பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    காசும் கறைஉடைக் கூறைக்கும்*  அங்குஓர் கற்றைக்கும்- 
    ஆசையினால்*  அங்குஅவத்தப் பேர்இடும்*  ஆதர்காள்!*

    கேசவன் பேர்இட்டு*  நீங்கள் தேனித்துஇருமினோ* 
    நாயகன் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்  (2)


    அங்குஒருகூறை*  அரைக்கு உடுப்பதன் ஆசையால்* 
    மங்கிய மானிடசாதியின்*  பேர்இடும் ஆதர்காள்!*

    செங்கண்நெடுமால்!*  சிரீதரா! என்று அழைத்தக்கால்* 
    நங்கைகாள்! நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    உச்சியில் எண்ணெயும்*  சுட்டியும் வளையும் உகந்து* 
    எச்சம் பொலிந்தீர்காள்!*  என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*

    பிச்சைபுக்குஆகிலும்*  எம்பிரான் திருநாமமே- 
    நச்சுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.  


    மானிட சாதியில் தோன்றிற்று*  ஓர் மானிடசாதியை* 
    மானிட சாதியின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    வானுடை மாதவா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நானுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மலமுடை ஊத்தையில் தோன்றிற்று*  ஓர் மல ஊத்தையை* 
    மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்*  மறுமைக்குஇல்லை*

    குலமுடைக் கோவிந்தா!*  கோவிந்தா! என்று அழைத்தக்கால்* 
    நலமுடை நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள். 


    நாடும் நகரும் அறிய*  மானிடப் பேர்இட்டு* 
    கூடிஅழுங்கிக்*  குழியில் வீழ்ந்து வழுக்காதே*

    சாடிறப் பாய்ந்த தலைவா!*  தாமோதரா! என்று- 
    நாடுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு- 
    எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்*  ஏழை மனிசர்காள்!*

    கண்ணுக்குஇனிய*  கருமுகில் வண்ணன் நாமமே- 
    நண்ணுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்


    நம்பி பிம்பிஎன்று*  நாட்டு மானிடப் பேர்இட்டால்* 
    நம்பும் பிம்பும்எல்லாம்*  நாலுநாளில் அழுங்கிப்போம்*

    செம்பெருந்தாமரைக் கண்ணன்*  பேர்இட்டுஅழைத்தக்கால்* 
    நம்பிகாள் நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    ஊத்தைக்குழியில்*  அமுதம் பாய்வதுபோல்*  உங்கள்- 
    மூத்திரப்பிள்ளையை*  என் முகில்வண்ணன் பேர் இட்டு*

    கோத்துக் குழைத்துக்*  குணாலம்ஆடித் திரிமினோ* 
    நாத்தகு நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.


    சீர்அணி மால்*  திருநாமமே இடத்தேற்றிய* 
    வீர்அணி தொல்புகழ்*  விட்டுசித்தன் விரித்த*

    ஓரணியொண்தமிழ்*  ஒன்பதோடுஒன்றும் வல்லவர்* 
    பேர்அணி வைகுந்தத்து*  என்றும் பேணியிருப்பரே. (2)


    தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
    நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 

    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
    காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    


    மண் இடந்து ஏனம் ஆகி*  மாவலி வலி தொலைப்பான்* 
    விண்ணவர் வேண்டச் சென்று*  வேள்வியில் குறை இரந்தாய்!*

    துண் என மாற்றார்தம்மைத்*  தொலைத்தவர் நாங்கை மேய* 
    கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    உருத்து எழு வாலி மார்வில்*  ஒரு கணை உருவ ஓட்டி*    
    கருத்து உடைத் தம்பிக்கு*  இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*

    பருத்து எழு பலவும் மாவும்*  பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்* 
    கருத்தனே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.    


    முனைமுகத்து அரக்கன் மாள*  முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*  ஆங்கு 
    அனையவற்கு இளையவற்கே*  அரசு அளித்து அருளினானே*

    சுனைகளில் கயல்கள் பாயச்*  சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்* 
    கனை கழல் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே. 


    பட அரவு உச்சிதன்மேல்*  பாய்ந்து பல் நடங்கள்செய்து* 
    மடவரல் மங்கைதன்னை*  மார்வகத்து இருத்தினானே!*

    தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
    கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   


    மல்லரை அட்டு மாள*  கஞ்சனை மலைந்து கொன்று* 
    பல் அரசு அவிந்து வீழப்*  பாரதப் போர் முடித்தாய்*

    நல் அரண் காவின் நீழல்*  நறை கமழ் நாங்கை மேய* 
    கல் அரண் காவளம் தண்  பாடியாய்!* களைகண் நீயே.            


