பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வேலிக் கோல் வெட்டி*  விளையாடு வில் ஏற்றி* 
    தாலிக் கொழுந்தைத்*  தடங்கழுத்திற் பூண்டு*

    பீலித் தழையைப்*  பிணைத்துப் பிறகிட்டு* 
    காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா! (2)


    கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்* 
    எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்* 

    சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல் 
    அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா! 
    அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.


    கறுத்திட்டு எதிர்நின்ற*  கஞ்சனைக் கொன்றான்* 
    பொறுத்திட்டு எதிர்வந்த*  புள்ளின் வாய் கீண்டான்* 

    நெறித்த குழல்களை*  நீங்க முன் ஓடிச்* 
    சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா!


    ஒன்றே உரைப்பான்*  ஒரு சொல்லே சொல்லுவான்* 
    துன்று முடியான்*  துரியோதனன் பக்கல்*

    சென்று அங்குப் பாரதம்*  கையெறிந்தானுக்குக்* 
    கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா 
    கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    சீர் ஒன்று தூதாய்த்*  திரியோதனன் பக்கல்* 
    ஊர் ஒன்று வேண்டிப்* பெறாத உரோடத்தால்* 

    பார் ஒன்றிப் பாரதம்*  கைசெய்து பார்த்தற்குத்* 
    தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா 
    தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா 


    ஆலத்து இலையான்*  அரவின் அணை மேலான்* 
    நீலக் கடலுள்*  நெடுங்காலம் கண்வளர்ந்தான்*

    பாலப் பிராயத்தே*  பார்த்தற்கு அருள்செய்த*  
    கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா! 
    குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    பொற்றிகழ்*  சித்திரகூடப் பொருப்பினில்* 
    உற்ற வடிவில்*  ஒரு கண்ணும் கொண்ட* அக் 

    கற்றைக் குழலன்*  கடியன் விரைந்து உன்னை* 
    மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா! 
    மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!


    மின்னிடைச் சீதை பொருட்டா*  இலங்கையர்* 
    மன்னன் மணிமுடி*  பத்தும் உடன் வீழத்* 

    தன் நிகர் ஒன்று இல்லாச்*  சிலை கால் வளைத்து இட்ட* 
    மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.


    தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து* 
    மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு* 

    என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற* 
    மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.


    அக்காக்காய்! நம்பிக்குக்*  கோல் கொண்டு வா என்று* 
    மிக்காள் உரைத்த சொல்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    ஒக்க உரைத்த*  தமிழ் பத்தும் வல்லவர்* 
    மக்களைப் பெற்று*  மகிழ்வர் இவ் வையத்தே.


    நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு*
    வானவரை பெண் ஆகி*  அமுது ஊட்டும் பெருமானார்*

    மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரை,* 
    எண்ணாதே இருப்பாரை*  இறைப் பொழுதும் எண்ணோமே. (2)


    பார் வண்ண மட மங்கை*  பனி நல் மா மலர்க் கிழத்தி* 
    நீர் வண்ணன் மார்வத்தில்*  இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்*

    கார்வண்ண முது முந்நீர்க்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்*  அவர் எம்மை ஆள்வாரே.   


    ஏனத்தின்உருவுஆகி*  நிலமங்கை எழில் கொண்டான்* 
    வானத்தில்அவர் முறையால்*  மகிழ்ந்துஏத்தி வலம்கொள்ள* 

    கானத்தின் கடல்மல்லைத்*  தலசயனத்து உறைகின்ற* 
    ஞானத்தின் ஒளிஉருவை*  நினைவார் என் நாயகரே. (2)  


    விண்டாரை வென்று ஆவி*  விலங்கு உண்ண மெல் இயலார்* 
    கொண்டாடும் மல் அகலம்*  அழல் ஏற வெம் சமத்துக்*

    கண்டாரை கடல்மல்லைத்*  தலசயனத்து உறைவாரைக், 
    கொண்டாடும் நெஞ்சு உடையார்*  அவர் எங்கள் குலதெய்வமே.


    பிச்சச் சிறு பீலிச்*  சமண் குண்டர் முதலாயோர்* 
    விச்சைக்கு இறை என்னும்*  அவ் இறையைப் பணியாதே*

    கச்சிக் கிடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நச்சித் தொழுவாரை*  நச்சு என் தன் நல் நெஞ்சே!  


    புலன் கொள் நிதிக் குவையோடு*  புழைக் கை மா களிற்று இனமும்* 
    நலம் கொள் நவமணிக் குவையும்*  சுமந்து எங்கும் நான்று ஒசிந்து,* 

    கலங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வலங்கொள் மனத்தார்அவரை*  வலங்கொள் என் மட நெஞ்சே!


    பஞ்சிச் சிறு கூழை*  உரு ஆகி மருவாத* 
    வஞ்சப் பெண் நஞ்சு உண்ட*  அண்ணல் முன் நண்ணா*

    கஞ்சைக் கடந்தவன் ஊர்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    நெஞ்சில் தொழுவாரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே!


