பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி*  அன்னை அத்தன் என் புத்திரர்பூமி* 
    வாசவார் குழலாள் என்றுமயங்கி*  மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*

    கேசவா! புருடோத்தமா! என்றும்*  கேழல்ஆகியகேடிலீ! என்றும்* 
    பேசுவார் அவர் எய்தும் பெருமை*  பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2) 


    சீயினால் செறிந்துஏறிய புண்மேல்*  செற்றல்ஏறிக் குழம்புஇருந்து*  எங்கும்- 
    ஈயினால் அரிப்புஉண்டு மயங்கி*  எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*

    வாயினால் நமோநாரணா என்று*  மத்தகத்திடைக் கைகளைக்கூப்பிப்* 
    போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்*  பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.


    சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*  சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து* 
    ஆர்வினவிலும் வாய் திறவாதே*  அந்தகாலம் அடைவதன்முன்னம்*

    மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து*  மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி* 
    ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து*  மேல்மிடற்றினை உள்எழவாங்கிக்* 
    காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    மூலம்ஆகிய ஒற்றைஎழுத்தை*  மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி* 
    வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்*  விண்ணகத்தினில் மேவலும்மாமே.  


    மடிவழி வந்து நீர்புலன்சோர*  வாயில்அட்டிய கஞ்சியும் மீண்டே* 
    கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்*  கண்உறக்கமது ஆவதன்முன்னம்*

    தொடைவழி உம்மை நாய்கள்கவரா*  சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்* 
    இடைவழியில் நீர் கூறையும் இழவீர்*  இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.  


    அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி*  ஆவி மூக்கினிற் சோதித்த பின்னை* 
    சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்*  பையவே தலை சாய்ப்பதன்முன்னம்*

    வங்கம்விட்டுஉலவும் கடற்பள்ளி மாயனை*  மதுசூதனை மார்பில்- 
    தங்க விட்டு வைத்து*  ஆவதுஓர் கருமம் சாதிப்பார்க்கு*  என்றும் சாதிக்கலாமே.


    தென்னவன் தமர் செப்பம்இலாதார்*  சேவதக்குவார் போலப்புகுந்து* 
    பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்*  பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*

    இன்னவன் இனையான் என்றுசொல்லி*  எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி* 
    மன்னவன் மதுசூதனன் என்பார்*  வானகத்துமன்றாடிகள்தாமே. 


    கூடிக்கூடி உற்றார்கள் இருந்து*  குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து* 
    பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு*  நரிப்படைக்கு ஒரு பாகுடம்போலே*

    கோடி மூடிஎடுப்பதன் முன்னம்*  கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு* 
    கூடிஆடிய உள்ளத்தர்ஆனால்*  குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.


    வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப*  வார்ந்த நீர்க்குழிக் கண்கள் மிழற்ற* 
    தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்*  தாரமும் ஒருபக்கம் அலற்ற*

    தீஒருபக்கம் சேர்வதன் முன்னம்*  செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
    மாய்*  ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு*  அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.


    செத்துப்போவதோர் போதுநினைந்து*  செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்* 
    பத்தராய்இறந்தார் பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்*

    சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்* செய்த மாலை இவைபத்தும் வல்லார்* 
    சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்* சென்ற சிந்தை பெறுவர் தாமே  (2)


    தூம்பு உடைப் பனைக் கை வேழம்*  துயர் கெடுத்தருளி*  மன்னும் 
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக்*  கடு மழை காத்த எந்தை*

    பூம் புனல் பொன்னி முற்றும்*  புகுந்து பொன் வரன்ற*  எங்கும் 
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்* கதிர் முலை சுவைத்து*   இலங்கை
    வவ்விய இடும்பை தீரக்*  கடுங் கணை துரந்த எந்தை* 

    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்*  குங்குமம் கழுவிப் போந்த* 
    தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    மாத்தொழில் மடங்கச் செற்று*  மருது இற நடந்து* வன் தாள் 
    சேத்தொழில் சிதைத்துப்*  பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை*

    நாத்தொழில் மறை வல்லார்கள்*  நயந்து அறம் பயந்த வண் கைத்* 
    தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  


    தாங்கு அரும் சினத்து வன் தாள்*  தடக் கை மா மருப்பு வாங்கி* 
    பூங்குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து*  எருது அடர்த்த எந்தை*

    மாங்கனி நுகர்ந்த மந்தி*  வந்து வண்டு இரிய*  வாழைத் 
    தீங்கனி நுகரும் நாங்கூர்த்*   திருமணிக்கூடத்தானே.  


    கருமகள் இலங்கையாட்டி* பிலங் கொள் வாய் திறந்து*  தன்மேல் 
    வரும்அவள் செவியும் மூக்கும்*  வாளினால் தடிந்த எந்தை*

    பெருமகள் பேதை மங்கை*  தன்னொடும் பிரிவு இலாத* 
    திருமகள் மருவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.    


    கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
    அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 

    ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
    திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.         


    குன்றமும் வானும் மண்ணும்*  குளிர் புனல் திங்களோடு* 
    நின்றவெம் சுடரும் அல்லா*  நிலைகளும் ஆய எந்தை*

    மன்றமும் வயலும் காவும்*  மாடமும் மணங் கொண்டு*  எங்கும் 
    தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.          


    சங்கையும் துணிவும் பொய்யும்*  மெய்யும் இத் தரணி ஓம்பும்* 
    பொங்கிய முகிலும் அல்லாப்*  பொருள்களும் ஆய எந்தை*

    பங்கயம் உகுத்த தேறல்*  பருகிய வாளை பாய*   
    செங்கயல் உகளும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.


    பாவமும் அறமும் வீடும்*  இன்பமும் துன்பம் தானும்* 
    கோவமும் அருளும் அல்லாக்*  குணங்களும் ஆய எந்தை*

    'மூவரில் எங்கள் மூர்த்தி*  இவன், என முனிவரோடு* 
    தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே. 


    திங்கள் தோய் மாட நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானை*    
    மங்கையர் தலைவன் வண் தார்க்*  கலியன் வாய் ஒலிகள் வல்லார்*

    பொங்கு நீர் உலகம் ஆண்டு*  பொன்உலகு ஆண்டு*  பின்னும் 
    வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய்*  விளங்குவாரே.    


    வீற்றிருந்து ஏழ் உலகும்*  தனிக்கோல் செல்ல, வீவுஇல்சீர்,* 
    ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை*  வெம் மா பிளந்தான் தன்னை,* 

    போற்றி என்றே கைகள் ஆரத்*  தொழுது சொல் மாலைகள்,* 
    ஏற்ற நோற்றேற்கு*  இனி என்ன குறை எழுமையுமே?   (2)


    மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள்*  உறை மார்பினன்,* 
    செய்ய கோலத் தடங் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேன்,* 
    வெய்ய நோய்கள் முழுதும்*  வியன் ஞாலத்து வீயவே. 


    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்,* 
    வீவு இல் சீரன் மலர்க் கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,*

    வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி*  மேவப்பெற்றேன்,* 
    வீவு இல் இன்பம்மிக*  எல்லை நிகழ்ந்தனன் மேவியே.   


    மேவி நின்று தொழுவார்*  வினை போக மேவும் பிரான்,* 
    தூவி அம் புள் உடையான்*  அடல் ஆழி அம்மான் தன்னை,

    நா இயலால் இசைமாலைகள் ஏத்தி*  நண்ணப் பெற்றேன்,* 
    ஆவி என் ஆவியை*  யான் அறியேன் செய்த ஆற்றையே.


    ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை,*  அமரர்தம்- 
    ஏற்றை*  எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை,* 

    மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி*  நாளும் மகிழ்வு எய்தினேன்,* 
    காற்றின் முன்னம் கடுகி*  வினை நோய்கள் கரியவே.


    கரிய மேனிமிசை*  வெளிய நீறு சிறிதே இடும்,* 
    பெரிய கோலத் தடங்கண்ணன்*  விண்ணோர் பெருமான் தன்னை,* 

    உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி*  உள்ளப்பெற்றேற்கு,* 
    அரியது உண்டோ எனக்கு*  இன்று தொட்டும் இனி என்றுமே?    


    என்றும் ஒன்று ஆகி*  ஒத்தாரும் மிக்கார்களும்,*  தன் தனக்கு -
    இன்றி நின்றானை*  எல்லா உலகும் உடையான் தன்னை,* 

    குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை*  சொல் மாலைகள்,* 
    நன்று சூட்டும் விதி எய்தினம்*  என்ன குறை நமக்கே?          


    நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்*  இன்பனை,*  ஞாலத்தார்- 
    தமக்கும்*  வானத்தவர்க்கும் பெருமானை,*  தண் தாமரை- 

    சுமக்கும்*  பாதப் பெருமானை*  சொல்மாலைகள் சொல்லுமாறு- 
    அமைக்க வல்லேற்கு*  இனி யாவர் நிகர் அகல் வானத்தே?


    வானத்தும் வானத்துள் உம்பரும்*  மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் 
    தானத்தும்,*  எண் திசையும் தவிராது*  நின்றான் தன்னை,*  

    கூனல் சங்கத் தடக்கையவனை*  குடம் ஆடியை 
    வானக் கோனை,*  கவி சொல்ல வல்லேற்கு*  இனி மாறுஉண்டே?   


    உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்*  கிடந்தும் நின்றும்,* 
    கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும்*  மணம் கூடியும்,* 

    கண்ட ஆற்றால் தனதே*  உலகு என நின்றான் தன்னை,* 
    வண் தமிழ் நூற்க நோற்றேன்*  அடியார்க்கு இன்ப மாரியே.


    மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,* 
    வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,* 

    காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,* 
    வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.