பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பூங்கோதை ஆய்ச்சி*  கடைவெண்ணெய் புக்குஉண்ண,* 
    ஆங்குஅவள் ஆர்த்துப்*  புடைக்க புடையுண்டு*

    ஏங்கி இருந்து*  சிணுங்கி விளையாடும்*
    ஓங்குஓத வண்ணனே! சப்பாணி*ஒளிமணி வண்ணனே! சப்பாணி  (2)


    தாயர் மனங்கள் தடிப்ப*  தயிர்நெய்உண்டு 
    ஏய்எம்பிராக்கள்*  இருநிலத்து எங்கள்தம்*

    ஆயர் அழக*  அடிகள்*  அரவிந்த-
    வாயவனே கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி


    தாம்மோர் உருட்டி*  தயிர்நெய் விழுங்கிட்டு* 
    தாமோ தவழ்வர்என்று*  ஆய்ச்சியர் தாம்பினால்*

    தாம்மோதரக்கையால்*  ஆர்க்க தழும்புஇருந்த*
    தாமோதரா! கொட்டாய் சப்பாணி!*  தாமரைக் கண்ணனே! சப்பாணி


    பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஅங்கு அயல்இடத்து*
    உற்றார் ஒருவரும் இன்றி*  உலகினில்,*

    மற்றாரும் அஞ்சப்போய்*  வஞ்சப்பெண் நஞ்சுஉண்ட*
    கற்றாயனே! கொட்டாய் சப்பாணி!*  கார்வண்ணனே! கொட்டாய் சப்பாணி   


    சோத்து என நின்னைத்*  தொழுவன் வரம் தர,* 
    பேய்ச்சி முலைஉண்ட பிள்ளாய்,*  பெரியன-

    ஆய்ச்சியர்*  அப்பம் தருவர்*  அவர்க்காகச்-
    சாற்றிஓர் ஆயிரம் சப்பாணி!*  தடங்கைகளால் கொட்டாய் சப்பாணி   


    கேவலம் அன்று*  உன்வயிறு வயிற்றுக்கு*
    நான் அவல் அப்பம் தருவன்*  கருவிளைப்-

    பூஅலர் நீள்முடி*  நந்தன்தன் போர்ஏறே,* 
    கோவலனே! கொட்டாய் சப்பாணி!*  குடம்ஆடீ! கொட்டாய் சப்பாணி.  


    புள்ளினை வாய்பிளந்து*  பூங்குருந்தம் சாய்த்து,* 
    துள்ளி விளையாடி*  தூங்குஉறி வெண்ணெயை,*

    அள்ளிய கையால்*  அடியேன் முலைநெருடும்*
    பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி!*  பேய்முலை உண்டானே! சப்பாணி


    யாயும் பிறரும்*  அறியாத யாமத்து,* 
    மாய வலவைப்*  பெண் வந்து முலைதர,*

    பேய்என்று அவளைப்*  பிடித்து உயிர் உண்ட,*
    வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.


    கள்ளக் குழவிஆய்*  காலால் சகடத்தைத்*
    தள்ளி உதைத்திட்டு*  தாய்ஆய் வருவாளை,*

    மெள்ளத் தொடர்ந்து*  பிடித்து ஆர்உயிர்உண்ட,*
    வள்ளலே! கொட்டாய் சப்பாணி!*  மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி 


    கார்ஆர் புயல்கைக்*  கலிகன்றி மங்கையர்கோன்,* 
    பேராளன் நெஞ்சில்*  பிரியாது இடம்கொண்ட*

    சீராளா செந்தாமரைக் கண்ணா!*  தண்துழாய்த்*
    தார்ஆளா, கொட்டாய் சப்பாணி!*  தடமார்வா கொட்டாய் சப்பாணி.  (2)


    கண்ணன் கழல்இணை*  நண்ணும் மனம்உடையீர்*

    எண்ணும் திருநாமம்*  திண்ணம் நாரணமே.  (2)


    நாரணன் எம்மான்*  பாரணங்காளன்*

    வாரணம் தொலைத்த*  காரணன் தானே.  


    தானே உலகுஎல்லாம்*  தானே படைத்துஇடந்து*

    தானே உண்டுஉமிழ்ந்து*  தானே ஆள்வானே.


    ஆள்வான் ஆழிநீர்க்*  கோள்வாய் அரவுஅணையான்*

    தாள்வாய் மலர்இட்டு*  நாள்வாய் நாடீரே. 


    நாடீர் நாள்தோறும்*  வாடா மலர்கொண்டு*

    பாடீர் அவன்நாமம்*  வீடே பெறலாமே.   


    மேயான் வேங்கடம்*  காயாமலர் வண்ணன்*

    பேயார் முலைஉண்ட*  வாயான் மாதவனே.   (2)


    மாதவன் என்றுஎன்று*  ஓத வல்லீரேல்*

    தீதுஒன்றும் அடையா*  ஏதம் சாராவே.


    சாரா ஏதங்கள்*  நீரார் முகில்வண்ணன்*

    பேர் ஆர் ஓதுவார்*  ஆரார் அமரரே.


    அமரர்க்கு அரியானை*  தமர்கட்கு எளியானை*

    அமரத் தொழுவார்கட்கு*  அமரா வினைகளே.


    வினைவல் இருள்என்னும்*  முனைகள் வெருவிப்போம்*

    சுனை நல் மலர்இட்டு*  நினைமின் நெடியானே.


    நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

    நொடி ஆயிரத்துஇப்பத்து  அடியார்க்கு அருள்பேறே  (2)