    செழு நீர் மலர்க் கமலம்*  திரை உந்து வன் பகட்டால்* 
    உழும் நீர் வயல் உழவர் உழ*  பின் முன் பிழைத்து எழுந்த* 

    கழு நீர் கடி கமழும்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    தொழும் நீர் மனத்தவரைத்*  தொழுவாய் என் தூய் நெஞ்சே . 


    பிணங்கள் இடு காடு அதனுள்*  நடம் ஆடு பிஞ்ஞகனோடு* 
    இணங்கு திருச் சக்கரத்து*  எம் பெருமானார்க்கு இடம்*

    விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக்*  கடல்மல்லைத் தலசயனம்* 
    வணங்கும் மனத்தார் அவரை*  வணங்கு என்தன் மட நெஞ்சே!


    கடி கமழும் நெடு மறுகின்*  கடல்மல்லைத் தலசயனத்து* 
    அடிகள் அடியே நினையும்*  அடியவர்கள் தம் அடியான்* 

    வடி கொள் நெடு வேல் வலவன்*  கலிகன்றி ஒலி வல்லார்* 
    முடி கொள் நெடு மன்னவர்தம்*  முதல்வர் ஆவாரே. (2)       


    வைகுந்தா மணிவண்ணனே*  என் பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி,* 
    வைகும் வைகல் தோறும்*  அமுது ஆய வான் ஏறே,

    செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து*  அசுரர்க்குத் தீமைகள்- 
    செய் குந்தா*  உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே..     


    சிக்கெனச் சிறிது ஓர் இடமும்*  புறப்படாத் தன்னுள்ளே,*  உலகுகள் 
    ஒக்கவே விழுங்கிப்*  புகுந்தான் புகுந்ததற்பின்,*

    மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய்*  துளக்கு அற்று அமுதம் ஆய்,*  எங்கும் 
    பக்கம் நோக்கு அறியான்*  என் பைந்தாமரைக் கண்ணனே.         


    தாமரைக் கண்ணனை*  விண்ணோர் பரவும் தலைமகனை,*  துழாய் விரைப் 
    பூ மருவு கண்ணி*  எம் பிரானை பொன்மலையை,* 

    நாம் மருவி நன்கு ஏத்தி*  உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,*  நாவு அலர் 
    பா மருவி நிற்கத் தந்த*  பான்மையே வள்ளலே.


    வள்ளலே மதுசூதனா*  என் மரகத மலையே,*  உனை நினைந்து, 
    எள்கல் தந்த எந்தாய்*  உன்னை எங்ஙனம் விடுகேன்,?* 

    வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி*  களித்து உகந்து உகந்து* 
    உள்ள நோய்கள் எல்லாம் துரந்து*  உய்ந்து போந்திருந்தே.


    உய்ந்து போந்து என் உலப்பு இலாத*  வெம் தீவினைகளை நாசம் செய்து*  உனது 
    அந்தம் இல் அடிமை*  அடைந்தேன் விடுவேனோ,?*

    ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப்*  பாற்கடல் யோக நித்திரை,* 
    சிந்தை செய்த எந்தாய்*  உன்னைச் சிந்தை செய்து செய்தே. 


    உன்னைச் சிந்தை செய்து செய்து,*  உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி*  என் 
    முன்னைத் தீவினைகள்*  முழு வேர் அரிந்தனன் யான்,*

    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த*  இரணியன் அகல் மார்வம் கீண்ட*  என் 
    முன்னைக் கோளரியே*  முடியாதது என் எனக்கே. 


    முடியாதது என் எனக்கேல் இனி?*  முழு ஏழ் உலகும் உண்டான்*  உகந்து வந்து 
    அடியேன் உட்புகுந்தான்*  அகல்வானும் அல்லன் இனி,*

    செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து*  எமர் கீழ் மேல் எழு பிறப்பும்,* 
    விடியா வெம் நரகத்து என்றும்*  சேர்தல் மாறினரே.


    மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து*  அடியை அடைந்து உள்ளம் தேறி* 
    ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்*  யான் மூழ்கினன்,*

    பாறிப் பாறி அசுரர் தம்*  பல் குழாங்கள் நீறு எழ,*  பாய் பறவை ஒன்று 
    ஏறி வீற்றிருந்தாய்*  உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.   


    எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்*  இலங்கை செற்றாய்,*  மராமரம்
    பைந்தாள் ஏழ் உருவ*  ஒரு வாளி கோத்த வில்லா,*

    கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே*  உன்னை என்னுள்ளே குழைத்த எம் 
    மைந்தா,*  வான் ஏறே*  இனி எங்குப் போகின்றதே?


    போகின்ற காலங்கள் போய காலங்கள்*  போகு காலங்கள்*  தாய் தந்தை உயிர்- 
    ஆகின்றாய்*  உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?

    பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும்*  நாதனே! பரமா,*  தண் வேங்கடம் 
    மேகின்றாய்*  தண் துழாய் விரை நாறு கண்ணியனே.          


    கண்ணித் தண் அம் துழாய் முடிக்*  கமலத் தடம் பெருங் கண்ணனைப்,*  புகழ் 
    நண்ணி தென் குருகூர்ச்*  சடகோபன் மாறன் சொன்ன,* 

    எண்ணில் சோர்வு இல் அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்,* 
    பண்ணில் பாட வல்லார்*  அவர் கேசவன் தமரே.