பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தந்தை காலில் பெரு விலங்கு*  தாள் அவிழ நள் இருட்கண்- 
    வந்த எந்தை பெருமானார்*  மருவி நின்ற ஊர்போலும்*

    முந்தி வானம் மழை பொழியும்*  மூவா உருவின் மறையாளர்* 
    அந்தி மூன்றும் அனல் ஓம்பும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.


    பாரித்து எழுந்த*  படை மன்னர் தம்மை மாள பாரதத்து- 
    தேரில் பாகன் ஆய் ஊர்ந்த*  தேவதேவன் ஊர்போலும்* 

    நீரில் பணைத்த நெடு வாளைக்கு*  அஞ்சிப் போன குருகு இனங்கள்* 
    ஆரல் கவுளோடு அருகு அணையும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன்*  சிரங்கள் ஐஇரண்டும்* 
    உம்பர் வாளிக்கு இலக்கு ஆக*  உதிர்த்த உரவோன் ஊர்போலும்*

    கொம்பில் ஆர்ந்த மாதவிமேல்*  கோதி மேய்ந்த வண்டு இனங்கள்*
    அம்பு அராவும் கண் மடவார்*  ஐம்பால் அணையும் அழுந்தூரே*.


    வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி*  அடியேன் மனம் புகுந்து*  என்- 
    உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப்*  போன காதல் பெடையோடும்* 
    அள்ளல் செறுவில் கயல் நாடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.   


    பகலும் இரவும் தானே ஆய்*  பாரும் விண்ணும் தானே ஆய்*
    நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    துகிலின் கொடியும் தேர்த் துகளும்*  துன்னி மாதர் கூந்தல்வாய்* 
    அகிலின் புகையால் முகில் ஏய்க்கும்*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    ஏடு இலங்கு தாமரைபோல்*  செவ்வாய் முறுவல் செய்தருளி* 
    மாடு வந்து என் மனம் புகுந்து*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    நீடு மாடத் தனிச் சூலம்*  போழக் கொண்டல் துளி தூவ* 
    ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.         


    மாலைப் புகுந்து மலர்அணைமேல்*  வைகி அடியேன் மனம் புகுந்து*  என்- 
    நீலக் கண்கள் பனி மல்க*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    வேலைக் கடல்போல் நெடு வீதி*  விண் தோய் சுதை வெண் மணி மாடத்து* 
    ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும்*  வீதி அழுந்தூரே*    


    வஞ்சி மருங்குல் இடை நோவ*  மணந்து நின்ற கனவகத்து*  என்- 
    நெஞ்சு நிறையக் கைகூப்பி*  நின்றார் நின்ற ஊர்போலும்*

    பஞ்சி அன்ன மெல் அடி*  நல் பாவைமார்கள்*  ஆடகத்தின்- 
    அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா*  அணி ஆர் வீதி அழுந்தூரே*.     


    என் ஐம்புலனும் எழிலும் கொண்டு*  இங்கே நெருநல் எழுந்தருளி* 
    பொன் அம் கலைகள் மெலிவு எய்த*  போன புனிதர் ஊர்போலும்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    அன்னம் பெடையோடு உடன் ஆடும்*  அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே*.


    நெல்லில் குவளை கண் காட்ட*  நீரில் குமுதம் வாய் காட்ட *
    அல்லிக் கமலம் முகம் காட்டும்*  கழனி அழுந்தூர் நின்றானை*

    வல்லிப் பொதும்பில் குயில் கூவும்*  மங்கை வேந்தன் பரகாலன்* 
    சொல்லில் பொலிந்த தமிழ்மாலை*  சொல்ல பாவம் நில்லாவே*. (2)


    கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 
    புல்பா முதலா*  புல்எறும்புஆதி ஒன்றுஇன்றியே,*

    நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 
    நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)


    நாட்டில் பிறந்தவர்*  நாரணற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    நாட்டில் பிறந்து படாதன பட்டு*  மனிசர்க்காய்,* 

    நாட்டை நலியும் அரக்கரை*  நாடித் தடிந்திட்டு,*  
    நாட்டை அளித்துஉய்யச் செய்து*  நடந்தமை கேட்டுமே?


