பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    தன்முகத்துச் சுட்டி*  தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
    பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்*  புழுதி அளைகின்றான்*

    என்மகன் கோவிந்தன்*  கூத்தினை இள மா மதீ!* 
    நின்முகம் கண்ணுள ஆகில்*  நீ இங்கே நோக்கிப் போ (2)


    என் சிறுக்குட்டன்*  எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
    தன் சிறுக்கைகளால்*  காட்டிக் காட்டி அழைக்கின்றான்*

    அஞ்சன வண்ணனோடு*  ஆடல் ஆட உறுதியேல்*
    மஞ்சில் மறையாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா 


    சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*
    எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

    வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*
    கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா      


    சக்கரக் கையன்*  தடங்கண்ணால் மலர விழித்து*
    ஒக்கலைமேல் இருந்து*  உன்னையே சுட்டிக் காட்டும் காண்*

    தக்கது அறிதியேல்*  சந்திரா! சலம் செய்யாதே*
    மக்கட் பெறாத*  மலடன் அல்லையேல் வா கண்டாய்


    அழகிய வாயில்*  அமுத ஊறல் தெளிவுற*
    மழலை முற்றாத இளஞ்சொல்லால்*  உன்னைக் கூகின்றான்*

    குழகன் சிரீதரன்*  கூவக் கூவ நீ போதியேல்*
    புழையில ஆகாதே*  நின்செவி புகர் மா மதீ!


    தண்டொடு சக்கரம்*  சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
    கண் துயில்கொள்ளக் கருதிக்*  கொட்டாவி கொள்கின்றான்*

    உண்ட முலைப்பால் அறா கண்டாய்*  உறங் காவிடில்*
    விண்தனில் மன்னிய*  மா மதீ! விரைந்து ஓடி வா


    பாலகன் என்று*  பரிபவம் செய்யேல்*  பண்டு ஓர் நாள்
    ஆலின் இலை வளர்ந்த*  சிறுக்கன் அவன் இவன்*

    மேல் எழப் பாய்ந்து*  பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
    மாலை மதியாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை*  இகழேல் கண்டாய்*
    சிறுமையின் வார்த்தையை*  மாவலியிடைச் சென்று கேள்*

    சிறுமைப் பிழை கொள்ளில்*  நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
    நிறைமதீ! நெடுமால்*  விரைந்து உன்னைக் கூகின்றான்


    தாழியில் வெண்ணெய்*  தடங்கை ஆர விழுங்கிய* 
    பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்*  உன்னைக் கூகின்றான்* 

    ஆழிகொண்டு உன்னை எறியும்*  ஐயுறவு இல்லை காண்* 
    வாழ உறுதியேல்*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா


    மைத்தடங் கண்ணி*  யசோதை தன்மகனுக்கு*  இவை- 
    ஒத்தன சொல்லி*  உரைத்த மாற்றம்*  ஒளிபுத்தூர்-

    வித்தகன் விட்டுசித்தன்*  விரித்த தமிழ் இவை* 
    எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*  இடர் இல்லையே  (2)      


    கலையும் கரியும் பரிமாவும்*  திரியும் கானம் கடந்துபோய்* 
    சிலையும் கணையும் துணையாகச்*  சென்றான் வென்றிச் செருக்களத்து* 

    மலை கொண்டு அலை நீர் அணை கட்டி*  மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்* 
    தலை பத்து அறுத்து உகந்தான்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    கடம் சூழ் கரியும் பரிமாவும்*  ஒலி மாத் தேரும் காலாளும்* 
    உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை*  பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்* 

    இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்*  இமையோர் வணங்க மணம் கமழும்* 
    தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    உலவு திரையும் குல வரையும்*  ஊழி முதலா எண் திக்கும்* 
    நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்*  வென்றி விறல் ஆழி வலவன்* 

    வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்* 
    சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஊரான் குடந்தை உத்தமன்*  ஒரு கால் இரு கால் சிலை வளையத்* 
    தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்*  வற்றா வரு புனல் சூழ் பேரான்* 

    பேர் ஆயிரம் உடையான்*  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்* 
    தாரா வயல் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற*  அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* 
    விளங்கு சுடர் ஆழி*  விண்ணோர் பெருமான் நண்ணார்முன்* 

    கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்*  கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
    தடம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    தாய் ஆய் வந்த பேய் உயிரும்*  தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்* 
    தூய வரி உருவின் குறளாய்ச் சென்று*  மாவலியை ஏயான் இரப்ப* 

    மூவடி மண் இன்றே தா என்று*  உலகு ஏழும் தாயான்*
    காயா மலர் வண்ணன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்*  அரி ஆய் பரிய இரணியனை* 
    ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த*  ஒருவன் தானே இரு சுடர் ஆய்* 

    வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்*  மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்* 
    தான் ஆய் தானும் ஆனான் தன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!


