பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
    மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-

    உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
    திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
    விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்*  மெய்ய

    மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
    சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!


    மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
    தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*

    கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
    ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
    ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
    மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!


    பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
    ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*

    நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
    ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
    யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்' என்னும்*  பூமேல்-

    மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
    தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? 


    வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
    பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*

    தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
    தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? 


    உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
    மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*

    பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
    அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   


    பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
    வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*

    சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
    அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!


    சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
    நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்

    காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
    மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.


    எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
    நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
    செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*. (2)     


    என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்*  என்னை முனியாதே 
    தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    மின்னு நூலும் குண்டலமும்*  மார்பில் திருமறுவும்* 
    மன்னு பூணும் நான்கு தோளும்*  வந்து எங்கும் நின்றிடுமே*.  


    நின்றிடும் திசைக்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    வென்றி வில்லும் தண்டும் வாளும்*  சக்கரமும் சங்கமும்* 
    நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா*  நெஞ்சுள்ளும் நீங்காவே*.


    நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    பூந்தண் மாலைத் தண் துழாயும்*  பொன் முடியும் வடிவும்* 
    பாங்கு தோன்றும் பட்டும் நாணும்*  பாவியேன் பக்கத்தவே*.      


    பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று*  அன்னையரும் முனிதிர்* 
    தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    தொக்க சோதித் தொண்டை வாயும்*  நீண்ட புருவங்களும்* 
    தக்க தாமரைக் கண்ணும்*  பாவியேன் ஆவியின் மேலனவே*.     


    மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    கோலநீள் கொடி மூக்கும்*  தாமரைக் கண்ணும் கனிவாயும்* 
    நீலமேனியும் நான்கு தோளும்*  என் நெஞ்சம் நிறைந்தனவே*.  


    நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த*  நீண்ட பொன் மேனியொடும்* 
    நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்*  நேமி அங்கை உளதே*.      


    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று*  அன்னையரும் முனிதிர்* 
    மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்*  சிற்றிடையும் வடிவும்* 
    மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்*  பாவியேன் முன் நிற்குமே*.     


    முன் நின்றாய் என்று தோழிமார்களும்*  அன்னையரும் முனிதிர்* 
    மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*

    சென்னி நீள்முடி ஆதிஆய*  உலப்பு இல் அணிகலத்தன்* 
    கன்னல் பால் அமுதுஆகி வந்து*  என் நெஞ்சம் கழியானே*.     


    கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று*  அன்னை காணக்கொடாள்* 
    வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 

    குழுமித் தேவர் குழாங்கள்*  கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே* 
    எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்*  ஆர்க்கும் அறிவு அரிதே*. 


    அறிவு அரிய பிரானை*  ஆழியங்கையனையே அலற்றி* 
    நறிய நன் மலர் நாடி*  நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருக்குறுங்குடி அதன்மேல்* 
    அறியக் கற்று வல்லார் வைட்டவர்*  ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)