    கேட்பார்கள் கேசவன் கீர்த்திஅல்லால்*  மற்றும் கேட்பரோ,* 
    கேட்பார் செவிசுடு*  கீழ்மை வசைவுகளே வையும்,*

    சேண்பால் பழம்பகைவன்*  சிசு பாலன்,*  திருவடி 
    தாள்பால் அடைந்த*  தன்மை அறிவாரை அறிந்துமே?  


    தன்மை அறிபவர்*  தாம் அவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    பன்மைப் படர்பொருள்*  ஆதும்இல்பாழ் நெடும்காலத்து,*

    நன்மைப் புனல்பண்ணி*  நான்முகனைப்பண்ணி தன்னுள்ளே*  
    தொன்மை மயக்கிய தோற்றிய*  சூழல்கள் சிந்தித்தே?    


    சூழல்கள் சிந்திக்கில்*  மாயன் கழல்அன்றி சூழ்வரோ,* 
    ஆழப் பெரும்புனல்*  தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்,*

    தாழப் படாமல்*  தன் பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட,* 
    கேழல் திருஉருஆயிற்றுக்*  கேட்டும் உணர்ந்துமே?


    கேட்டும் உணர்ந்தவர்*  கேசவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    வாட்டம்இலா வண்கை*  மாவலி வாதிக்க வாதிப்புண்டு,*

    ஈட்டம்கொள் தேவர்கள்*  சென்றுஇரந்தார்க்கு இடர் நீக்கிய,* 
    கோட்டுஅங்கை வாமனன்ஆய்*  செய்த கூத்துக்கள் கண்டுமே? 


    கண்டும் தெளிந்தும் கற்றார்*  கண்ணற்கு ஆளன்றி ஆவரோ,* 
    வண்டுஉண் மலர்த்தொங்கல்*  மார்க்கண்டேயனுக்கு வாழும்நாள்*

    இண்டைச் சடைமுடி*  ஈசன்உடன்கொண்டு உசாச்செல்ல,* 
    கொண்டுஅங்கு தன்னொடும் கொண்டு*  உடன்சென்றது உணர்ந்துமே? 


    செல்ல உணர்ந்தவர்*  செல்வன்தன் சீர்அன்றி கற்பரோ,* 
    எல்லை இலாத பெரும்தவத்தால்*  பல செய்மிறை,*

    அல்லல் அமரரைச் செய்யும்*  இரணியன் ஆகத்தை,* 
    மல்லல் அரிஉருஆய்*  செய்த மாயம் அறிந்துமே?   


    மாயம் அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க*  ஓர்ஐவர்க்குஆய்,*

    தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று*  சேனையை 
    நாசம் செய்திட்டு,*  நடந்த நல் வார்த்தை அறிந்துமே?


    வார்த்தை அறிபவர்*  மாயவற்கு ஆள்அன்றி ஆவரோ,* 
    போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு*  இறப்புஇவை

    பேர்த்து,*  பெரும்துன்பம் வேர்அற நீக்கி*  தன் தாளின்கீழ்ச் 
    சேர்த்து,*  அவன் செய்யும்*  சேமத்தைஎண்ணித் தெளிவுற்றே? 


    தெளிவுற்று வீவுஇன்றி*  நின்றவர்க்கு இன்பக்கதிசெய்யும்,* 
    தெளிவுற்ற கண்ணனைத்*  தென்குருகூர்ச் சடகோபன்சொல்,*

    தெளிவுற்ற ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்,*  அவர் 
    தெளிவுற்ற சிந்தையர்*  பாமரு மூவுலகத்துள்ளே   (2)