பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    பின்னை மணாளனை*  பேரிற் கிடந்தானை* 
    முன்னை அமரர்* முதற் தனி வித்தினை* 

    என்னையும் எங்கள்*  குடி முழுது ஆட்கொண்ட* 
    மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்! (2)  


    பேயின் முலை உண்ட*  பிள்ளை இவன் முன்னம்* 
    மாயச் சகடும்*  மருதும் இறுத்தவன்* 

    காயாமலர் வண்ணன்*  கண்ணன் கருங்குழல்* 
    தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்! 


    திண்ணக் கலத்திற்*  திரை உறிமேல் வைத்த* 
    வெண்ணெய் விழுங்கி*  விரைய உறங்கிடும்*

    அண்ணல் அமரர்*  பெருமானை ஆயர்தம்* 
    கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்!


    பள்ளத்தில் மேயும்*  பறவை உருக் கொண்டு* 
    கள்ள அசுரன்*  வருவானைத் தான் கண்டு* 

    புள் இது என்று*  பொதுக்கோ வாய் கீண்டிட்ட* 
    பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்!


    கற்றினம் மேய்த்துக்*  கனிக்கு ஒரு கன்றினைப்* 
    பற்றி எறிந்த*  பரமன் திருமுடி* 

    உற்றன பேசி*  நீ ஓடித் திரியாதே* 
    அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    கிழக்கிற் குடி மன்னர்*  கேடு இலாதாரை* 
    அழிப்பான் நினைந்திட்டு*  அவ் ஆழிஅதனால்* 

    விழிக்கும் அளவிலே*  வேர் அறுத்தானைக்* 
    குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்! 
    கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    பிண்டத் திரளையும்*  பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்* 
    உண்டற்கு வேண்டி*  நீ ஓடித் திரியாதே*

    அண்டத்து அமரர்*  பெருமான் அழகு அமர்* 
    வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்! 
    மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    உந்தி எழுந்த*  உருவ மலர்தன்னில்*  
    சந்தச் சதுமுகன்*  தன்னைப் படைத்தவன்* 

    கொந்தக் குழலைக்*  குறந்து புளி அட்டித்* 
    தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்! 
    தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்!


    மன்னன்தன் தேவிமார்*  கண்டு மகிழ்வு எய்த* 
    முன் இவ் உலகினை*  முற்றும் அளந்தவன்*

    பொன்னின் முடியினைப்* பூ அணைமேல் வைத்துப்* 
    பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!


    கண்டார் பழியாமே*  அக்காக்காய் கார்வண்ணன்!* 
    வண்டு ஆர் குழல்வார*  வா என்ற ஆய்ச்சி சொல்*

    விண் தோய் மதில்*  வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்* 
    கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே! (2)


    பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை*  படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
    எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே*  முளைத்து எழுந்த தீம் கரும்பினை* 

    போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை*  புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை* 
    கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே.  (2)


    பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு*  பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி  மாண்டு*
    அவத்தம் போகாதே வம்மின்*  எந்தை என் வணங்கப்படுவானை*

    கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்* 
    காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்*  கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)       


    உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*  உலகு உய்ய நின்றானை* 
    அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை*  கன்று மேய்த்து  விளையாட வல்லானை வரைமீ கானில்* 

    தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்*  தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்* 
    கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேய்த்தாயை முலைஉண்ட பிள்ளைதன்னை* பிணைமருப்பின் கருங்களிற்றை பிணைமான்நோக்கின்* 
    ஆய்த்தாயர் தயிர்வெண்ணெய் அமர்ந்தகோவை*  அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே கோத்தானை*

    குடம்ஆடு கூத்தன் தன்னை*  கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ*  பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
    இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,* 

    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று*  அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


    கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி*  கிளர்பொறிய மறிதிரிய அதனின்பின்னே படர்ந்தானை*
    படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானை*  பார்இடத்தை எயிறுகீற இடந்தானை*

    வளைமருப்பின் ஏனம்ஆகி*  இருநிலனும் பெருவிசும்பும் எய்தாவண்ணம் கடந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பேணாத வலிஅரக்கர் மெலிய அன்று*  பெருவரைத் தோள்இறநெரித்து அன்று அவுணர்கோனைப்* 
    பூண்ஆகம் பிளவுஎடுத்த போர்வல்லோனை*   பொருகடலுள் துயில்அமர்ந்த புள்ஊர்தியை* 

    ஊண்ஆகப் பேய்முலைநஞ்சு உண்டான் தன்னை*  உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்* 
    காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்*  கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    பெண்ணாகி இன்அமுதம் வஞ்சித்தானை*  பிரைஎயிற்று அன்றுஅடல்அரியாய்ப் பெருகினானை* 
    தண்ணார்ந்த  வார்புனல்சூழ் மெய்யம்என்னும்*  தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி* 

    எண்ணானை எண்இறந்த புகழினானை*  இலங்குஒளிசேர் அரவிந்தம் போன்றுநீண்ட கண்ணானைக்*
    கண்ணாரக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.  