    வெந்தார் என்பும் சுடு நீறும்*  மெய்யில் பூசி கையகத்து*
    ஓர் சந்து ஆர் தலைகொண்டு*  உலகு ஏழும் திரியும்*  பெரியோன் தான் சென்று*

    என் எந்தாய்! சாபம் தீர் என்ன*  இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
    சந்து ஆர் பொழில் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   


    தொண்டு ஆம் இனமும் இமையோரும்*  துணை நூல் மார்வின் அந்தணரும்* 
    அண்டா எமக்கே அருளாய் என்று*  அணையும் கோயில் அருகு எல்லாம்* 

    வண்டு ஆர் பொழிலின் பழனத்து*  வயலின் அயலே கயல் பாயத்* 
    தண் தாமரைகள் முகம் அலர்த்தும்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  


    தாரா ஆரும் வயல் சூழ்ந்த*  சாளக்கிராமத்து அடிகளை* 
    கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்*  அமரர் நல் நாட்டு அரசு ஆளப்* 
    பேர் ஆயிரமும் ஓதுமின்கள்*  அன்றி இவையே பிதற்றுமினே*


    வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 
    களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 

    தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 
    இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.


    நினைந்து நைந்து உள் கரைந்து உருகி*  இமையோர் பலரும் முனிவரும்* 
    புனைந்த கண்ணி நீர் சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*

    நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்துஆய் முதலில் சிதையாமே* 
    மனம் செய் ஞானத்து உன் பெருமை*  மாசூணாதோ? மாயோனே!


    மா யோனிகளாய் நடை கற்ற*  வானோர் பலரும் முனிவரும்* 
    நீ யோனிகளைப் படை என்று*  நிறை நான்முகனைப் படைத்தவன்*

    சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால் 
    தாயோன்*  எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்*  தான் ஓர் உருவனே.


    தான் ஓர் உருவே தனிவித்தாய்*  தன்னின் மூவர் முதலாய* 
    வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்*

    தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி*  அதனுள் கண்வளரும்* 
    வானோர் பெருமான் மா மாயன்*  வைகுந்தன் எம் பெருமானே.


    மானேய் நோக்கி மடவாளை*  மார்பில் கொண்டாய்! மாதவா!* 
    கூனே சிதைய உண்டை வில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*

    வான் ஆர் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்*  உன்- 
    தேனே மலரும் திருப்பாதம்*  சேருமாறு வினையேனே.


    வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!* 
    மனை சேர் ஆயர் குல முதலே!*  மா மாயனே! மாதவா!*

    சினை ஏய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!* 
    இனையாய் இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.  


    அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை* 
    கடி சேர் தண் அம் துழாய்க்*  கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*

    செடி ஆர் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை* 
    அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? 


    உண்டாய் உலகு ஏழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு* 
    உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்*  உவலை ஆக்கை நிலை எய்தி*

    மண் தான் சோர்ந்தது உண்டேலும்*  மனிசர்க்கு ஆகும் பீர்*  சிறிதும்- 
    அண்டாவண்ணம் மண் கரைய*  நெய் ஊண் மருந்தோ? மாயோனே!  


    மாயோம் தீய அலவலைப்*  பெரு மா வஞ்சப் பேய் வீயத்* 
    தூய குழவியாய் விடப் பால் அமுதா*  அமுது செய்திட்ட-

    மாயன் வானோர் தனித் தலைவன்*  மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்- 
    தாயோன் தம்மான் என் அம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.


    சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து*  மாயப் பற்று அறுத்து* 
    தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்*  திருத்தி வீடு திருத்துவான்*

    ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி*  அகலம் கீழ் மேல் அளவு இறந்து* 
    நேர்ந்த உருவாய் அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே!


    மாலே மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 
    மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 
    பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே.