பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
    பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 

    வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
    கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)


    வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட* 
    மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை* 

    இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்* 
    குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்*  ஆனாயரும் ஆநிரையும் அலறி* 
    எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப*  இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை* 

    தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்*  புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று* 
    கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்*  கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்* 
    அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு*  அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை* 

    கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*  கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி*  எங்கும்- 
    குடவாய்ப் பட நின்று மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்*  அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்* 
    ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை*  இடவன் எழ வாங்கி எடுத்த மலை*

    கானக் களி-யானை தன் கொம்பு இழந்து*  கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்* 
    கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    செப்பாடு உடைய திருமால் அவன் தன்*  செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*  
    கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்*  காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*

    எப்பாடும் பரந்து இழி தெள் அருவி*  இலங்கு மணி முத்துவடம் பிறழக்* 
    குப்பாயம் என நின்று காட்சிதரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்*  படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்* 
    தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*  தாமோதரன் தாங்கு தடவரைதான்* 

    அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த*  அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்* 
    குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்*  சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு* 
    நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*  நாராயணன் முன் முகம் காத்த மலை* 

    இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்*  இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்* 
    கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*


    வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்*  வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை* 
    தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்*  தாமோதரன் தாங்கு தடவரை தான்* 

    முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்*  முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்* 
    கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்*  கோலமும் அழிந்தில வாடிற்று இல* 
    வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல*  மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*

    முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்*  முன் நெற்றி நரைத்தன போல*  எங்கும்- 
    குடி ஏறி இருந்து மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*


    அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய*  
    குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*

    திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* 
    பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)


    வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்* 
    சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே* 

    அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*
    அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2)  


    நீலத்தடவரை*  மாமணி நிகழக் கிடந்ததுபோல்*
    அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*

    சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட*  மழை முகில் போன்று எழுந்து*
    எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!


    நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது* 
    இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*

    செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*
    கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே! 


    மின்னின் மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்துவந்து*
    நின்மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*

    புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*
    எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!


    நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுதுஏத்தும்*
    என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*

    பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*
    எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே! 


    கந்த மாமலர் எட்டும்இட்டு*  நின்காமர் சேவடி கைதொழுது எழும்* 
    புந்தியேன் மனத்தே*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    சந்தி வேள்வி சடங்கு நான்மறை*  ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்* 
    அந்தணாளர் அறா*  அணி ஆலி அம்மானே!


    உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து*  உன் அடியேன் மனம் புகுந்த*
    அப்புலவ! புண்ணியனே!*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

    நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்*  தண் தாமரை மலரின்மிசை*
    மலி அலவன் கண்படுக்கும்*  அணி ஆலி அம்மானே!


    சங்கு தங்கு தடங் கடல் கடல்*  மல்லையுள் கிடந்தாய்*
    அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்*  இனிப் போயினால் அறையோ!*

    கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி*  இன் இள வண்டு போய்*
    இளந்தெங்கின் தாது அளையும்*  திருவாலி அம்மானே!


    ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*
    ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!* 

    நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*
    மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!


    புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை* 
    கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*

    நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*
    தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)    


    மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை*  முதலைச் சிறைப்பட்டு நின்ற,* 
    கைம்மாவுக்கு அருள் செய்த*  கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,* 

    எம்மானைச் சொல்லிப் பாடி*  எழுந்தும் பறந்தும் துள்ளாதார்,* 
    தம்மாம் கருமம் என் சொல்லீர்*  தண்கடல் வட்டத்து உள்ளீரே! (2)


    தண்கடல் வட்டத்து உள்ளாரைத்*  தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்,* 
    திண்கழல்கால் அசுரர்க்குத்*  தீங்கு இழைக்கும் திருமாலைப்,* 

    பண்கள் தலைக்கொள்ளப் பாடி* பறந்தும் குனித்தும் உழலாதார்,* 
    மண்கொள் உலகில் பிறப்பார்*  வல்வினை மோத மலைந்தே.    