    தொண்டு ஆயார் தாம்பரவும் அடியினானை*  படிகடந்த தாளாளற்கு ஆள்ஆய் உய்தல் விண்டானை*
    தென்இலங்கை அரக்கர்வேந்தை*  விலங்குஉண்ண வலங்கைவாய்ச் சரங்கள்ஆண்டு* 

    பண்டுஆய வேதங்கள் நான்கும்*  ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம்ஆறும் கண்டானைத்*
    தொண்டனேன் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே. 


    படநாகத்து அணைக்கிடந்து அன்று அவுணர்கோனைப்*  படவெகுண்டு மருதுஇடைபோய் பழனவேலித்* 
    தடம்ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்*  தாமரைக்கண் துயில்அமர்ந்த தலைவன் தன்னைக்* 

    கடம் ஆரும் கருங் களிறு வல்லான்*  வெல்போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப்பாடல்* 
    திடம்ஆக இவைஐந்தும்ஐந்தும் வல்லார்*  தீவினையை முதல்அரிய வல்லார்தாமே.  


    அம் தாமத்து அன்பு செய்து*  என் ஆவி சேர் அம்மானுக்கு,* 
    அம் தாமம் வாழ் முடி சங்கு*  ஆழி நூல் ஆரம் உள,*

    செந்தாமரைத்தடம் கண்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    செந்தாமரை அடிகள்*  செம்பொன் திரு உடம்பே.


    திரு உடம்பு வான் சுடர்*  செந்தாமரை கண் கை கமலம்,* 
    திரு இடமே மார்வம்*  அயன் இடமே கொப்பூழ்,* 

    ஒருவு இடமும்*  எந்தை பெருமாற்கு அரனே ஓ,* 
    ஒருவு இடம் ஒன்று இன்றி*  என்னுள் கலந்தானுக்கே.


    என்னுள் கலந்தவன்*  செங்கனி வாய் செங்கமலம்,* 
    மின்னும் சுடர் மலைக்குக்*  கண் பாதம் கை கமலம்,*

    மன்னும் முழு ஏழ் உலகும்*  வயிற்றின் உள,* 
    தன்னுள் கலவாதது*  எப் பொருளும் தான் இலையே.


    எப் பொருளும் தான் ஆய்*  மரகதக் குன்றம் ஒக்கும்.* 
    அப்பொழுதைத் தாமரைப்பூக்*  கண் பாதம் கை கமலம்,*

    எப்பொழுதும் நாள் திங்கள்*  ஆண்டு ஊழி ஊழிதொறும்,* 
    அப்பொழுதைக்கு அப்பொழுது*  என் ஆரா அமுதமே.      


    ஆரா அமுதமாய்*  அல் ஆவியுள் கலந்த,* 
    கார் ஆர் கருமுகில் போல்*  என் அம்மான் கண்ணனுக்கு,*

    நேரா வாய் செம்பவளம்*  கண் பாதம் கை கமலம்,* 
    பேர் ஆரம் நீள் முடி நாண்,*  பின்னும் இழை பலவே.


    பலபலவே ஆபரணம்*  பேரும் பலபலவே,* 
    பலபலவே சோதி*  வடிவு பண்பு எண்ணில்,*

    பலபல கண்டு உண்டு*  கேட்டு உற்று மோந்து இன்பம்,* 
    பலபலவே ஞானமும்*  பாம்பு அணை மேலாற்கேயோ.        


    பாம்பு அணைமேல் பாற்கடலுள்*  பள்ளி அமர்ந்ததுவும்,* 
    காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்*  ஏறு உடன் ஏழ் செற்றதுவும்,*

    தேம் பணைய சோலை*  மராமரம் ஏழ் எய்ததுவும்,* 
    பூம் பிணைய தண் துழாய்ப்*  பொன் முடி அம் போர் ஏறே.


    பொன் முடி அம் போர் ஏற்றை*  எம்மானை நால் தடம் தோள்,* 
    தன் முடிவு ஒன்று இல்லாத*  தண் துழாய் மாலையனை,* 

    என் முடிவு காணாதே*  என்னுள் கலந்தானை,* 
    சொல்முடிவு காணேன் நான்*  சொல்லுவது என் சொல்லீரே.   


    சொல்லீர் என் அம்மானை*  என் ஆவி ஆவிதனை,* 
    எல்லை இல் சீ* ர் என் கருமாணிக்கச் சுடரை,*

    நல்ல அமுதம்*  பெறற்கு அரிய வீடும் ஆய்,* 
    அல்லி மலர் விரை ஒத்து*  ஆண் அல்லன் பெண் அலனே.


    ஆண் அல்லன் பெண் அல்லன்*  அல்லா அலியும் அல்லன்,* 
    காணலும் ஆகான்*  உளன் அல்லன் இல்லை அல்லன்,*

    பேணுங்கால் பேணும்*  உரு ஆகும் அல்லனும் ஆம்,* 
    கோணை பெரிது உடைத்து*  எம் பெம்மானைக் கூறுதலே.  


    கூறுதல் ஒன்று ஆராக்*  குடக் கூத்த அம்மானைக்,* 
    கூறுதலே மேவிக்*  குருகூர்ச் சடகோபன்,*

    கூறின அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
    கூறுதல் வல்லார் உளரேல்*  கூடுவர் வைகுந்தமே.