    மூத்தவற்கு அரசு வேண்டி*  முன்பு தூது எழுந்தருளி* 
    மாத்தமர் பாகன் வீழ*  மத கரி மருப்பு ஒசித்தாய்*

    பூத்தமர் சோலை ஓங்கி*  புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்* 
    காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 


    ஏவிளங் கன்னிக்கு ஆகி*  இமையவர் கோனைச் செற்று* 
    காவளம் கடிது இறுத்துக்*  கற்பகம் கொண்டு போந்தாய்*

    பூவளம் பொழில்கள் சூழ்ந்த*  புரந்தரன் செய்த நாங்கைக் 
    காவளம்பாடி மேய*  கண்ணனே!  களைகண் நீயே.   


    சந்தம் ஆய் சமயம் ஆகி*  சமய ஐம் பூதம் ஆகி* 
    அந்தம் ஆய் ஆதி ஆகி*  அரு மறை அவையும் ஆனாய்*

    மந்தம் ஆர் பொழில்கள்தோறும்*  மட மயில் ஆலும் நாங்கைக்* 
    கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.


    மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும்*  நாங்கைக் 
    காவளம் பாடிமேய*  கண்ணனைக் கலியன் சொன்ன* 

    பாவளம் பத்தும் வல்லார்*  பார்மிசை அரசர் ஆகிக்* 
    கோ இள மன்னர் தாழக்*  குடைநிழல் பொலிவர்தாமே.    


    தீர்ப்பாரை யாம் இனி*  எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,*
    ஓர்ப்பால் இவ் ஒள் நுதல்*  உற்ற நல் நோய் இது தேறினோம்,* 

    போர்ப்பாகு தான் செய்து*  அன்று ஐவரை வெல்வித்த,*  மாயப்போர்த் 
    தேர்ப்பாகனார்க்கு*  இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே?


    திசைக்கின்றதே இவள் நோய்*  இது மிக்க பெருந் தெய்வம்,* 
    இசைப்பு இன்றி*  நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*

    திசைப்பு இன்றியே*  சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,*  நீர் 
    இசைக்கிற்றிராகில்*  நன்றே இல் பெறும் இது காண்மினே.  


    இது காண்மின் அன்னைமீர்!*  இக் கட்டுவிச்சி சொல் கொண்டு,*  நீர் 
    எதுவானும் செய்து*  அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்,* 

    மது வார் துழாய்முடி*  மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்,* 
    அதுவே இவள் உற்ற நோய்க்கும்*  அரு மருந்து ஆகுமே.


    மருந்து ஆகும் என்று அங்கு ஓர்*  மாய வலவை சொல் கொண்டு,*  நீர் 
    கருஞ் சோறும் மற்றைச் செஞ்சோறும்*  களன் இழைத்து என் பயன்?* 

    ஒருங்காகவே உலகு ஏழும்*  விழுங்கி உமிழ்ந்திட்ட,* 
    பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில்*  இவளைப் பெறுதிரே. 


    இவளைப் பெறும்பரிசு*  இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ,* 
    குவளைத் தடங் கண்ணும்*  கோவைச் செவ்வாயும் பயந்தனள்,* 

    கவளக் கடாக் களிறு அட்ட பிரான்*  திருநாமத்தால்,* 
    தவளப் பொடிக்கொண்டு*  நீர்இட்டிடுமின் தணியுமே.     


    தணியும் பொழுது இல்லை*  நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்,* 
    பிணியும் ஒழிகின்றது இல்லை*  பெருகும் இது அல்லால்,* 

    மணியின் அணிநிற மாயன்*  தமர் அடி நீறுகொண்டு* 
    அணிய முயலின்*  மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே.


    அணங்குக்கு அரு மருந்து என்று*  அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்* 
    துணங்கை எறிந்து*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,*

    உணங்கல் கெடக்*  கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? 
    வணங்கீர்கள் மாயப் பிரான்*  தமர் வேதம் வல்லாரையே.


    வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 
    பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*

    ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,* 
    கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  


    கீழ்மையினால் அங்கு ஓர்*  கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,* 
    நாழ்மை பல சொல்லி*  நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்,*

    ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்*  இந் நோய்க்கும் ஈதே மருந்து,* 
    ஊழ்மையில் கண்ணபிரான்*  கழல் வாழ்த்துமின் உன்னித்தே.


    உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள்*  அவனை அல்லால்,* 
    நும் இச்சை சொல்லி*  நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்,* 

    மன்னப்படும் மறைவாணனை*  வண் துவராபதி- 
    மன்னனை,*  ஏத்துமின் ஏத்துதலும்*  தொழுது ஆடுமே.   


    தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு*  ஆட்செய்து நோய் தீர்ந்த* 
    வழுவாத தொல்புகழ்  வண் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    வழுவாத ஆயிரத்துள்*  இவை பத்து வெறிகளும்,* 
    தொழுது ஆடிப் பாடவல்லார்*  துக்க சீலம் இலர்களே.