    மலையை எடுத்து கல்மாரி*  காத்து*  பசுநிரை தன்னைத்,* 
    தொலைவு தவிர்த்த பிரானைச்*  சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்,*

    தலையினோடு ஆதனம் தட்டத்*  தடுகுட்டமாய்ப் பறவாதார்,* 
    அலை கொள் நரகத்து அழுந்திக்*  கிடந்து உழைக்கின்ற வம்பரே.


    வம்பு அவிழ் கோதைபொருட்டா*  மால்விடை ஏழும் அடர்த்த,* 
    செம்பவளத் திரள் வாயன்*  சிரீதரன் தொல்புகழ் பாடி,* 

    கும்பிடு நட்டம் இட்டு ஆடி*  கோகு உகட்டுண்டு உழலாதார்,* 
    தம்பிறப்பால் பயன் என்னே*  சாது சனங்களிடையே? 


    சாது சனத்தை நலியும்*  கஞ்சனைச் சாதிப்பதற்கு,* 
    ஆதி அம் சோதி உருவை*  அங்கு வைத்து இங்குப் பிறந்த,,*

    வேத முதல்வனைப் பாடி*  வீதிகள் தோறும் துள்ளாதார்,* 
    ஓதி உணர்ந்தவர் முன்னா*  என் சவிப்பார் மனிசரே?       


    மனிசரும் மற்றும் முற்றும் ஆய்*  மாயப் பிறவி பிறந்த,* 
    தனியன் பிறப்பிலி தன்னை*  தடங்கடல் சேர்ந்த பிரானை,* 

    கனியை கரும்பின் இன் சாற்றை*  கட்டியை தேனை அமுதை,* 
    முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்*  முழுது உணர் நீர்மையினார.


    நீர்மை இல் நூற்றுவர் வீய*  ஐவர்க்கு அருள்செய்து நின்று,* 
    பார்மல்கு சேனை அவித்த*  பரஞ்சுடரை நினைந்து ஆடி* 

    நீர்மல்கு கண்ணினர் ஆகி*  நெஞ்சம் குழைந்து நையாதே,* 
    ஊன் மல்கி மோடு பருப்பார்*  உத்தமர்கட்கு என் செய்வாரே?  


    வார்புனல் அம் தண் அருவி*  வடதிருவேங்கடத்து எந்தை,* 
    பேர்பல சொல்லிப் பிதற்றி*  பித்தர் என்றே பிறர்கூற,* 

    ஊர்பல புக்கும் புகாதும்*  உலோகர் சிரிக்க நின்று ஆடி,* 
    ஆர்வம் பெருகிக் குனிப்பார்*  அமரர் தொழப்படுவாரே. 


    அமரர் தொழப்படுவானை*  அனைத்து உலகுக்கும் பிரானை,* 
    அமர மனத்தினுள் யோகு புணர்ந்து*  அவன் தன்னோடு ஒன்று ஆக,* 

    அமரத் துணிய வல்லார்கள் ஒழிய*  அல்லாதவர் எல்லாம்,* 
    அமர நினைந்து எழுந்து ஆடி*  அலற்றுவதே கருமமே.      


    கருமமும் கரும பலனும் ஆகிய*  காரணன் தன்னை,* 
    திருமணி வண்ணனை செங்கண் மாலினை*  தேவபிரானை,*

    ஒருமை மனத்தினுள் வைத்து*  உள்ளம் குழைந்து எழுந்து ஆடி,* 
    பெருமையும் நாணும் தவிர்ந்து*  பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.


    தீர்ந்த அடியவர் தம்மைத்*  திருத்திப் பணிகொள்ளவல்ல,* 
    ஆர்ந்த புகழ் அச்சுதனை*  அமரர் பிரானை எம்மானை,*

    வாய்ந்த வளவயல்சூழ்*  தண் வளங் குருகூர்ச்சடகோபன்,* 
    நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்து*  அருவினை நீறு செய்யுமே. (2)