந்தரமேல் செம்பட்டோடு*  அடி உந்திகை மார்புகண்வாய்,* 
    செஞ்சுடர்ச் சோதி விடஉறை*  என்திரு மார்பனையே. 


    என்திரு மார்பன் தன்னை*  என் மலைமகள் கூறன்தன்னை,* 
    என்றும் என்நாமகளை*  அகம்பால்கொண்ட நான்முகனை,*

    நின்ற சசிபதியை*  நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,* 
    வென்று புலன்துரந்த*  விசும்புஆளியை காணேனோ!


    ஆளியைக் காண்பரியாய்*  அரிகாண் நரியாய்,*  அரக்கர் 
    ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து*  பிலம்புக்குஒளிப்ப,*

    மீளியம் புள்ளைக்கடாய்*  விறல் மாலியைக் கொன்று,*  பின்னும் 
    ஆள்உயர் குன்றங்கள் செய்து*  அடர்த்தானையும் காண்டும்கொலோ?


    காண்டும்கொலோ நெஞ்சமே!*  கடிய வினையே முயலும்,* 
    ஆண்திறல் மீளிமொய்ம்பின்*  அரக்கன் குலத்தைத் தடிந்து,*

    மீண்டும் அவன் தம்பிக்கே*  விரி நீர்இலங்கைஅருளி,* 
    ஆண்டு தன் சோதிபுக்க*  அமரர் அரியேற்றினையே?  


    ஏற்றுஅரும் வைகுந்தத்தை*  அருளும் நமக்கு,*  ஆயர்குலத்து 
    ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு*  மாயங்களே இயற்றி,*

    கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று*  ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,* 
    ஆற்றல் மிக்கான் பெரிய*  பரஞ்சோதி புக்க அரியே


    புக்க அரிஉருஆய்*  அவுணன்உடல் கீண்டுஉகந்த,* 
    சக்கரச் செல்வன்தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    மிக்க ஓர்ஆயிரத்துள்*  இவைபத்தும் வல்லார் அவரைத்,* 
    தொக்கு பல்லாண்டுஇசைத்து*  கவரி செய்வர் ஏழையரே  (2)