பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    கைம்மான மழ களிற்றை*  கடல் கிடந்த கருமணியை* 
    மைம்மான மரகதத்தை*  மறை உரைத்த திருமாலை* 

    எம்மானை எனக்கு என்றும் இனியானை*  பனி காத்த 
    அம்மானை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.


    பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால் 
    ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

    கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு* 
    ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
    தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 

    தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
    ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே.      


    வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
    தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 

    பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
    அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  


    நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
    ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*

    பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
    ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.        


    தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
    கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 

    வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
    அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  


    சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
    வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-

    கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
    அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        


    துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
    அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த

    எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
    அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே.  


    பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
    மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*

    மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
    அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   


    ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
    காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*

    நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
    தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        


    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்* 
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*

    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
    கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*


    கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்*  கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்* 
    கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்*  கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்* 

    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்*  கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
    கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*


    காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்* 
    காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்* 

    காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்*  காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?*
    காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,*  காண்கின்ற என் காரிகை செய்கின்றவே?* 


    செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்*  செய்வான் நின்றனகளும் யானே என்னும்* 
    செய்து முன் இறந்தவும் யானே என்னும்*  செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*

    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*  செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
    செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*


    திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்*  திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்* 
    திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்*  திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்*

    திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்*  திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?* 
    திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்*  திறம்பாது என் திருமகள் எய்தினவே?*


    இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்*  இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்* 
    இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்*  இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்*

    இன ஆயர் தலைவனும் யானே என்னும்*  இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?* 
    இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்*  இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே?*  


    உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்*  உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்* 
    உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்*  உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்* 

    உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்*  உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?* 
    உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?*  உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே?* 


    உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்*  உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்* 
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*  உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*

    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்*  உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?  உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.


    கொடிய வினை யாதும் இலனே என்னும்*  கொடிய வினை ஆவேனும் யானே என்னும்* 
    கொடிய வினை செய்வேனும் யானே என்னும்*  கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்*

    கொடியான் இலங்கை செற்றேனே என்னும்*  கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?* 
    கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கொடியேன் கொடி என் மகள் கோலங்களே?*   


    கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்*  கோலம் இல் நரகமும் யானே என்னும்* 
    கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்*  கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்* 

    கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்*  கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
    கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்  கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே!*


    கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்*  குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை* 
    வாய்ந்த வழுதி வள நாடன்*  மன்னு- குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து* 

    ஆய்ந்த தமிழ் மாலை*  ஆயிரத்துள்- இவையும் ஓர் பத்தும் வல்லார்*  உலகில்- 
    ஏந்து பெரும் செல்வத்தராய்த்*  திருமால்- அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே*. (2)